July 19, 2026

Seithi Saral

Tamil News Channel

சிங்கப்பெண் படை மூலம் 7 நாட்களில் 390 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை

1 min read

Immediate action taken on 390 complaints within 7 days through the ‘Singappen’ (Lioness) squad.

18.7.2026
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தொடர் தீவிர நடவடிக்கைகள் மூலம் 7 நாட்களில் 390 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மாநிலம் முழுவதும் துரிதமான கள் நடவடிக்கைகள், சமூக பங்களிப்புடன் கூடிய காவல் பணிகள் மற்றும் விழிப்புணர்வு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

சம்பவ கடந்த 10.07.2026 முதல் 16.07.2026 வரை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் மாவட்டக்களப்பிரிவுகள் 390 புகார்களுக்கு இடத்திலேயே உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, 29 குற்ற வழக்குகள் பதிவு செய்ய வழிவகுத்துள்ளன. மேலும், காணாமல் போன 9 பெண்கள் மற்றும் 9 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதே காலகட்டத்தில், பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் 3.711 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதுடன், குற்றங்கள் நிகழவாய்ப்புள்ள 9,572 இடங்களில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், அறிவுசார் குறைபாடுடைய 8 நபர்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வுக்கு அளிக்கப்பட்டது. 8 குழந்தைத்திருமணங்கள் தடுக்கப்பட்டு, 44 பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.

இந்தக்காலகட்டத்தில், தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும் சென்னை மாநகரில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை களப்பிரிவினர் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு பாதுகாப்பு வழங்கி, துரிதமான நடவடிக்கைகள் மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும், சட்டம் ஒழுங்கு காவல்துறையினருக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.

மேலும், அரியலூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், திருப்பூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு, இணைய வழி அத்து மீறல், மிரட்டல் மற்றும் பெண்களுக்கு எதிரான பிற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

மேலும், மயிலாடுதுறை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் போது மாணவிகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்து உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் சிறுமி ஒருவரின் புகாரின் பேரில் சிறுமியை தவறாக சித்தரித்த புகைப்படங்களை பொது வெளியில் வெளியிடுவதாக மிரட்டிய நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை துரிதமான கள நடவடிக்கைகள், சமூக பங்களிப்புடன் கூடிய காவல் பணிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் தனது சேவையை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகிறது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *