July 18, 2026

Seithi Saral

Tamil News Channel

சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு விழா தொடங்கியது

1 min read

The Aadi Tapasu festival began at the Sankaranarayana Swamy Temple

18.7.2026
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணசுவாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதனை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமான் கோமதி அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார். இத்தகைய நிகழ்வானது. ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் தொடர்ந்து 12 நாட்கள் இவ்விழா நடைபெறும்.

இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோமதி அம்பாள் சிவிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து கொடிபட்டம் வீதி உலா நடந்தது.

காலை 7.05 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை கோமதி அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் இரவு மண்டகப்படியில் இருந்து வெவ்வேறு வாகனங்களில் கோமதி அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் 9-ம் திருநாளான வருகிற 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. ஆடித்தபசு 11-ம் திருநாளான 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணனராக காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது. அன்று காலை 9.30 மணிக்கு கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்கார பரிவட்டம் சாத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் தங்கச்சப்பரத்தில் தவக்கோலத்தில் கோமதி அம்மன் தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டகப்படியில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 6.05 மணிக்கு மேல் சிவபெருமான் அரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் சங்கர நாராயணசுவாமியாக ரிஷப வாகனத்தில் கோமதி அம்மனுக்கு தபசு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், அன்று இரவு 11.45 மணிக்கு மேல் சங்கரலிங்க சுவாமியாக யானை வாகனத்தில் கோமதி அம்மனுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து 29-ந் தேதி (புதன்கிழமை) சுவாமி அம்பாள் இரண்டு சப்பரங்களில் ஒரே நேரத்தில் சப்தா வர்ணத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

கொடியேற்ற விழாவில் தென்காசி எம்.பி. ராணி ஸ்ரீகுமார், அ.தி.மு.க. மாநில மகளிர் அணி துணை செயலாளர் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. திலீபன் ஜெய்சங்கர், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் கவுசல்யா வெங்கடேஷ், நகராட்சி கமிஷனர் லட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *