வெப்பத்தால் தூக்கத்தை இழக்கும் மக்கள்- சென்னை முதலிடம்
1 min read
People losing sleep due to heat – Chennai ranks first.
27.7.2026
உலக அளவில் தூங்கா நகரம் என பெயர் பெற்ற நகராக தமிழகத்தின் சென்னை முதல் இடம் பிடித்து உள்ளது.
வெப்பம் சார்ந்த விசயங்களால் மக்கள் தூக்கம் இழந்து பாதிக்கப்படும் நாடுகளின் வரிசையில், இந்தியா முக்கிய இடம் பிடித்துள்ளது. நாட்டில் பல்வேறு நகரங்கள் இதனால் பாதிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. தென்னிந்தியாவில் ஆண்டுக்கு, 78 முதல் 91 மணிநேரம் வரை அதிக வெப்ப இரவுகளால் மக்கள் தூக்கம் இழக்கின்றனர்.
அந்த வகையில், தென்னிந்தியாவில் தமிழகம் முதல் இடம் பிடித்து உள்ளது. இதுதொடர்பாக ‘கிளைமேட் சென்ட்ரல்’ என்ற அமைப்பு வெளியிட்டு உள்ள புதிய அறிக்கையின்படி, பெரிய மெட்ரோ நகரங்களில், அதிக வெப்பம் கொண்ட இரவுகளால், ஆண்டுக்கு 93 மணிநேரம் வரை தூக்கம் இழந்து, இந்தியாவின் ‘தூக்கமற்ற தலைநகராக’ சென்னை மாறியுள்ளது என்று ஆய்வு தெரிவிக்கின்றது.
இந்த வகையில், பிற நகரங்களை பின்னுக்கு தள்ளி சென்னை முதல் இடம் பிடித்து உள்ளது. இதனால், உலக அளவில் தூங்கா நகரம் என பெயர் பெற்ற நகராக சென்னை உருவெடுத்துள்ளது என அறிக்கை வழியே தெரிய வருகின்றது.
இதற்கு அடுத்து, மும்பை (84 மணிநேரம்), கொல்கத்தா (80 மணிநேரம்) நகரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலில், நாட்டின் தலைநகர் டெல்லி 66 மணிநேரத்துடன் 4-வது இடத்தில் உள்ளது.
இதில் பெருமளவில், வயது முதிர்ந்தோர், பெண்கள், குறைந்த வருவாய் கொண்ட வீட்டினர், குளிர்ச்சியான சூழலுக்கான வசதி இல்லாதோர் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர் என அறிக்கை தெரிவிக்கின்றது. மக்கள் தொகை அடர்த்தியான நகரங்களில் காணப்படும் நகர்புற வெப்ப தீவு விளைவுகளால் அதிகளவிலானோர் முடங்குகின்றனர்.
தென்னிந்தியாவில் தமிழகத்திற்கு அடுத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வரிசையில், புதுச்சேரியில் ஆண்டுக்கு சராசரியாக ஒரு நபர் 92 மணிநேரம் தூக்கம் இழந்து தவிக்கிறார். தொடர்ந்து ஆந்திர பிரதேசம் 88.6 மணிநேரமும், கேரளம் 88.3 மணிநேரமும் உள்ளன.
தொடர்ச்சியான வெப்பம், ஈரப்பதம் கொண்ட இரவுகள், தூக்க இழப்பை ஏற்படுத்துகின்றன என ஆய்வு தெரிவிக்கின்றது.