October 6, 2026

Seithi Saral

Tamil News Channel

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா- பக்தர்கள் குவிந்தனர்

1 min read

Sankarankovil Aadi Thapasu Festival – Devotees Flock In

28.7.2026
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமிகோயில்
ஒன்றாக உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்தபசு திருவிழா வெகுவிமர்சையாக நடை பெறுகிறது. இந்தாண்டு ஆடித்தபசு திருவிழா கடந்த ஜூலை 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 9-ம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
சிகர நிகழ்ச்சியான ஆடித்தவசு திருவிழா 11-ம் திருநாளான இன்று நடைபெற்றது.

இன்று காலை 8:30 மணிக்கு சுவாமி, அம்பாள் சந்திரமெளலீஸ்வரர் மற்றும் உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 9.30 மணிக்கு கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்காரமும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மதியம் 12.45 மணிக்கு மேல் கோமதி அம்பாள் தங்கச் சப்பரத்தில் தெற்குரதவீதியில் உள்ள ஆடித்தவசு மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு மேல் அருள்மிகு சங்கரநாராயணசாமி தவசு காட்சிக்கு புறப்பட்டு 6 மணிக்கு காட்சி கொடுக்கும் பந்தலுக்கு வந்தடைந்தார்.

இதனைத் தொடர்ந்து தவசு மண்டபத்தில் வீற்றிருந்த கோமதி அம்பாள் காட்சி கொடுக்கும் பந்தலுக்கு மாலை 6:25 மணிக்கு வந்தடைந்தார். இதனை தொடர்ந்து சுவாமியை அம்பாள் மூன்று முறை வலம் வருதல், மாலை மாற்றுதல் ஆகியவை நடைபெற்றது.
அப்போது விவசாயிகள் பருத்தி, வத்தல் உள்ளிட்டவைகளை இரு சப்பரத்தில் எறிந்தனர். அதனைத் தொடர்ந்து 6.51 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாளுக்கு, சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார். அப்போது சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.

இரவு 11 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் புறப்பாடு நிகழ்ச்சியும், இரவு 11:45 மணிக்கு சங்கலிங்க சுவாமி யானை வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி, தென்காசி வடக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகச் செயலாளர் மாரியப்பன், தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் டாக்டர் சுசீகரன், அம்மா பேரவை மாவட்ட தலைவர் எஜமான் செந்தில்குமார், சங்கரன்கோவில் நகராட்சி தலைவி கௌசல்யா, துணைத் தலைவர் கண்ணன், ஆணையாளர் லட்சுமி, டாக்டர்கள் சுப்பாராஜ், அம்சவேணி, மாநில வணிகர் சங்க பேரமைப்பு துணைத்தலைவர் திவ்யா ரெங்கன், கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் பழனிச் செல்வம், செயலர் ராஜேஷ் கண்ணா, கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பொன்னழகன் (எ) கண்ணன்,சங்கரநாராயண
சாமி திருக்கோவில் முன்னாள் அறங்காவலர் ராமகிருஷ்ணன்,
வழக்கறிஞர் சங்கரசுப்பு, நகைக் கடை உரிமையாளர்கள் சங்கர சுப்பிரமணியன், சங்கரன், குமரன், கண்ணன், மாரிமுத்து, சுந்தர், தொழிலதிபர்கள் என். ஆர். உத்தண்ட ராமன், மதன் சுப்பிரமணியன்,
கனகவேல், துரைமணி, சேர்மராஜ்,திமுக வார்டு செயலாளர் துரைப்பாண்டியன், சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி வீரர் வீ த லீடர்ஸ் ஸ்வர்ணா உள்ளிட்ட லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையில் கூடுதல் துணை சூப்பிரண்டுகள் ஜூலியஸ் சீசர், சங்கர், டிஎஸ்பிக்கள் செங்குட்டு வேலவன், நமச்சிவாயம், சுதிர் மற்றும் 1000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படி தாரர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

இதேபோல் தென்காசியிலும் ஆடி தபசு விழா நடந்தது. தென்காசில் இரண்டு சங்கரநாராயணர் கோவில்கள் உள்ளன. இரண்டு கோவில்களிலும் இன்று மாலை விழா கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் உப்பு-மிளகை சப்பரத்தில் போட்டு வழிபாடு நடத்தினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *