போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
1 min read
Supreme Court orders release of students arrested during the protest.
28.7.2026
நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து டெல்லியில் போராடிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடந்த 20-ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். இதை போலீசார் தடுத்து நிறுத்தியபோது வன்முறை வெடித்தது. அதில் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். அத்துடன் பெல்லட் குண்டுகளையும் வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இதில் இரு தரப்பிலும் பலருக்கு காயம் ஏற்பட்டது.
போலீசாரின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. மேலும் காயமடைந்த போலீசார் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி, மோகனா அமர்வில் நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது போலீசாரின் தடியடி நடவடிக்கைகளுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் அமைதியான முறையில் போராட்டம் செய்வதற்கான உரிமை முற்றிலும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதை மறுக்க முடியாது. வெறுமனே போராடுகிறார்கள் என்பதற்காக அவர்கள் மீது போலீசார் அத்துமீறவும் முடியாது. போராட்டத்தில் வரம்புமீறல் நடந்திருந்தால் அது சுதந்திரமாக விசாரிக்கப்பட வேண்டும். போராட்டம் நடக்கிறது என்பதற்காக மட்டுமே தடியடி நடத்த வேண்டும் என்பது அர்த்தமல்ல எனக்கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தனர்.
அதன்படி, மாணவர்கள் போராட்ட வழக்குகள் மீதான விசாரணை இன்றும் நடைபெற்றது. அப்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.
அதன் விவரம் பின்வருமாறு:-
மாணவர்கள் போராடுவதற்கு அனைத்து அரசியல் சாசன உரிமையும் உள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை உடனடியாக விடுக்க வேண்டும். கிரிமினல் குற்ற பின்னணி இல்லாத நபர்கள் யாராவது சிறையில் அடைக்கப்பட்டிருந்தால் விடுவிக்க வேண்டும். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் மீது எந்தவிதமான கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது.
போராட்டங்கள் நடைபெற்ற மராட்டியம், பீகார், உத்தர பிரதேசம் அசாம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். வன்முறை சிசிடிவி காட்சிகள், வீடியோ பதிவுகள் என அனைத்து ஆதரங்களையும் பத்திரமாக வைக்க வேண்டும். தேவைப்படும்போது நீதிமன்றத்தில் அதை சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவர்கள் மீது தடியடி நடத்திய வழக்கில் விசாரணை குழு அமைக்க முகாந்திரம் உள்ளது. மாணவர்கள் போராட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து ஆழமான, விரிவான விசாரணை நடத்த வேண்டும். விசாரணை சுதந்திரமானதாகவும், நியாயமானதாகவும் இருக்க வேண்டும். சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு (எஸ்ஐடி) உத்தரவிடுகிறேன்.
இவ்வாறு உத்தரவுகளை பிறப்பித்த தலைமை நீதிபதி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.