மேகதாது அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை- மத்திய மந்திரி பதில்
1 min read
Tamil Nadu’s consent is not required to build the Mekedatu dam – Union Minister’s reply.
28.7.2027
‘காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட, தமிழகம் உட்பட பிற மாநிலங்களின் ஒப்புதல் கர்நாடகாவுக்கு தேவையில்லை’ என, பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜ்யசபாவில், பா.ம.க., தலைவரும், அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யுமான அன்புமணி, ‘மேகதாது அணை கட்ட தமிழகம், கேரளா, புதுச்சேரி அரசுகளின் ஒப்புதலை கர்நாடகா பெற்றுள்ளதா? மத்திய அரசின் பரிசீலனையில் உள்ள அத்திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?’ என, கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து, பா.ஜ.க,வைச் சேர்ந்த மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் ராஜ் பூஷண் சவுத்ரி கூறியதாவது:
காவிரி நீர் தொடர்பான வழக்கில், 2018 பிப்., 16ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான அணையையும் கர்நாடக அரசு கட்டுவதற்கு, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெற வேண்டும் என, எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.
மேகதாது அணை தொடர்பாக, 2019ல், மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடக அரசு ஒரு விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்தது. ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு, அந்த அறிக்கை கர்நாடகாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டு விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.