அரசு பள்ளி மதிய உணவில் விரைவில் சிக்கன் பிரியாணி
1 min read
Chicken Biryani to be introduced soon in government school midday meals.
29.7.2026
அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் விரைவில் சிக்கன் பிரியாணி வர இருப்பதாக அமைச்சர் ராஜ் மோகன் கூறினார்.
தமிழ்நாட்டில் 37,595 அரசுப் பள்ளிகள் உள்ளன. இதில், 52 லட்சத்து 75 ஆயிரத்து 203 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 2 லட்சத்து 25 ஆயிரத்து 400 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதுதவிர, 7,289 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 1,046 பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளும், 65 மத்திய அரசு பள்ளிகளும் உள்ளன. தமிழக அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் மூலம் சுமார் 46 லட்சத்து 7 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். இதில், காலை உணவு திட்டத்தின் மூலம் பயன்பெறும் 19 லட்சத்து 34 ஆயிரம் தொடக்கப் பள்ளி மாணவர்களும் அடங்குவார்கள்.
தற்போது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை போன்ற கலவை சாதங்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன் அனைத்து நாட்களும் முட்டை வழங்கப்படுகிறது. முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுக்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு மதிய உணவில் அதிரடி மாற்றம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, விரைவில் மதிய உணவுடன் வாரம் ஒரு முறை சிக்கன் பிரியாணி வழங்க அரசு பரிசீலனை செய்து வருகிறது.
இதுகுறித்த தகவலை, சென்னையில் இன்று நடைபெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
மதிய உணவில் சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து கருத்துகள் பெறப்பட்டு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் முடிவை அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.
இதனால், சட்டசபையில் ஆகஸ்டு 5-ந் தேதி தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்டில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்கும் அறிவிப்பும் இடம்பெறும் என்று தெரிகிறது.