September 23, 2026

Seithi Saral

Tamil News Channel

பாம்புக்கோவில் சந்தையில் தாமிரபரணி குடிநீர் வழங்கக் கோரி மறியல்

1 min read

Road blockade demanding supply of Thamirabarani drinking water at Pambukovil snthiai

20/9/2026
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகா, சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மடத்துப்பட்டி ஊராட்சி பாம்பு கோவில் சந்தை பகுதியில் தாமிரபரணி குடிநீர் முறையாக வழங்கப்படாததைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாம்பு கோவில் சந்தை பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குறிப்பாக முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சினை நிலவி வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்த்து தாமிரபரணி குடிநீர் முறையாக வழங்கக் கோரி புளியங்குடி-சுரண்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து மடத்துப்பட்டி ஊராட்சி தலைவர் செய்யது இப்ராஹிம் கூறியதாவது:
“மானூர் பகுதியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் சில நாட்கள் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. மேலும், பாம்பு கோவில் சந்தை பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

மடத்துப்பட்டி ஊராட்சியில் ஒவ்வொரு தெருவுக்கும் முறை வைத்து தாமிரபரணி குடிநீர் விநியோகம் செய்யப் படுகிறது. இதனால் 10 நாட்களுக்கு ஒருமுறை தாமிரபரணி குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும், ஊராட்சி சார்பில் அனைத்து பகுதிகளுக்கும் கிணற்று நீரும் முறையாக வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு கடையநல்லூர் தாசில்தார் அப்துல் சமது, சொக்கம்பட்டி காவல் ஆய்வாளர் மது விக்ரம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
சாலை மறியல் காரணமாக புளியங்குடி–சுரண்டை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *