தென்காசியில் புதையல் இருப்பதாகக் கூறி பல லட்சம் மோசடி: இருவர் கைது
1 min read
Two arrested for swindling lakhs by claiming there was a treasure in Tenkasi.
6.8.2026
தென்காசி மாவட்டம் தென்காசி நகரப் பகுதியில் புதையல் இருப்பதாக கூறி பெண்ணிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்த இரண்டு நபர்களை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்
தென்காசி நகர பகுதியில் உள்ள தைக்காத் தெருவைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் வீட்டில் புதையல் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்கள் இருப்பதாகக் கூறி, பரிகாரம் செய்வதாக நம்ப வைத்து ரூ.1.54 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்ததாக இரண்டு பேரை தென்காசி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் தெரிவித்ததாவது:-
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் மற்றும் விந்தன்கோட்டை பகுதியைச் சேர்ந்த குமார் ஆகியோர், தாங்கள் பெரிய மாந்திரீகவாதிகள் எனக் கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டில் புதையல் இருப்பதாகவும், அதனை எடுக்க சிறப்பு பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்றும் நம்பிக்கை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதற்காக பல்வேறு பரிகாரங்கள் செய்ய வேண்டும் எனக் கூறி, பெண்ணிடம் இருந்து வங்கி கணக்கு மூலம் மொத்தம் ரூ.1 லட்சத்து 54 ஆயிரம் பெற்றதுடன், நேரிலும் பல லட்சம் ரூபாய் பெற்றதாகவும் புகாரில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் புதையலை எடுத்து தருவதாகக் கூறியும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, பூஜைகள் நடைபெற்று வருவதாகவும், இடையில் நிறுத்தினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது உறவினர்களும் தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வேல்முருகன் மற்றும் குமார் ஆகியோரை கைது செய்து, இந்த மோசடியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.
.