August 6, 2026

Seithi Saral

Tamil News Channel

ஐந்தாங்கட்டளையில் மனிதக் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு 

1 min read

Villagers oppose the construction of a human waste treatment plant at Aintham Kattalai.

6.8.2026

ஐந்தாங்கட்டளையில் அமைய உள்ள மனிதக் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு இதைச் சுற்றியுள்ள 5 கிராமங்களில் வசிக்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஐந்தாங்கட்டளை கிராமத்தில் பரும்பு பகுதியில் மனிதக் கழிவுகளை சுத்திகரிக்கும் நிலையம் அரசு அமைக்க உள்ளது. இதுகுறித்து கள ஆய்வு செய்வதற்காக சென்ற ஊரக வளர்ச்சித் துறை அதிகாரியிடம் ஐந்தாங்கட்டளை, சொக்கநாதன்பட்டி, கட்டளையூர், பண்டாரக்குளம், லட்சுமிமியூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங்கிடம் கடையம் கிழக்கு ஒன்றியத்தின் பாரதிய ஜனதா கட்சி தலைவர் வைகுண்ட ராஜா மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது,

ஐந்தாங்கட்டளை ஊராட்சிக்குட்பட்ட அஞ்சாங்கட்டளை, சொக்கநாதன்பட்டி, கட்டளையூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1500 மக்களும் வெங்கடாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பண்டாரக்குளம் மற்றும் லட்சுமியூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1800 மக்களும் இப்பகுதியில் வசித்து வருகிறோம்.

வெங்கடாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அஞ்சாங்கட்டளை பரும்பு பகுதியில் இயங்கி வரும் நெல் சேமிப்பு கிடங்கு அருகே மனிதக் கழிவுகள் சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்காக அங்கிருக்கும் மரங்கள் அகற்றப்பட்டு அந்த வேலைகள் முடிவடையும் நிலையில் உள்ளது. ஏற்கனவே, பரும்பு பகுதியில் நெல் சேமிப்பு கிடங்கு மற்றும் துணை மின் நிலையம் போன்ற திட்டங்களுக்காக மரங்கள் அகற்றப்பட்ட காரணத்தினால் அங்கு வாழ்ந்த மான்கள் மற்றும் பன்றிகள் போன்ற மிருகங்கள் எங்களுடைய விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. விளைப் பொருட்களை பாதுகாப்பதற்கு எங்களுடைய மக்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது புதிய பிரச்சினையாக வர இருக்கும் இந்த மனிதக் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையத்தால் மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு, அமோனியா போன்ற நச்சு வாயுக்களால் இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படும், கொசு மற்றும் பூச்சிகள் அதிகரிக்கும், சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் ஆறுகள், குளங்கள் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடும், மலக் கழிவுகளை எடுத்து வரும் வாகனங்களிலிருந்து கழிவுகள் சாலைகளில் சிந்தி அசுத்தமாகி துர்நாற்றம் அதிகரித்து அதன் மூலம் கிராம மக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது, துர்நாற்றம், நோய்க் கிருமிகள் மற்றும் கொசுக்கள் காரணமாக கிராம மக்களுக்கு சுவாச பிரச்சனைகள், தோல் எரிச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும், துர்நாற்றம் மற்றும் காற்று மாசுபாட்டால் இங்குள்ள நிலங்களின் சந்தை மதிப்பு குறையும். 

எனவே, மேற்கூறிய கிராமங்களில் வாழும் மக்களுக்கு இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் இத்திட்டத்தை அரசு உடனடியாக கைவிடும்படியும் மனித நடமாட்டம் இல்லாத வேறொரு பகுதிக்கு இத்திட்டத்தை கொண்டு செல்லவும் கிராம மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் என அம்மனுவில் அவர் கூறியுள்ளார்.

செய்தியாளர்: ஜோசப்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *