சங்கரன்கோவிலில் நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்
1 min read
Weavers’ protest in Sankarankovil
9.8.2026
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிரதான தொழிலான விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி நெசவாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் முக்கியமான நகரமாகும். சங்கரன்கோவில் பகுதியை பொறுத்தவரை விசைத்தறி தொழில் மிகவும் முக்கியமானதாகும். விசைத்தறி தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 25,000 தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றார்கள். இந்நிலையில் சங்கரன்கோவிலில் செயல்பட்டு வந்த சாயப்பட்டறைகளை ஆய்வு செய்த அமைச்சர் ராஜீவ் விதிமுறைகளை மீறி சாயப்பட்டறைகள் செயல்பட்டு வந்ததாக அதை சீல் வைக்க உத்தரவிட்டார். எந்தவித மாற்று ஏற்பாடும் இல்லாமல் உடனடியாக சாயப்பட்டறைகள் சீல் வைக்கப்பட்டது.தொடர்ந்து அந்த ஆலைகளுக்கான மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. சங்கரன்கோவிலில் பிரதான தொழிலாளர் விசைத்தறி தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் செயல்பட்ட அரசை கண்டித்து விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் சாலை மறியல்,
கண்டன ஆர்ப்பாட்டம், கஞ்சி தொட்டி திறக்கும் ஆர்ப்பாட்டம் என பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மூலம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர். மேலும் சாயப்பட்டறைகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் சங்கரன்கோவிலில் பிரசித்தி பெற்ற ஆடித்தபசு திருவிழா 12 நாட்கள் நடைபெற்றதால் விசைத்தறி தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். இந்நிலையில் சங்கரன்கோவில் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி நெசவாளர்கள் சார்பில் நேற்று இரவு சங்கரன்கோவில் – திருவேங்கடம் சாலையில் பாடா பிள்ளையார் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு செங்குந்தர் அபிவிருத்தி சங்க செயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் தங்கவேலு, சங்கரன்கோவில் நகர் மன்ற அதிமுக துணை தலைவர் கண்ணன், பாஜக மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் அசோக் ராஜ், இந்து முன்னணி கோட்டச் செயலாளர் ஆறுமுகச்சாமி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் முருகையா பாண்டியன், நாம் தமிழர் கட்சி கார்த்திக் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினார்கள். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் மாணிக்கம்,
அதிமுக ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், செல்வராஜ், செல்வம், பாஜக நகர தலைவர் உதயகுமார், இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் வன்னியராஜ், விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்கள், செங்குந்தர் அபிவிருத்தி சங்கம் செங்குந்தர் முன்னேற்ற சங்கம் மற்றும் பெண்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.