வனத்துறை அமைச்சருக்காக வருத்தம் தெரிவித்த முதல்வர் விஜய்
1 min read
Chief Minister Vijay expresses regret on behalf of the Forest Minister.
17.8.2026
சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை சுட்டிக்காட்டி வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பேசியதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமைச்சர் பேசியது தவறுதான் எனக் கூறி அவர் சார்பில் முதல்வர் விஜய் அவையில் ‘சாரி’ என வருத்தம் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று சுகாதாரத் துறை, வருவாய்த் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டு வனத் துறை அமைச்சர் ரஞ்சித் குமார் சில கருத்துகளை தெரிவித்தார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அமைச்சர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, ‘தலைவரின் பெயரைச் சொல்லி அமைச்சர் பேசுவது என்ன நியாயம். அதற்கு நாங்களும் பேசினால் எப்படி பேரவையை நடத்த முடியும்?’ என்றார்.
பின்னர், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ‘முதல்வர், முன்னாள் முதல்வர் என்றுதான் குறிப்பிட வேண்டும். பெயரை சொல்லக் கூடாது என்று விதி உள்ளது. அதை கடைபிடித்தால் பிரச்சினை இருக்காது’ என்றார்.
பின்னர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ‘எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, சட்டப்பேரவையில் இதேபோல உறுப்பினர் ஒருவர் தலைவரின் பெயரைக் கூற, எம்ஜிஆர் எழுந்து, ‘‘கலைஞர் என்றுதான் சொல்ல வேண்டும். மன்னிப்பு கேளுங்கள்’’ என்றார். அந்த மாதிரி கண்ணியத்தை நாம் காப்பாற்ற வேண்டும்’ என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து முதல்வர் விஜய் பேசுகையில், ‘உங்கள் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டு அமைச்சர் பேசியது தவறுதான். அவர் சார்பில் நான் சாரி கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறினார்.