நீட் தேர்வில் வென்ற நெல்லை சகோதரர்கள் மூவர்
1 min read
Three brothers from Nellai succeed in the NEET exam
17.8.2026
நெல்லை மாவட்டத்தில் நெசவு தொழிலாளியின் 3 மகன்கள் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்ற நிலையில், 3 பேருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மூவர் நீட் தேர்வில் சாதித்து அசத்தியது, ஊர் மக்கள் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் வெள்ளாங்குழி பகுதியைச் சேர்ந்தவர் நெசவாளரான ராம்குமார் (49), அவரது மனைவி மங்கையர் திலகம் இந்த தம்பதிக்கு வெங்கட் ஸ்ரீ, அருண், தரண் என 3 மகன்கள் உள்ளனர். இவர்களில் அருண், தரண் இருவரும் இரட்டையர்கள்.
நெசவுத் தொழிலில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வரும் நிலையில், பொருளாதார சிரமங்களுக்கு மத்தியிலும் 3 மகன்களையும் வெள்ளாங்குழி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்க வைத்து மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவை ஊக்கப்படுத்தி வந்துள்ளனர்.
மூத்த மகன் வெங்கட் ஸ்ரீ கடந்த 2022-23ஆம் ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று நீட் தேர்வு எழுதியதில் 300 மதிப்பெண்கள் பெற்றார்; மருத்துவ இடம் கிடைக்காததால் மனம் தளராமல் 2025ஆம் ஆண்டு மீண்டும் நீட் தேர்வு எழுதி 420 மதிப்பெண்கள் பெற்றார். அப்போதும் எதிர்பார்த்த இடம் கிடைக்காத நிலையில், இந்த ஆண்டும் விடாமுயற்சியுடன் நீட் தேர்வை எழுதி 440 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இரட்டை சகோதரர்களான அருண், தரண் ஆகியோரும் இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதி முறையே 511 மற்றும் 494 மதிப்பெண் பெற்றனர். இதையடுத்து 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் 3 பேருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.
வெங்கட்ஸ்ரீக்கு நாகர்கோவில் பல் மருத்துவக் கல்லூரியிலும், அருணுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியிலும், தரணுக்கு கோவை பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது. நெசவுத் தொழிலில் கிடைக்கும் குறைந்த வருமானத்திலும் மகன்களின் கல்விக்காக பெற்றோர் மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்களும் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்திருப்பது வெள்ளாங்குழி ஊர் மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெசவாளரின் வீட்டில் 3 மகன்களின் மருத்துவக் கனவும் நனவாகியிருப்பது பெருமையாக இருப்பதாக பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 3 சகோதரர்களையும் கவுரவிக்கும் வகையில் நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற சௌராஷ்டிரா சமுதாய கலந்தாய்வுக் கூட்டத்தில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.