தென் மண்டல கவுன்சில் மாநாடு ; தமிழகம், ஆந்திரா, கேரளம், கர்நாடகா முதல்வர்கள் பங்கேற்பு
1 min read
Southern Zonal Council meeting; Chief Ministers of Tamil Nadu, Andhra, Kerala, and Karnataka participate
20.8.2026
சென்னை கோவளத்தில் தென் மண்டல கவுன்சில் மாநாடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் துவங்கியுள்ளது. தமிழகம், ஆந்திரா, கேரளம், கர்நாடகா மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.
சென்னை அடுத்த கோவளத்தில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று (ஆகஸ்ட் 20) நடந்தது. மாநாட்டில் தமிழக முதல்வர் விஜய், கேரள முதல்வர் சதீசன், கர்நாடக முதல்வர் சிவகுமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பங்கேற்றனர். புதுச்சேரி சார்பில் துணை நிலை கவர்னர் கைலாஷ்நாதன், தெலுங்கானா சார்பில் துணை முதல்வர் மல்லு பட்டி விக்ரமார்கா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
நதிநீர் பங்கீடு தொடர்பாக தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் கர்நாடகா முதல்வர் சிவக்குமார் பேசியதாவது: நீர் என்பது நம்மை ஒன்று சேர்க்க வேண்டுமே தவிர பிரிக்க கூடாது; நதி நீர் பங்கீடு என்ற நிலையில் இருந்து நதீநீர் ஒத்துழைப்பு என்ற நிலைக்கு நகர வேண்டிய நேரம். ஒத்துழைப்பு அடிப்படையில் நதி நீர் பிரச்னைகளை அணுக வேண்டும். கர்நாடகாவின் சட்டப்பூர்வ நீர்ப்பங்கை மதிக்க வேண்டும். இவ்வாறு சிவக்குமார் பேசினார்.
மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகள், சிக்கல்களுக்கு சுமுக தீர்வு காணும் நோக்கத்தில் இந்த கூட்டம் நடக்கிறது. முல்லைப் பெரியாறு அணை, காவிரி நீர் பகிர்வு, மேகதாது அணை பிரச்னை குறித்து விவாதிக்கப்படக் கூடும் என எதிர்பாரக்கப்படுகிறது. உட்கட்டமைப்புத் திட்டங்கள், தொழில் முதலீடுகள், சுற்றுலா வளர்ச்சி ஆகியவை குறித்தும் முதல்வர்கள் விவாதிப்பர் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாநாடு முடிந்த பிறகு கூட்டத்தில் பங்கேற்ற மாநில முதல்வர்களுடன் இணைந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதிய உணவு அருந்தினார்.