சமூகவலைதளத்தில் பரவும் வீடியோ பற்றி அமைச்சர் கீர்த்தனா விளக்கம்
1 min read
Minister Keerthana clarifies the video circulating on social media.
23.8.2026
‘சமூக வலைதள பக்கத்தில் வேகமாக பரவும் வீடியோவில் இருப்பது நான் இல்லை; அப்படியே, அது நானாக இருந்தாலும், அதிலென்ன தவறு இருக்கிறது’ என, தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா கேள்வி எழுப்பி உள்ளார்.
சமூகவலைதள பக்கங்களில், கருப்பு உடை அணிந்து, பெண் ஒருவர் காரில் இருந்து இறங்கும், ‘வீடியோ’ வேகமாக பரவி வருகிறது. இந்தப் பெண், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா என, சிலர் விமர்சித்து பதிவுகளை வெளியிட்டனர். இதுதொடர்பாக, அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒரு பெண், தன் அன்றாட வாழ்க்கையை வாழும், ‘வீடியோ’ ஒன்று, அரசியல் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்துகிறது என்ற உண்மையே, இதன் பின்னால் இருக்கும், பலவீனமான, பிற்போக்குத்தனமான, மனநிலை என, அனைத்தையும் சொல்லி விடுகிறது. ஆனால், எனக்கு இதில் ஆச்சரியமில்லை. பெண்கள் குறித்து, மிகவும் இழிவான கருத்துகளைப் பேசிய, வரலாற்றை கொண்ட, ஒரு தலைவரின் ஆதரவாளர்களிடமிருந்து, வேறு என்ன எதிர்பார்க்க முடியும். ஒன்றை தெளிவுப்படுத்துகிறேன்.
அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. ஆனால், அது நானாகவே இருந்திருந்தாலும், அதிலென்ன இருக்கிறது. ஒரு பெண்ணின் உடை, தோற்றம் அல்லது மகிழ்ச்சி போன்றவை, இன்றும் ஏன் பொதுவெளியில், விமர்சனத்திற்குரிய அல்லது விசாரணைக்குரிய விஷயங்களாக கருதப்படுகின்றன.
எங்கள் கொள்கைகள், நிர்வாகம் அல்லது செயல்பாடுகள் குறித்து, கேள்வி எழுப்ப முடியாத போது, தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுடைய, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து, கற்பனையான கதைகளை உருவாக்குகின்றனர். ஆக்கப்பூர்வமாக சொல்ல எதுவும் இல்லாதவர்களின் மிகப்பழமையான ஆயுதம், பெண் வெறுப்பு தான்.
மேலும், முக ஒற்றுமை காரணமாக, இந்த விவகாரத்தில் இழுக்கப்பட்ட, அந்த பெண்ணிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். உங்கள் விருப்பப்படி, உங்கள் வாழ்க்கையை தொடர்ந்து வாழுங்கள். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.