“சிஜேபி போராட்டத்தில் மண்டையை உடைத்தேன்” என கூறிய இன்ஸ்டா பிரபலம்
1 min read
Instagram celebrity claims, “I got my head cracked during the CJP protest.”
4.9.2026
டெல்லியில் சிஜேபி போராட்டத்தின்போது மாணவி ஒருவரின் தந்தையின் தலையை உடைத்தும் தான் கைதாகவில்லை என கூறிய இன்ஸ்டாகிராம் பிரபலத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 25 வரை நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடிகளை கண்டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
ஜூலை 20 அன்று மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்றம் நோக்கி இளைஞர்கள் நடத்திய பேரணியில் டெல்லி போலீசார், ஆர்ஏஎப் மத்திய படையினர் தாக்குதல் நடத்தினர்.
கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் தாக்குதல் நடத்தப்பட்டது. பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதும் சீருடையற்ற சிலர் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதும் விமர்சனத்துக்கு உள்ளாகி இளைஞர்களுக்கு நாடு முழுவதும் ஆதரவு அதிகரித்தது.
கடும் அழுத்தத்தின் மத்தியில் மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ஜூலை 25 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இதனிடையே ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, மாணவி ஒருவரின் தந்தையான சஞ்சய் குமார் என்பவரின் ” மண்டையை உடைத்தேன், ஆனால் அதற்காக சிறைக்கு கூட செல்லவில்லை” என சுவதந்திர பரத்வாஜ் என்ற இன்ஸ்டா பிரபலம் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் 1.84 லட்சம் பின்தொடர்பாளர்களை கொண்ட 21 வயதான சுவதந்திர பரத்வாஜ், ‘சுவதந்திர சனாதனி யோதா’ எனத் தன்னை அழைத்துக்கொள்கிறார்.
அவர் பாட்காஸ்டில் பேசியதாவது:-
“போராட்டக்காரரின் தந்தையின் மண்டையை நான் உடைத்தேன். அவருக்கு 60 தையல்கள் போடப்பட்டன. இது கொலை முயற்சி வழக்கு என்பது தெரியுமா? ஆம்புலன்ஸில் அவர் கிட்டத்தட்டச் சாகும் நிலையில் இருந்தார்.
ஆனால், நான் சிறையில் கூட அடைக்கப்படவில்லை. இரவெல்லாம் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தேன். உலகத்திற்கு இது தெரிய வேண்டும்”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பாஜக தலைவர்களுடனான தனது தொடர்புகளே தன்னைத் தப்பவைத்ததாக அவர் அந்த பாட்காஸ்டில் பேசியிருக்கிறார்.
பரத்வாஜ் குறிப்பிட்ட இந்த சம்பவம் ஜூன் 23 அன்று மாலை 5.30 மணியளவில் நடந்துள்ளது. சஞ்சய் குமார் தனது கைபேசியில் போராட்டத்தைப் படமாக்கியபோது ஏற்பட்ட தகராறில் தாக்குதலானது நடைபெற்றுள்ளது. சூரஜ் குமார், பரத்வாஜ் மற்றும் சிலர் இணைந்து சஞ்சய் குமாரை தாக்கியுள்ளனர்.
பரத்வாஜ் பேசிய வீடியோ தற்போது வைரலானதை தொடர்ந்து பல தரப்பில் இருந்தும் அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
பாதிக்கப்பட்ட சஞ்சய் குமாரின் மகளின் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்
சர்ச்சை வலுத்ததையடுத்து பதிலளித்த பரத்வாஜ், “அது தற்காப்புக்காக செய்யப்பட்ட நடவடிக்கை. நான் அப்படிச் செய்யாவிட்டால், கும்பல் என்னைப் படுகொலை செய்திருக்கும். என் மீது தாக்குதல் நடத்தவே முயன்றார்கள், அதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது” என விளக்கம் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில்,
“அமித் ஷாவின் டெல்லி போலீஸ் ஒருபுறம் மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்துகிறது. மறுபுறம், தலித் மாணவியின் தந்தையின் மண்டையை உடைத்த குற்றவாளி திறந்தவெளியில் சுதந்திரமாகச் சுற்றி திரிகிறான்.
இப்படிப்பட்ட குற்றவாளிக்கு உங்கள் கட்சியினர் ஏன் பாதுகாப்பு அளிக்கிறார்கள்? இப்போது நடவடிக்கை எடுக்கப்படுமா, அல்லது அவரைத் தொடர்ந்து பாதுகாப்பீர்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்
இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி பிரிவில் வழக்குப்பதிவு செய்ய டெல்லி போலீசாரை சிஜேபி கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.
ஆனால், போலிசார் எப்ஐஆரில் அந்தப் பிரிவை சேர்க்க மறுத்துவிட்டதாக சௌரவ் தாஸ் குற்றம் சாட்டினார்.
டெல்லி போலிஸ் அளித்த விளக்கத்தில் சஞ்சய் குமாருக்கு ஏற்பட்டது சாதாரண காயம் தான் என்றும், மண்டை ஓடு எதுவும் உடையவில்லை என்றும் தெரிவித்துள்து.
இந்தச் சம்பவம் தொடர்பாக சூரஜ் குமார், சுவதந்திர பரத்வாஜிடம் விசாரணை நடத்தப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் போலிஸ் தெரிவித்துள்ளது.