நித்யானந்தா புதுச்சேரி வருவாரா?
1 min read
Will Nithyananda come to Puducherry?
4.9.2026
புதுச்சேரி, ஏம்பலத்தில், கைலாசா நித்யானந்தா தியான பீடத்திற்கு குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தியான பீட நிர்வாகிகள், புதுச்சேரி சட்டசபையில், முதல்-மந்திரி ரங்கசாமியை வியாழன் அன்று சந்தித்து பேசினர்.
தியான பீட குடமுழுக்கு விழாவில் பங்கேற்க, புதுச்சேரிக்கு நித்யானந்தா வருகை தர உள்ளதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக, மத்திய அரசிடம் பேசி வருவதாகவும், நித்யானந்தா புதுச்சேரி வரும்போது, மாநில அரசு பாதுகாப்பு தர வேண்டும் என்றும், முதல்-மந்திரியிடம் கோரிக்கை வைத்தனர்.
இதைக் கேட்ட ரங்கசாமி, ‘அவர் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்’ என்று தெரிவித்தார். அவருக்கு, கைலாசா சிறப்புகள் அடங்கிய புத்தகத்தை தியான பீட நிர்வாகிகள் வழங்கினர்.
பல்வேறு வழக்குகளில் சிக்கி, போலீசாரால் தேடப்பட்டு வந்த நித்யானந்தா, 2020-ல், ‘கைலாசா’ என்ற தனி நாட்டை உருவாக்கியதாக அறிவித்தார். இந்த நிலையில் அவர் புதுச்சேரிக்கு வருகை தர இருப்பதாக, தியான பீட நிர்வாகிகள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.