மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
1 min read
Grand Consecration Ceremony at Madurai Meenakshi Amman Temple
17.9.2026
17 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.
இதை முன்னிட்டு கோவிலில் பல மாதங்களாக திருப்பணிகள் ரூ.25 கோடி மதிப்பில் நடந்தன. யாகசாலை பூஜைக்காக வடக்கு ஆடி வீதியில் 184 குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டது. கங்கை, யமுனை, காவிரி, வைகை உள்ளிட்ட பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை கலசங்களில் நிரப்பி யாகசாலையில் வைத்து தினமும் பூஜைகள் நடந்தது.
நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் 10-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. அந்த வழிபாடு நிறைவு பெற்ற பிறகு பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிஷேகம் தொடங்கியது.
மேளதாளங்கள் முழங்க யானை, டங்கா மாடு அணிவகுத்து செல்ல யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள் புறப்பாடாகி கோவிலுக்குள் உள்ள பரிவார தெய்வங்கள் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டன.
காலை 5 மணி முதல் 6 மணிக்குள் சித்தி விநாயகர், கூடல்குமாரர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, மகாலட்சுமி, பத்திரகாளி, அக்னி வீரபத்திரர், 63 நாயன்மார்கள், நவகிரகங்கள் உள்பட 414 பரிவார தெய்வங்களுக்கு நேற்று புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
மூலவர் மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர், தங்க விமானங்கள், சன்னதி விமானங்கள், 12 கோபுரங்கள் உள்ளிட்டவற்றுக்கான கும்ப கலசங்களுக்கு நேற்று மாலை 11-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. இதில்
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
விழாவின் சிகரமாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் மகா கும்பாபிஷேக விழா இன்று காலையில் கோலாகலமாக நடைபெற்றது. இதனால் மதுரை மாநகர் விழாக்கோலம் பூண்டு காணும் இடமெல்லாம் மின்னொளி அலங்காரத்தில் ஜொலித்தது.
திருப்பரங்குன்றம் கோவிலில் அருள்பாலிக்கும் சுப்பிரமணியசுவாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை காண எழுந்தருளினார்.
முன்னதாக இன்று அதிகாலை 3.45 மணிக்கு 12-ம் கால யாக பூஜை நடைபெற்றது. யாகசாலையில் வைத்து
பூஜிக்கப்பட்ட கடங்கள் புறப்பாடு 5.45 மணிக்கு நடைபெற்றது. அதனை சிவாச்சாரியார்கள் 4 ராஜ
கோபுரங்கள் உள்பட 12 கோபுரங்கள், தங்க விமானங்களுக்கு கொண்டு சென்றபிறகு சரியாக 7.40 மணிக்கு கோபுரங்களுக்கு பக்தி கோஷங்கள் விண்ணதிர முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது.
கோலாகலமாக நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்தை பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
பின்பு மூலவர் மீனாட்சி அம்மனுக்கு காலை 8.10 மணிக்கும், சுந்தரேசுவரருக்கு 8.50 மணிக்கும் புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னர்
அலங்காரம், சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.
காலை 10 மணி முதல் இரவு வரை டைசாத்தப்பட்டது. இன்றிரவு 7 மணிக்கு நான்கு மாசி வீதிகளிலும் மீனாட்சி,
சுந்தரேசுவரர் வீதி உலா வந்து காட்சி அளிக்கிறார்கள்.