September 25, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனை 3 நாள் விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி

1 min read

Gem Veeramani Case: Police granted permission to interrogate Shanthi and Mahendra Simhan for 3 days.

24.9.2026
ஜெம் வீரமணி போக்சோ வழக்கில், கைது செய்யப்பட்ட சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

‘ஜெம் கிரானைட்’ தொழில் அதிபர் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை மூலம் சீரழித்த குற்றத்துக்காக ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருடைய காமக்களியாட்டத்துக்கு துணை போனதாக சாந்தி என்ற பெண்ணும், அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் என்பவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். வீரமணியின் பாலியல் லீலைகளுக்கு இவர்கள் 2 பேரும் தங்களுடைய வீட்டை பயன்படுத்தி இருக்கிறார்கள். 2003-ம் ஆண்டில் இருந்து இவரது பாலியல் விளையாட்டுக்கள் தொடர்ந்து நடந்துள்ளது.

தற்போது வரையில் சுமார் 23 ஆண்டுகளாக இவர் காமக்களியாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது முன்னாள் உதவியாளர் கணேசன் என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். வீரமணி தொடர்பான ஆபாச வீடியோக்கள் கணேசனின் செல்போனில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

வீரமணி மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டாலும் அந்த வழக்கை போலீசார் கோர்ட்டில் முடித்து வைத்துவிட்டனர். ஆனால் கோர்ட்டு அதை ஏற்க மறுத்து மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தான் இந்த வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த வழக்கை பொறுத்தமட்டில் முக்கிய குற்றவாளியான வீரமணியும், அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களும் கைது செய்யப்பட்டு விட்டனர். இன்னும் ஒரு சிலர் இந்த வழக்கில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர். வீரமணி கைது செய்யப்பட்டபோது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பின்னர் புழல் சிறையில் வைத்து அவரிடம் 3 நாட்கள் விசாரணை நடத்தினார்கள். மீண்டும் அவரிடம் ஒருமுறை இறுதியாக விசாரணை நடத்தப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜெம் வீரமணி வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோரை காவலில் எடுக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை மனு தாக்கல் செய்திருந்தது. சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மாலை நடைபெற்ற விசாரணையின்போது, போக்சோ வழக்கில் கைதான சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *