‘ஜெம்’ வீரமணியால் பாதிக்கப்பட்ட மேலும் 3 சிறுமிகள்; சிறப்பு புலனாய்வு குழுவிடம் புகார்
1 min read
Three more girls victimized by ‘Gem’ Veeramani; complaint lodged with the Special Investigation Team.
26.9.2026
‘ஜெம்’ கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணியால் பாதிக்கப்பட்ட மேலும் 3 சிறுமிகள் சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் புகார் அளித்து உள்ளனர்.
சிறுமியரை பாலியல் வன்முறை செய்த, ‘கிரானைட்ஸ்’ தொழில் வர்த்தகர், ‘ஜெம்’ வீரமணி, 85, கைதாகி, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததுடன், சிறுமியருடன் வீரமணி நெருக்கமாக இருக்கும் காட்சிகளை வீடியோ எடுத்து, அவரை மிரட்டியே கோடிக்கணக்கில் பணம் பெற்ற சாந்தி, 61, அவரது கணவர் மகேந்திர சிம்மன், 63, ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீரமணி மீதான, ‘போக்சோ’ வழக்கை விசாரிக்க, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி தலைமையில், இணை கமிஷனர் திஷா மிட்டல், எஸ்.பி., முத்தரசி மற்றும் சென்னை போலீசின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் கீதாஞ்சலி ஆகியோர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் வீரமணியால் பாதிக்கப்பட்ட மேலும் 3 சிறுமிகள் சிறப்பு புலனாய்வு குழுவினரை சந்தித்து பரபரப்பு புகார் அளித்து உள்ளனர். தற்போது வரை சிறுமிகள் 15 பேர் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வீரமணியால் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுமிகள் துணிச்சலாக முன் வந்து புகார் அளிக்க சிறப்பு புலனாய்வு குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.