பண்பொழி அருகே தொழிலாளி கொலையில் மனைவி, கள்ளக்காதலன் கைது
1 min read
Wife and lover arrested for the murder of a worker near Panpoli.
தென்காசி, செப்.28-
தென்காசி மாவட்டம், பண்பொழி அருகே காட்டுப்பகுதியில் கடந்த 10-ந் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். போலீசாரின் தீவிர விசாரணையில் அவர் தவ்ஹீத் அப்துல் ரகுமான் (வயது 50) என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியும், அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது.
பண்பொழி- தென்காசி சாலையில் முத்தையா என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. கடந்த 10-ந் தேதி மாலை முத்தையா தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சச் சென்றபோது, அங்கு தலையில் பலத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்ததை பார்த்து இலத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
ஆனாலும் இறந்தவர் யார் என்பது தெரியாததால், அவரது அங்க அடையாளங்கள், அணிந்திருந்த ஆடைகள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் காணாமல் போனவர்களின் விவரங்கள் சேகரிக்கப் பட்டதுடன், கேரள மாநிலத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே டி.எஸ்.பி. அதியமான் தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், கருப்பசாமி பாண்டியன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் பண்பொழி-தென்காசி சாலையில் உள்ள 26 சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான சுமார் 60 வாகனங்களின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சந்தேகத்திற்கிடமாக இரண்டு முறை அந்த பகுதியில் வந்து சென்ற காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அந்த கார் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த வாடகை கார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற போலீசார், அங்கு கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வரும் தென்காசி தைக்கா தெருவைச் சேர்ந்த ஹோட்டல் ஊழியர் இசை இந்திரகுமார் (வயது 36) என்பவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், இசை இந்திரகுமாருக்கும் ரோலிங் ஷட்டர் தொழிலாளியான தவ்ஹீத் அப்துல் ரஹ்மானுக்கும் பழக்கம் இருந்ததும், அதன் மூலம் அவர் வீட்டிற்கு இசை இந்திரகுமார் அடிக்கடி சென்று வந்ததும் தெரியவந்தது. அப்போது தவ்ஹீத் அப்துல் ரகுமானின் மனைவி ஹம்சா (வயது 36) என்பவருடன் இசை இந்திரகுமாருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும், இது சுமார் 8 ஆண்டுகளாக நீடித்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சமீபகாலமாக தவ்ஹீத் அப்துல் ரகுமான் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால், கள்ளத்தொடர்புக்கு அவர் இடையூறாக இருப்பதாக கருதிய இருவரும் அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி கடந்த 10-ந் தேதி, பண்பொழி–தென்காசி சாலையில் உள்ள தனது நண்பரின் தோட்டத்தில் பம்புசெட் கட்டிடத்திற்கு ரோலிங் ஷட்டர் அமைக்க வேண்டும் என்று கூறி தவ்ஹீத் அப்துல் ரகுமானை இசை இந்திரகுமார் காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு இடத்தை அளந்து கொண்டிருந்தபோது அருகில் கிடந்த இரும்புக் கம்பியால் தவ்ஹீத் அப்துல் ரஹ்மானின் தலையின் பின்பகுதியில் இசை இந்திரகுமார் தாக்கியதாகவும், பின்னர் அருகில் கிடந்த கல்லை தூக்கி தாக்க முயன்றபோது அது கழுத்தில் விழுந்ததில் கழுத்து முறிந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் உடலை அங்கேயே விட்டுவிட்டு, வாடகை காரை அனுப்பிவிட்டு, இசை இந்திரகுமார் அங்கிருந்து நடந்து சென்று பஸ் ஏறி தப்பிச் சென்றதாக விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இசை இந்திரகுமார் மற்றும் ஹம்சா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இசை இந்திரகுமார் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், ஹம்சா பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கருப்பசாமி பாண்டியன், ராமச்சந்திரன் மற்றும் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் பாராட்டினார்.