October 1, 2026

Seithi Saral

Tamil News Channel

வடகரை பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்

1 min read

Wild elephants wreak havoc in the Vadakarai area

29.6.2026
தென்காசி மாவட்டம், வடகரை பகுதியில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிப்படைவதோடு அந்த பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வடகரை பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் விவசாய நிலங்கள் ஏராளமாக உள்ளது இந்த நிலங்களில் விவசாயிகள் நெல்,வாழை, தென்னை,கரும்பு, போன்ற பயிர்களை பயிர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு வடகரை பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் ஒரு குட்டி யானை மற்றும் இரண்டு பெரிய யானைகள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்கள் மற்றும் வாழைகள் தென்னைகள் கரும்பு உள்ளிட்ட பயிர்களை மிதித்து சேதப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் அந்த யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலையிலும் யானைகள் வனப்பகுதிக்கு செல்லாமல் அதேபகுதியில் உள்ள நீர் நிலைகளில் ஆனந்த குளியல் நடத்தி வருகிறது ‌.

இந்த விவசாய நிலங்கள் பொதுமக்கள் வாழும் பகுதிக்கு மிக அருகில் இருப்பதால் அந்த யானைகள் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து விடுமோ என்று பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு தேவையான பசுந்தளைகள் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் யானை உள்ளிட்ட வனவலங்குகள் தனக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீரை தேடி மலை அடிவாரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு வருகிறது.

அப்படி யானைகள் உள்ளிட்ட விலங்குகள் வருகை தந்தால் பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் தன்னிச்சையாக அந்த வனவிலங்குகளை ஙல்வீசி தாக்குவதோ, அல்லது அதன் அருகில் சென்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.

அதுபோன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபடும் போது யானைகள் ஆத்திரம் அடைந்து பொதுமக்களை தாக்க முயற்சிக்கும் அது மிகவும் விபரீதம் ஆகிவிடும் எனவே பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் வனவிலங்குகளுக்கு எந்தவித இடையூறும் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கடந்த இரண்டு நாட்களாக வடகரைப் பகுதியில் விவசாய நிலங்களில் சுற்றித் திரியும் யானைகளை
வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கிட்டு அதற்கு உரிய நஷ்ட ஈடு வழங்குவதற்கும் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *