பரமக்குடியில் மோதலை தடுத்த பெண் தலைமை காவலர் பரிதாப சாவு
1 min read
Woman Head Constable who prevented a clash in Paramakudi dies tragically.
29/9/2026
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள இளமனூரை சேர்ந்த தம்பதியினர் வேட்டையன், இருளாயி. இவர்களது மகள் கண்ணகி (வயது 35).இவர் பார்த்திபனூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார்.
சம்பவ நாளான நேற்று இரவு பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது பரமக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் முன்பு ஆட்டோ டிரைவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இவர்களில் ஒருவருக்கு ஆதரவாக குமாரக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கருப்புராஜா (வயது 27) என்பவரும், மற்றொருவருக்கு ஆதரவாக கல்யாணசுந்தரம் (வயது 27) என்பவரும் சென்று ஒருவரை ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கருப்புராஜாவும்,கல்யாண சுந்தரமும் காயம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து காயம் அடைந்த இருவரும் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளனர்.
மருத்துவமனை வளாகத்தினுள் கருப்புராஜா, கல்யாண சுந்தரம் ஆகியோர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனை பார்த்த மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த பார்த்திபனூர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் கண்ணகி தகராறில் ஈடுபட்ட 2 பேரையும் தடுத்துள்ளார். அப்போது கருப்புராஜா தலைமை காவலர் கண்ணகியை கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த தலைமை காவலர் கண்ணகி மயக்கமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பெண் தலைமை காவலர் கண்ணகி ( வயது 35) பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்,
பரமக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சுகுமாரன் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக பரமக்குடி நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கல்யாண சுந்தரத்தை கைது செய்தனர். தப்பிஓடிய கருப்புராஜாவை மருத்துவமனை கண்காணிப்பு கேமிரா உதவியுடன் தீவிரமாக தேடி வந்தனர்.இதன் பயனாக தலைமறைவான சிவகங்கை மாவட்டம் குமாரக்குறிச்சியை சேர்ந்த வேல்பாண்டி மகன் கருவாயன் என்ற கருப்புராஜா ( வயது 25) என்பவரை நேற்று காலை காவல் துறையினர் கைது செய்தனர்.
இறந்த தலைமை காவலர் கண்ணகியின் உடல் பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப் பட்டது.மருத்துவமனை வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.
இதனிடையே நேற்று பிற்பகல் ராமநாதபுரம் பெண் மருத்துவரை கொண்டு உடற்கூறு ஆய்வு செய்யப் பட்டது. இதனிடையே இறந்த தலைமை காவலர் கண்ணகியின் குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் ஏராளமானவர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டு, பாதுகாப்பு பணியின் போது தாக்குதலில் இறந்த தலைமை காவலர் கண்ணகியின் குடும்பத்தினருக்கு ரூ ஒரு கோடி வழங்க வேண்டும்,அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி இறந்த கண்ணகியின் உடலை வாங்க மறுத்தனர்.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஏ.டி.எஸ்.பி.கள் பாலச்சந்திரன், சுந்தராஜன் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதன்பயனாக சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு இறந்த கண்ணகியின் உடலை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெற்று கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு காவல் துறையினர் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.
அங்கு ராமநாதபுரம் டி.ஐ.ஜி. மணிவண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், ஏ.டி.எஸ்.பி.கள் பாலச்சந்திரன், சுந்தரராஜன்,காவல் துணை கண்காணிப்பாளர் சுகுமாறன் மற்றும் காவல் துறையினர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.பின்பு இறந்த பெண் தலைமை காவலர் கண்ணகியின் ஈமச் சடங்கிற்காக ரூ 25 ஆயிரத்தை அரசு சார்பில் ராமநாதபுரம் டி.ஐ.ஜி. மணிவண்ணன் அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்.
தொடர்ந்து அரசு சார்பில் காவல் துறையினரின் 30 குண்டுகள் முழங்க இறந்த பெண் தலைமை காவலர் கண்ணகியின் உடல் அடக்கம் செய்யப் பட்டது.இறந்த பெண் தலைமை காவலர் கண்ணகிக்கு ஒரு ஆண்,ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.இச் சம்பவம் பரமக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.