திருப்பதியில் மருந்து ஆலையில் பாய்லர் வெடித்து 4 தொழிலாளர்கள் பலி
1 min read
4 workers killed in boiler explosion at Tirupati pharmaceutical plant.
3/10/2026
ஆந்திரா-தமிழக எல்லையான தடா நகருக்கு அருகே அமைந்துள்ள ஸ்ரீ சிட்டி பொருளாதார மண்டலத்தில் உள்ள பிரபல மருந்தகத் தொழிற்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இன்று காலை ஷிப்ட் மாற்றத்தின் போது, வழக்கம் போல் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக அங்குள்ள நீர் பாய்லர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. பாய்லர் வெடித்த வேகத்தில் கட்டிடத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்ததில், அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு அவசரகாலத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அருகில் உள்ள மற்ற தொழிற்சாலைத் தொழிலாளர்களும் மீட்புப் பணியில் கைகோர்த்தனர்.
விபத்து நடந்த இடத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, படுகாயமடைந்த மற்றவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் இரண்டு பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
இச்சம்பவம் குறித்து அறிந்த ஆந்திரப் பிரதேச தொழில்துறை அமைச்சர் டி. ஜி. பரத் அவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக மீட்புப் பணிகளை முடுக்கிவிடுமாறும், காயமடைந்த தொழிலாளர்களுக்குத் தேவையான உயர்தர மற்றும் அவசரச் சிகிச்சைகளைத் தாமதமின்றி வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டு, அவர்களின் அடையாளங்களைக் கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பாய்லர் திடீரென வெடித்ததற்கான தொழில்நுட்பக் கோளாறு அல்லது அலட்சியம் ஏதேனும் காரணமா என்பது குறித்துப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.