October 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தோரணமலையில் போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள்

1 min read

Free coaching classes for competitive exams at Thoranamalai

11.10.2026
தென்காசி மாவட்டம், தோரணமலை ஸ்ரீமுருகன் கோவில் நூலகத்தில் அரசு வேலைவாய்ப்பை பெறுவதற்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி கிராமப்புற மாணவ, மாணவிகள் பயன்பெற வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தென்காசி–கடையம் சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற தோரணமலை ஸ்ரீமுருகன் கோவிலில் ஆன்மிகப் பணிகளுடன் கல்விப் பணி மற்றும் பல்வேறு சமுதாய நலப்பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாணவ, மாணவிகளின் அறிவாற்றலை மேம்படுத்தும் நோக்கில், மலை அடிவாரத்தில் கே.ஆதிநாராயணன்–சந்திரலீலா நினைவு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் 5,600-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

மாணவர்கள் தங்களது பொது அறிவையும், வாசிப்புத் திறனையும் வளர்த்துக் கொள்ளும் வகையில் இந்நூலகம் செயல்பட்டு வருகிறது. மேலும், கிராமப்புற மாணவ, மாணவிகள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கில், கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதுடன், பாரம்பரிய கிராமப்புற விளையாட்டுகள் மற்றும் கலைகளும் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
இதன் தொடர்ச்சியாக, கிராமப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்பைப் பெற்று தங்களது எதிர்காலத்தை வளமாக்கிக்கொள்ளும் வகையில், தோரணமலை கோவில் நிர்வாகமும், சென்னையைச் சேர்ந்த டாக்டர் பி. அண்ணாமலை ஐ.ஏ.எஸ். அகாடமியும் இணைந்து போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ மற்றும் குரூப் 4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவ, மாணவிகள் இந்தப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று பயன்பெறலாம்.

மேலும், மாணவர்கள் அண்ணாமலை ஐ.ஏ.எஸ். அகாடமியிடம் ஆன்லைன் மூலம் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில் தோரணமலை நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
பயிற்சியில் பங்கேற்க வரும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக பாவூர்சத்திரம், கடையம், ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. மேலும், வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
கிராமப்புற மாணவ, மாணவிகள் பொருளாதாரச் சிரமங்களைக் கடந்து கல்வியில் முன்னேறவும், அரசு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான தங்களது கனவை நனவாக்கவும் இந்த இலவசப் பயிற்சி வகுப்புகள் சிறந்த வாய்ப்பாக அமையும். எனவே, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் தோரணமலை முருகன் கோவில் நிர்வாகம் வழங்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *