தென்காசியில் உலக நன்மை வேண்டி108 பால்குட ஊர்வலம்
1 min read
Procession of 108 milk pots in Tenkasi for the welfare of the world.
11.10.2026
தென்காசி தென் பழனி ஆண்டவர் பாதயாத்திரை பக்தர்கள் குழு சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு ஆலயங்களில் உலக நன்மை வேண்டி பால்குடம் ஊர்வலம்நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தென்காசி மேலச் சங்கரநாராயணர் ஆலயத்தில் இருந்து பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
முன்னதாக மேலச்சங்கரன் கோவில் சங்கர நாராயணர் சமேத கோமதி அம்பாள் ஆலயத்தில் உலக நன்மை வேண்டியும் நல்ல மழை பெய்து விவசாயம் செழித்திட வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நேற்று மாலையில் காவடி முத்திரை கட்டுதல், வேலுக்கு அபிஷேகம் சிறப்பு தீபாரதனைகள் நடந்தது.
அதனைத் தொடர்ந்து நேற்று காலையில் தீபம் பார்த்து காவடியும், பால்குடம் ஊர்வலமும் நடந்தது. ஊர்வலம் தென்காசி மேலச்சங்கரன் கோவிலில் இருந்து துவங்கி தெற்கு மாசி வீதியில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி, பின்னர் அங்கிருந்து மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி, தெற்கு மாசி வீதி வழியாக தென் பழனி ஆண்டவர் கோவில் நிறைவடைந்தது.
தொடர்ந்து தென்பழனி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியோர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தென் பழனி ஆண்டவர் பாதயாத்திரை பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்..