October 17, 2026

Seithi Saral

Tamil News Channel

விருதுநகர்: சீர்மரபினர் நலவாரிய இணையத்தில் பதிவேற்றம் செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்

1 min read

Virudhunagar: Collector instructs to upload details on the Denotified Tribes Welfare Board website

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

சீர்மரபினர் நலவாரியத்தில், பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கடந்த 2008ம் ஆண்டு முதல், விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித் தொகையாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரையிலும், இயற்கை மரணத்திற்கான உதவித்தொகையாக ரூ.30 ஆயிரம் வரையிலும், ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகையாக ரூ.5,000 வரையிலும், கல்வி உதவித்தொகையாக ரூ.1,000 முதல் ரூ.8 ஆயிரம் வரையிலும், திருமண உதவித்தொகையாக ரூ.3 ஆயிரம் அல்லது ரூ.5 ஆயிரம், மகப்பேறு உதவித்தொகையாக ரூ.6 ஆயிரம், மூக்குக்கண்ணாடி செலவுத்தொகை ஈடுசெய்தல் ரூ.750, முதியோர் ஓய்வூதியமாக மாதம் ரூ.1,200 என்ற வகையின்படி வழங்கப்படுகிறது.

நலத்திட்ட உதவிகள் பெற, சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள் 18 வயது முதல் 60 வயது நிறைவு பெறாதவர்கள், அமைப்புசாரா நிறுவனங்களில் பணிபுரியும் குடும்பத்தில் ஒருவர் (அமைப்புசாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடல் உழைப்பு தொழிலில் ஈடு பட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து, நலத்திட்ட உதவிகள் பெற தகுதி பெறுகின்றனர். மேற்படி, நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல், புதுப்பித்தல், நலத்திட்ட உதவிகள் பெறுதலை எளிதாக்கும் வகையில் www.dncwb.tn.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

சீர்மரபினர் நலவாரியத்தில், ஏற்கனவே உறுப்பினராக பதிவு பெற்றவர்களின் விவரம், இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டியுள்ளதால், தங்களின் சுய விவரங்களான உறுப்பினர் அடையாள அட்டை நகல், உறுப்பினர் ஆதார் நகல் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் நகல், மொபைல் எண், குடும்ப அட்டை நகல் விவரங்களை, விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அறை எண்-505-ல் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *