October 22, 2026

Seithi Saral

Tamil News Channel

அருப்புக்கோட்டையில் நோயாளிகள் நலச்சங்க கூட்டம்

1 min read

Meeting of the Patients’ Welfare Association in Aruppukottai

22.10.2026
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் நலச்சங்க கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி தலைமையில் இன்று(22.10.2026) நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்தவும், மருத்துவமனையின் சேவைகளின் தரத்தை உயர்த்திட அரசு மருத்துவமனை நோயாளிகள் நலச்சங்கம் செயல்படுகிறது. இதன் முக்கிய நோக்கம், அரசிடமிருந்து ஒதுக்கப்பட்ட நிதி செலவினங்கள் குறித்தும், மருத்துவமனைக்கு தேவையான வசதிகள், உபகரணங்கள் உள்ளிட்ட மருத்துவமனையின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வதாகும்.

இன்று நடைபெற்ற கூட்டத்தில் நோயாளிகள் நலச்சங்கத்தின் வாயிலாக மருத்துவமனையின் தேவைகளைக் கண்டறிந்து, நோயாளிகளின் நலன் மற்றும் மருத்துவச் சேவைகளின் மேம்பாட்டிற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன்படி மருத்துவமனைக்குத் தேவையான இதய செயல்திறன் பரிசோதனைக்கருவி, பிரேதங்களைப் பாதுகாக்கும் குளிர்சாதனப்பெட்டி, அறுவை சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள், உள் நோயாளிகளுக்கு உணவு வழங்கிட ஏதுவாக மாவு அரைக்கும் இயந்திரம், இசிஜி இயந்திரம், கர்ப்பிணி தாய்மார்கள் பரிசோதனைக் கருவி (Fetal Doppler), பல் சிகிச்சை இருக்கை, சலவை இயந்திரம், கண்புரை நோய் அறுவை சிகிச்சை கருவி, குளிரூட்டும் பெட்டிகள், நோயாளிகள் பரிசோதனை மேஜை, மயக்க மருந்து பணி நிலையம் (Anesthesia work station), இரத்த பரிசோதனை கருவி, மின் தூக்கி பழுது சரிசெய்தல், நோயாளிகளுக்கான கட்டில்கள், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை கருவி, அவசரகால படிக்கட்டு கட்டுதல், புதிய கட்டிடங்களுக்கு ஆக்ஸிஜன் வசதிகளை ஏற்படுத்துதல், குடிநீர் தொட்டி, கண்காணிப்பு கேமரா, அறிவிப்பு பலகை நிறுவுதல், பிணவறையை மாற்றுதல் உள்ளிட்ட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களின் மருத்துவ சேவைகள் சிறப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு உட்பட்டு கிடைக்கும் நிதியைப் பயன்படுத்தி நோயாளிகளுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துதல், ஒவ்வொரு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் சில உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து பட்டியலிடப்பட்டு, சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் முன்னுரிமை அடிப்படையில் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பிரிவுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களிடம் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில், இணை இயக்குநர்(மருத்துவப்பணிகள்) மரு.காளிராஜ், மருத்துவத்துறை அலுவலர்கள் மற்றும் நோயாளிகள் நலச்சங்க ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *