விருதுநகர்: அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆட்சியர் ஆலோசனை
1 min read
Virudhunagar: Collector holds consultations with political party representatives
23.10.2026
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்புத்திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி தலைமையில் இன்று(23.10.2026) நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஷரண்யா அறி பேசியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் 1.01.2027 தேதியினை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களைத் திருத்தம் செய்வதற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகளை (SSR) மேற்கொள்ளும் பொருட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக இளம் வாக்காளர்கள் /முதல்முறை வாக்காளர்கள் சேர்த்தல் மற்றும் வாக்குச்சாவடிகளை மறுசீரமைத்தல் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் 1200 வாக்காளர்களுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும் என ஆணையம் வலியுறுத்தி வருகிறது.
அதன்படி, விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பதிவு அலுவலர்கள் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, அது குறித்த பரிந்துரைகளை வழங்கி உள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரை 2001 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், தற்போது மறுசீரமைப்பு செய்ய உத்தேசித்துள்ளதன் அடிப்படையில் கூடுதலாக 17 வாக்குச்சாவடிகள் உருவாக்கம் செய்யப்பட உள்ளது.
தேசிய அளவில் வாக்குச்சாவடிகளை மறுசீரமைக்கும் பணி 02.11.2026க்குள் முடிக்க வேண்டும் என்றும், ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை 12.11.2026 அன்று வெளியிடபடும் எனவும், திருத்தம் தொடர்பான விண்ணப்பங்களை (சேர்த்தல், நீக்கல், திருத்தம்) 12.11.2026 முதல் 11.12.2026 க்குள் பெற்று 28.12.2026 க்குள் தீர்வு காணப்படும் என்றும், 04.01.2027 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் வாக்காளர் பட்டியலில் எந்தவொரு தகுதியான வாக்காளரும் விடுபடாமலும், தகுதியற்ற ஒருவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வகையில் இப்பணிகள் நடைபெற உள்ளது.
வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்காத அரசியல் கட்சியினர்கள் வாக்குச்சாவடி முகவர்களை விரைவாக நியமனம் செய்திட வேண்டும். வாக்குச்சாவடி முகவர்களில் மாற்றம் இருப்பின் திருத்தம் செய்து வழங்கிட வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகளை தரமாகவும் சரியான முறையிலும் மேற்கொள்வதற்கு ஏதுவாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் தகுந்த ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சோமசுந்தர சீனிவாசன், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வருவாய் வட்டாட்சியர்கள், மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.