October 31, 2026

Seithi Saral

Tamil News Channel

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜனவரி 25-ந்தேதி தொடக்கம்

1 min read

Nationwide census to begin on January 25th

31.10.2026
பனிப்பிரதேசங்கள் மற்றும் தேர்தல் நடைபெறும் பகுதிகளை தவிர நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜனவரி 25-ந்தேதி தொடங்குகிறது.

2021-ம் ஆண்டு நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு (2027) நடத்தப்படுகிறது. இதற்காக ரூ.12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு வீட்டுக்கணக்கெடுப்பு பணி (முதல்கட்டம்) கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இதன் தொடர்ச்சியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு (2-ம் கட்டம்) வருகிற ஜனவரி மாதம் 25-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 28-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை உள்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டது.

அதன்படி, 25-1-2027 முதல் 28-2-2027 வரை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்றும், அதன் மீதான மறுஆய்வு 1-3-2027 முதல் 5-3-2027 வரை நடைபெறும் எனவும் கூறப்பட்டு உள்ளது. மேலும் மக்கள் தாங்களாகவே ஆன்லைனில் பதிவு செய்யும் சுயமான கணக்கெடுப்புக்காக இணையதளம் 10-1-2027 முதல் 24-1-2027 வரை 15 நாட்கள் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த கணக்கெடுப்பு மணிப்பூர், கோவா, உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் பனிபடர்ந்த பகுதிகளான இமாசலபிரதேசம், லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறாது.

மணிப்பூர் மாநிலத்துக்கான தேதி தனியாக அறிவிக்கப்பட உள்ளது. அதுபோல உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக கணக்கெடுப்பு நடத்தப்படாது. தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா உள்ளிட்ட மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *