தீபாவளிக்கு இரண்டு நாட்கள் பசுமை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
1 min read
Supreme Court permits bursting of green firecrackers for two days during Diwali
2.11.2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில், 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில், ஆண்டு தோறும் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பதால், நவம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர்கால காற்று மாசு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதே காலகட்டத்தில் தீபாவளி பண்டிகையும் வருவதால், பட்டாசு வெடிக்க டில்லி அரசு சில ஆண்டுகளாக தடை விதித்து வருகிறது.
அரசின் இந்த தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பிரசன்னா பி.வராலே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தீபாவளி பண்டிகைக்கு மத, சமூக மற்றும் உணர்வுப்பூர்வமான முக்கியத்துவம் உள்ளது. அதேநேரத்தில், சுற்றுச்சூழலை சீரழிப்பது இந்தப் பண்டிகைகளின் நோக்கத்தையே சிதைத்துவிடும். அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள வாழும் உரிமை என்பது, ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் மாசுபாடு இல்லாத சூழலில் வாழ்வதற்கான உரிமையையும் உள்ளடக்கியது. இது ஏற்கனவே நிலைநாட்டப்பட்ட ஒரு கருத்து.
எனவே, இதை மீண்டும் மீண்டும் கூற வேண்டிய அவசியமில்லை. ஒரு தனிநபர், மதச்சாயம் கொண்ட ஒரு குறிப்பிட்ட செயலில் ஈடுபடுவதற்கான உரிமை என்பது, நிபந்தனைக்கு உட்பட்டது. அது அரசியலமைப்பு சட்டத்தின் கட்டுப்பாடுகளை மீற முடியாது.
டெல்லி மற்றும் -தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசு அதிகரிப்பதற்கு பட்டாசுகளை வெடிப்பது ஒரு முக்கிய காரணம் என்பதை, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருமே ஒப்புக் கொண்டுள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலோ அல்லது அதிகாரிகளின் சொந்த முயற்சியிலோ எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எதிர்பார்த்த பலனை தரவில்லை என்பதையும் இந்த நேரத்தில் ஒப்புக் கொள்ள வேண்டும்.
எனவே, சிக்கல் என்பது நடைமுறைப்படுத்துவதில் உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரிடையேயும் இன்னும் சிறந்த ஒருங்கிணைப்பு இருக்க வேண்டியது அவசியம். அதிகார அமைப்புகள் மேற்கொள்ளும் ஒழுங்குமுறைப்படுத்துதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகிய பணிகள், பண்டிகை காலத்தில் மட்டுமல்லாமல், ஆண்டு முழுதும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். பண்டிகை காலம் முடிந்த பிறகும், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து, அவ்வப்போது மறுஆய்வு செய்ய வேண்டும்.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் டெல்லி மாசுக்கட்டுப்பாட்டுக் குழு ஆகியவற்றின் கண்காணிப்பு நிலையங்களிலிருந்து, காற்றின் தர குறியீட்டு தரவுகளை சேகரிக்க வேண்டும். காற்று மாசு காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறித்த விபரங்களை, டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் இருந்து சேகரிக்க வேண்டும்.
தீபாவளி பண்டிகை என்பது மக்களிடையே மதம், சமூகம், உளவியல் மற்றும் உணர்வு ரீதியான பிணைப்பைக் கொண்டிருக்கிறது. நம்பிக்கை, நல்வாழ்வு மற்றும் செழிப்பு நிறைந்த ஒரு நேர்மறையான சூழலை தீபாவளி பண்டிகை உருவாக்குகிறது.அதேநேரத்தில், சுற்றுச்சூழல் சீரழிய அனுமதிப்பது, அனைத்து உயிரினங்களுக்கும் உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இதுவே, பண்டிகையின் நோக்கத்தையே சிதைத்து, கொண்டாட்டங்களின் அர்த்தத்தையே இல்லாமலாக்கி விடும்.
நம் நாட்டின் ஞானியரும், சிந்தனையாளர்களும் சுற்றுச்சூழலை மதத்தின் ஒரு பிரிக்க முடியாத அங்கமாக கருதினர். அவர்களை பொறுத்தவரை அனைத்து உயிரினங்களும் ஒன்றே. மனிதர்களைத் தவிர, பிற அனைத்து உயிரினங்களிலும், வடிவங்களிலும் உயிர் உள்ளது. ஆழ்ந்த ஞானம் கொண்ட நம் முன்னோரின் பார்வையில், பண்டிகை கொண்டாட்டங்கள் உட்பட எந்தவொரு மதச் சடங்கும், இத்தகைய உயர்ந்த சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் அமைய வேண்டும்.
காற்று, நீர், நெருப்பு, நிலம் மற்றும் ஆகாயம் ஆகிய இயற்கை கூறுகளை, தெய்வங்களாக கருதி, மிகுந்த மரியாதையுடன் வழிபடும் முறையிலிருந்தே இது தெளிவாகிறது.
தீபாவளி என்பது ஒளியின் பண்டிகை. பல நூற்றாண்டுகளாக இது ஒரு தேசிய பண்டிகையாக உருவெடுத்துள்ளதோடு, இன்று சர்வதேச பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரும் தீபாவளியை கொண்டாடுகின்றனர். விளக்கேற்றி வழிபாடு நடத்தி, தீபாவளியை முன்னோர் கொண்டாடி இருக்கின்றனர்.
சில நுாற்றாண்டுகளுக்கு முன், நம் நாட்டில் வெடிமருந்து அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கொண்டாட்ட முறையில் மாற்றம் ஏற்பட்டு, பட்டாசுகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
பட்டாசு வெடிப்பது என்பது பண்டிகையை கொண்டாடுவதற்கான ஒரு சமயச் சடங்காக இருந்தாலும், அது கடுமையான சுற்றுச்சூழல் மாசுபாட்டை, குறிப்பாக காற்று மற்றும் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துவதுடன், திடக்கழிவுகளையும் உருவாக்குகிறது. கட்டுப்பாடு இல்லாத இந்த நடைமுறை அனைவரையும் பாதிக்கிறது. குறிப்பாக குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம் ஒரு தனித்துவமான புவியியல் அமைப்பைக் கொண்டுள்ளது. இங்கு காற்றின் வேகம் குறைவாக இருப்பதால், காற்று தடையின்றி வெளியேற முடியாமல், காற்றில் மாசு நீண்ட நேரம் நீடிக்கிறது. மேலும், குளிர்காலத்தில் வெப்பநிலை தலைகீழ் மாற்றம், இந்தச் சூழலை மேலும் மோசமாக்குகிறது.
இருப்பினும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும், இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரையிலும் பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. நவம்பர் 9-ம் தேதி முதல், ஏற்கனவே அமலில் இருக்கும் பட்டாசுக்கான முழுமையான தடை மீண்டும் நடைமுறைக்கு வரும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.