செவ்வாய் கிரகத்தை போன்ற செயற்கை வாழ்விடத்தில் 4 விண்வெளி வீரர்கள்
1 min read
4 astronauts in an artificial habitat resembling the planet Mars
3.11.2026
நாசா வரும் 2030-ம் ஆண்டுக்குள் மனிதர்களை நேரடியாகச் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
நமது சூரியக்குடும்பத்தில் 4-வது கோளாக இருப்பது செவ்வாய் கிரகம் ஆகும். பூமிக்கு அடுத்தபடியாக மனிதர்கள் வாழத் தகுதியான ஒரு கோள் செவ்வாய் கிரகம் தான் என்பது விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் நீண்ட கால நம்பிக்கையாகும். இதனால், அங்கு ரோபோக்களை அனுப்பி ஆய்வு செய்து வரும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வரும் 2030-ம் ஆண்டுக்குள் மனிதர்களை நேரடியாகச் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
பூமியில் இருந்து பல கோடி கி.மீ தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் சென்றால், அங்குள்ள கடுமையான சூழலை எப்படி எதிர்கொள்வார்கள், அவர்களின் உடல் மற்றும் மனநிலை எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே சோதித்துப் பார்ப்பது மிக அவசியமான ஒன்றாகும்.
இதற்காக, நாசா தனது டெக்சாஸ் மையத்தில் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் 1,700 சதுர அடியில் செவ்வாய் கிரகத்தைப் போன்றே ஒரு செயற்கை வாழ்விடத்தை உருவாக்கியது.
கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி ஜேம்ஸ் ஸ்பைசர், ராஸ் எல்டர், எல்லென் எல்லிஸ், மேத்யூ மாண்ட்கோமரி ஆகிய 4 நாசா விஞ்ஞானிகள், வெளி உலகத்துடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக்கொண்டு, தங்களின் சுய விருப்பத்தின் பேரில் இந்தச் செயற்கை செவ்வாய் கிரகத்திற்குள் நுழைந்தனர். அங்கு மிகக் கடினமான பயிற்சிகளை அவர்கள் மேற்கொண்டனர்.
செவ்வாய் கிரகத்தின் மண்ணைப் போன்ற அமைப்பில் பயிர்களை விளைவிப்பது, விண்வெளியில் ஏற்படும் தகவல் தொடர்பு தாமதங்களைச் சாமர்த்தியமாக கையாளுவது போன்ற சோதனைகளை மேற்கொண்டனர். மேலும், மிகக் குறைந்த அளவிலான தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களைக் கொண்டு அந்த சூழலுக்கு ஏற்ப அவர்கள் வாழப் பழகினர்
இந்நிலையில், 378 நாட்கள் கடின வாழ்க்கை முறை மற்றும் பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு அந்த 4 வீரர்களும் இன்று முன்தினம் பாதுகாப்பாக வெளி உலகத்துக்கு வந்தனர். அவர்களை நாசா அதிகாரிகள் மலர்க்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். செயற்கையாக உருவாக்கப்பட்ட செவ்வாய் கிரகம் போன்ற வாழ்விடத்தில் 4 விண்வெளி வீரர்கள் 378 நாட்கள் வெற்றிகரமாக தங்கியிருந்து, திரும்பி இருப்பது விண்வெளி ஆராய்ச்சியின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.