சபரிமலை பக்தர்கள் தரிசனத்துக்கு முன்பதிவு செய்ய 6 மொழிகளில் புதிய செயலி
1 min read
New app in 6 languages for Sabarimala pilgrims to book their ‘darshan’
11.11.2026
சபரிமலை பக்தர்களின் நலன் கருதி, மலையாளம் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் டிஜிட்டல் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு வருகிற 16-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 17-ந் தேதி முதல் மண்டல பூஜை வழிபாடுகள் நடைபெறும். மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதியும், மகர விளக்கு மற்றும் ஜோதி தரிசனம் 2027 ஜனவரி மாதம் 14-ந் தேதியும் நடைபெறுகிறது. நடப்பு சீசனை முன்னிட்டு சபரிமலை தொடர்பான அனைத்து விவரங்களையும் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் sabariportaldcpta.in என்ற பெயரில் புதிய இணையதள செயலி (போர்ட்டல்) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் நிசாமுதீன் கூறியதாவது:-
அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக புதிய இணையதள செயலி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் என 6 மொழிகளில் செல்போன், கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் விதத்தில் ‘கியூ ஆர்’ கோடுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர ‘வாட்ஸ் அப் சார்ட் போர்ட்’ போன்றவையும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதனை பயன்படுத்தி அய்யப்ப பக்தர்கள் சபரிமலை தொடர்பான அனைத்து விவரங்களையும் எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
அத்துடன் இந்த செயலி மூலம் பக்தர்கள் தங்களது பிரச்சினைகளை புகார்களாக தெரிவிக்கலாம். குறிப்பாக காணாமல் போனவர்கள் விவரங்கள், தவறவிட்ட பொருட்கள் குறித்த விவரங்களை இந்த செயலியில் புகாராக பதிவு செய்யும் பட்சத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த செயலியில் ஆன்லைன் முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது. அத்துடன் வாகன நிறுத்தம், ரெயில், பஸ் போக்குவரத்து குறித்த தகவல்களும் கிடைக்கும். இந்த சேவை முற்றிலும் இலவசம்.
இவ்வாறு அவர் கூறினார்.