November 13, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜம்மு-காஷ்மீரில் மாயமான 2 சிறப்பு போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை

1 min read

2 Special Police Officers who went missing in Jammu and Kashmir shot dead

12.11.2026
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் மாயமான 2 சிறப்பு காவல்துறை அதிகாரிகள் (எஸ்பிஓ) குண்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களது அரசுத் துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளதால், பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தின் டச்சன் பகுதியில் உள்ள கியார் கிராம முகாமில் சிறப்பு அதிரடிப் படையில் (SOG) பாபி சந்த் (வயது 57) மற்றும் ரஷ்பால் குமார் (வயது 45) ஆகியோர் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் புதன்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில், கியார் முகாமிலிருந்து மார்வா பகுதியின் தர்னா ராணுவ முகாமுக்கு செல்லும் வழியில் உள்ள வனப்பகுதியில் இவர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் திடீரெனத் துப்பாக்கி சூடு சத்தம் கேட்டுள்ளது. அதன் பின்னர் இருவரையும் தொடர்பு கொள்ள முடியாததால், அவர்கள் மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து, ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் இணைந்து அடர்ந்த வனப்பகுதியில் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் தர்னா டாப் வனப்பகுதியில் பாபி சந்த் மற்றும் ரஷ்பால் குமார் ஆகிய இருவரும் குண்டு காயங்களுடன் சடலமாகக் கிடப்பதை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்தனர்.

உயிரிழந்த அதிகாரிகள் இருவரும் வைத்திருந்த ஏகே-47 ரகத் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். ஆயுதங்களைக் கொள்ளையடிக்கும் நோக்கில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து இவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியிருக்கலாம் என பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, டச்சன் மற்றும் மார்வா வனப்பகுதிகள் முழுவதும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. தப்பியோடிய பயங்கரவாதிகளைப் பிடிக்க ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் அப்பகுதியில் தொடர்ந்து தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *