November 14, 2026

Seithi Saral

Tamil News Channel

அரசு ஊழியர்கள் இனி மின்சார கார்களையே வாங்க மத்திய அரசு உத்தரவு

1 min read

Central government mandates that government employees must henceforth purchase only electric cars

12.11.2026
கார்பன் உமிழ்வு, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க அரசு ஊழியர்களின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டுக்கு இனி மின்சார கார்களையே வாங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவை 2070-ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு இல்லாத நாடாக மாற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. சர்வதேச எரிசக்தி முகமையின் தகவலின்படி, நமது நாட்டின் மொத்த கார்பன் உமிழ்வில் போக்குவரத்து துறையின் பங்கு 12 சதவீதமாக உள்ளது.

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 90 சதவீதம் இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. எனவே மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைக்கவும், வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தவும் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக மத்திய அரசு ஊழியர்களுக்கான அதிகாரப்பூர்வ பயன்பாட்டு கார்களாக இனி மின்சார வாகனங்களையே வாங்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் கார்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அரசு அலுவலகங்களில் மின்சார வாகனங்களை பயன்படுத்தும் இந்த முடிவு, நாட்டின் வாகன துறையில் பசுமை மாற்றத்தை விரைவுபடுத்தும் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.

இதுதொடர்பாக மத்திய செலவின துறை வெளியிட்டுள்ள அறி விக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய அமைச்சகங்கள் மற்றும் அரசு துறைகள், தற்போது பயன்பாட்டில் உள்ள பெட்ரோல், டீசல் கார்கள் பழுதடைந்து மாற்றப்படும்போதோ அல்லது பயன்பாட்டில் இருந்து ஓய்வு கொடுக்கும்போதோ அவற்றுக்கு பதிலாக மின்சார கார்களையே வாங்க வேண்டும். மின்சார வாகனங்களுக்கு பதிலாக பெட்ரோல் அல்லது டீசல் கார்களை வாங்க விரும்பும் துறைகள், அதற்கான காரணங்களை விளக்கி விரிவான திட்ட அறிக்கையை மத்திய செலவின துறையிடம் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும்.

மின்சார வாகனங்களின் கொள்முதலுக்கான உச்சவரம்பு ரூ.20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் இரண்டு வகையான எரிபொருட்களை பயன்படுத்தும் கலப்பின கார்களுக்கு இந்த வரம்பு ரூ.10 லட்சமாக உள்ளது. வாகனங்களின் விலை, அவற்றின் பயன்பாட்டுக்கான பராமரிப்பு செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *