November 19, 2026

Seithi Saral

Tamil News Channel

உலக அதிசயத்தில் தஞ்சை பெரிய கோவிலை சேர்க்க பரிந்துரை- நாடாளுமன்ற குழு தலைவர் தகவல்

1 min read

Recommendation to include Thanjavur Big Temple among the wonders of the world – Information from the Parliamentary Committee Chairperson

17.11.2026
மத்திய போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் சஞ்சய் குமார் ஜா தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர் திங்கட்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது கல்லணை மற்றும் தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து பெரிய கோவில் குறித்து சஞ்சய் குமார் ஜா கூறியதாவது:
“தஞ்சாவூர் பெரிய கோவில் இந்தியாவின் ஓர் அதிசயம். இதுவரை வட இந்தியாவில் அமைந்துள்ள தாஜ்மஹாலை மட்டுமே மிகப்பெரிய அதிசயமாக நினைத்திருந்தோம். ஆனால், தஞ்சாவூர் பெரிய கோவில் அதைவிட பிரமாண்டமாகவும் சிறப்பாகவும் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய பிரமாண்டமான கோவிலை உருவாக்கியிருப்பது வியப்பளிக்கிறது. இது நமது நாட்டின் விலைமதிப்பற்ற பொக்கிஷமாகும்.

ஏற்கனவே யுனெஸ்கோ அமைப்பின் உலக பாரம்பரிய நினைவுச்சின்ன பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரிய கோவிலை, உலக அதிசய பட்டியலில் சேர்க்க நாடாளுமன்ற நிலைக்குழு சார்பில் நிச்சயம் பரிந்துரை செய்யப்படும்”
இவ்வாறு அவர் கூறினார்.

மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோவில், சோழர்களின் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக காட்சியளிக்கும் இக்கோவில், உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகளையும் வரலாற்று ஆர்வலர்களையும் ஈர்த்து வருகிறது. இந்நிலையில், பெரிய கோவிலை உலக அதிசய பட்டியலில் இடம்பெறச் செய்ய பரிந்துரைக்கப்படும் என்ற அறிவிப்பு தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *