தென்காசியில் பெண் குழந்தைகளுக்கான வரவேற்பு பெட்டகம் வழங்கும் விழா
1 min read
Event for the distribution of welcome kits for baby girls in Tenkasi
24.11.2026
தென்காசி மாவட்டம், மேலகரம் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நேற்று (24.11.2026) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கான வரவேற்பு பெட்டகத்தினை தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். ராணி ஸ்ரீகுமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர். மோனிகா ராணா, வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் பேசும்பொழுது தெரிவித்ததாவது-
பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்திலும் பெண்களுக்கு கல்வி அறிவு வழங்கும் விதத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு பெண் குழந்தை வீட்டில் பிறக்கிறது என்றால் எல்லோரும் என்ன சொல்வார்கள் மகாலெட்சுமி பிறந்து இருக்கிறாள் என்று சொல்வார்கள். அந்த பெண் குழந்தை இந்த சமுதாயத்தில் எந்த அளவிற்கு கல்வி அறிவு பெற்று முன்னேறுகிறதோ அதை பொறுத்து தான் இந்த சமூகத்தின் வளர்ச்சி உள்ளது. அதே நேரத்தில் அந்த பெண் குழந்தைகளுக்கு இந்த சமூகம் எந்த அளவிற்கு பாதுகாப்பு கொடுக்கிறது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
பெண் குழந்தைகளுக்கு கல்வி மிகவும் அவசியமாகும். ஒரு பெண் கல்வி கற்றால் அந்த குடும்பமே முன்னேறும், குடும்பம் முன்னேறினால் இந்த சமூகம் முன்னேறும் இந்த நாடும் முன்னேறும். நம் தமிழ்நாட்டில் பெண்கள் இந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் தமிழ்நாட்டில் பெண் கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார்கள். கல்விக்கான திட்டங்கள் நிறைய செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. இன்று நாட்டிலேயே பெண்கள் முன்னேற்றத்தில் தமிழ்நாடு முதன்மையான மாநிலமாக உள்ளது. கடந்த வாரத்தில் பெண் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மாநாட்டிற்கு சென்றிருந்தேன், அங்கு அனைவரும் பேசியது என்வென்றால் பெண்களுக்கு கல்வி மிகவும் அவசியமானது என்பது தான். கல்வி இருந்தால்தான் பெண்கள் பொருளாதார சுதந்திரத்தை அடைய முடியும். பெண் குழந்தைகளுக்கு யாரோ கொடுக்கிற சலுகை அல்ல இது நம் அனைவரின் உரிமையாகும்.பெண் குழந்தைகளை வீட்டில் வளர்க்கும் பொழுது எந்த ஒரு பாகுபாடும் காட்டாதீர்கள். எங்கிருந்து இந்த பாகுபாடு ஆரம்பமாகிறது என்றால் வளரும் பொழுது, படிக்க வைக்கிறதிலிருந்து எல்லா விஷயத்திலும் இந்த பாகுபாடு இருந்து கொண்டே இருக்கிறது. நம் தமிழ்நாடு பெண் கல்வி முன்னேற்றத்திலும் என அனைத்திலும் முதன்மையான மாநிலமாக உள்ளது. மேலும் பெண் குழந்தைகளின் திருமணம் என்பது இன்றும் இருந்துகொண்டு தான் இருக்கிறது. பெண் குழந்தைகளின் திருமண விஷயத்தை கேள்விப்பட்டால் மாவட்ட நிர்வாகத்தின் அவசர எண்ணை அழைக்க வேண்டும். அதே போல் பெண் குழந்தைகள் பாதுகாப்பதற்காக அவர்கள் வளரும் போதே தற்காப்பு கலைகளை கற்றுக்கொடுக்க வேண்டும்.பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் அதுவே மாற்றத்திற்கு உறுதுணையாக அமையும். பெண் குழந்தைகள் படித்தால்தான் இந்த நாடு முன்னேறும் என தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு-ராணி ஸ்ரீகுமார் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி.பே.மதிவதனா, மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர்.வி.கோவிந்தன், மைய நிர்வாகி ஒருங்கிணைந்த சேவை மையம், தென்காசி செல்வி.ஜெயராணி மற்றும் தாய்மார்கள் பலர் கலந்து கொண்டனர்.