குற்றாலம் பேரூராட்சி பகுதி கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
1 min read
Plastic items seized from shops in the Courtallam Town Panchayat area
24.11.2026
தென்காசி மாவட்டம். குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளதா என்பதை செயல் அலுவலர் ஜா. மாணிக்கராஜ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்த போது பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
குற்றாலத்தில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தலஅய்வின்போதும், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரின் ஆய்வுக்கூட்டத்தின் போதும் வழங்கிய அறிவுரைகளின்படி குற்றாலம் பேரூராட்சி பகுதிகளிலுள்ள வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் மற்றும் பொதுஇடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கும் பொருட்டு குற்றாலம் பேரூராட்சி நிர்வாக அலுவலர் ஜா. மாணிக்க ராஜ், மேற்பார்வையாளர் ம.சந்தானகுமார் மற்றும் பேரூராட்சி பணியாளர்களால் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியவர்களுக்கும். அதனை விற்பனை செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், குற்றாலம் பேரூராட்சி பகுதிகளில் 500 மில்லி, 1 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது உரிய சட்டவிதிகளை பின்பற்றி வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளை மூடி முத்திரையிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் ஜா.மாணிக்கராஜ் தெரிவித்துள்ளார்.