November 28, 2026

Seithi Saral

Tamil News Channel

உச்ச நீதிமன்ற உத்தரவை மீற முதல்வர், அமைச்சர்களின் தலையீடு உள்ளதா? பிரமாண பத்திரம் தாக்கல் செய்யக் கோரி மனு

1 min read

Is there any involvement by the Chief Minister or ministers in the violation of the Supreme Court’s order?

27.11.2026
திருப்பரங்குமன்றம் மலையில் உள்ள தீபத்துாணில் இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மீற, தமிழக முதல்வர் விஜய் அல்லது அவரது அமைச்சர்கள் யாரேனும் அறிவுறுத்தல் வழங்கினரா என்பதை வெளிப்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மலை உச்சியில் உள்ள தீப்துாணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி ஹிந்து தமிழர் கட்சியை சேர்ந்த ராம ரவிக்குமார் கடந்த ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், அந்த மனுவை விசாரித்து தீபத்துாணில் ஆண்டுதோறும் தீபம் ஏற்ற அனுமதி வழங்கினார். இதை இரு நீதிபதிகள் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வும் உறுதி செய்தது.

இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 20ம் தேதி, இந்த ஆண்டு மட்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், கடந்த 24 அன்று கார்த்திகை தினத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் தீபம் ஏற்றப்படவில்லை. இதற்காக மதுரை கலெக்டர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அதில், மனப்பூர்வமாக மன்னிப்பு கோருவதாகவும் கலெக்டர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சூழலில் ராம ரவிக்குமார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக ஒரு நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அரசு அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் என 11 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அரசு மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் தமிழக முதல்வர் விஜய், அமைச்சர்கள் தலையீடு இதில் இருக்கிறதா என்பதை தமிழக தலைமை செயலர் தனிப்பட்ட பிரமாண பத்திரம் மூலம் தாக்கல் செய்ய வேண்டும். அரசியல் நிர்வாகத்திற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் இடையே பரிமாறப்பட்ட கோப்புக் குறிப்புகள், ஆலோசனைக் கூட்ட விவரங்கள், உளவுத்துறை அறிக்கைகள் மற்றும் மின்னணுத் தகவல் தொடர்புகளைப் பாதுகாத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தவறியது சாதாரண நிகழ்வல்ல. உத்தரவை மீறியதற்கான பொறுப்பு அதிகாரிகளோடு நின்றுவிடாமல், அதன் மூலத்தை கண்டறிய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றாத விவகாரம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் மற்றும் இடைக்கால மனுக்கள் அனைத்தும் இன்று விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *