June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

களம் இறங்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி- வெற்றி காண்பாரா?

1 min read

Edappadi Palanisamy has take field work- Will he succeed?

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. இந்த சட்டசபைத் தேர்தல் புதுமையான களத்தை காண்கிறது. காரணம் முக்கிய தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத தேர்தல். இந்த தேர்தல் முடிவு எப்படி அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.
தி.மு.க.வை பொறுத்தவரை கருணாநிதி உயிருடன் இருக்கும்போதே தனக்கு அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் என்று புரிய வைத்துவிட்டார். எனவே தி-.மு.க.வினர் அனைவரும் தி.மு.க. வெற்றிபெற்றால் மு.க.ஸ்டாலின்தான் முதல்&அமைச்சர் என்ற நோக்கில் பிரசாரம் செய்வார்கள். அதை அவர்கள் முழுமனதுடன் ஏற்றே உள்ளனர். அவர்கள் அடுத்து அமைய உள்ளது தி.மு.க. ஆட்சிதான் என்று முழுமையாக நம்புகிறார்கள்.
அ.தி.மு.க. வை பொறுத்தவரை அப்படி அல்ல. ஜெயலலிதா இருக்கும்போதே யாரையும் தனது வாரிசு என்று நேரடியாக அறிவிக்கவில்லை. ஆனால் தான் பதவியை விட்டு விலகும் சூழ்நிலை ஏற்பட்டபோதெல்லாம் ஓ.பன்னீர் செல்வத்தை தனக்குப்பதில் பதவியில் அமர வைத்தார். அந்த எண்ணத்தில்தான் ஜெயலலிதா மறைந்த பின்னரும் கொஞ்ச நாள் அவர் முதல்வராக இருந்தார். அந்த குறுகிய காலத்தில் கூட அவரது செயல் திறன் எல்லோராலும் பாராட்டப்பெற்றது.

சசிகலா

ஆனால் சசிகலா முதல் அமைச்சர் பொறுப்புக்கு ஆசைப்பட்டு அ.தி.மு.க. என்னும் அசையா கோட்டையை ஆட்டம் காண வைத்துவிட்டார். அவர் சிறை தண்டனை பெற்றபிறகு தனக்கு வேண்டிய ஆள் என எடப்பாடி பழனிசாமியை முதல் அமைச்சர் பதவியில் அமர வைத்தார். சசிகலா நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகிவிட்டது. எடப்பாடி பழனிசாமியும் ஒ.பன்னீர் செல்வமும் ஒன்றாகிவிட்டனர். அதற்கு காரணம் பிரதமர் மோடி என்று கூறினாலும் அந்த ஒற்றுமைதான் அ.தி.மு.க. ஆட்சி தொடர்வதற்கு வழிகாட்டியுள்ளது.
வருகிற சட்டமன்றத் தேர்தலை அ.தி.மு.க. ஜெயலலிதா இல்லாமல் சந்திக்க உள்ளது. பொதுவாக யார் முதல்அமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்தால்தான் அந்தக் கட்சிக்கு பலமாக இருக்கும். அதை அ.தி.மு.க. அறிந்தே வைத்திருக்கிறது. அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்றால் எடப்பாடி பழனிசாமிதான் முதல் அமைச்சர் என்று கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. அதை பெரும்பாலான அ.தி.மு.க.வினர் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.

எடப்பாடி பழனிசாமி

எனவே தேர்தலுக்கான காயை எடப்பாடி பழனிசாமி இப்போதே நகர்த்த ஆரம்பித்துவிட்டார். கடந்த சில மாதங்களாக அதற்கான நடவடிக்கையில் இறங்கிவிட்டார். அவரது சில திட்டங்கள் வரவேற்கதக்கதாக உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இன்னொரு ஏரியை தயார் படுத்திவிட்டார். மேலும் பல்வேறு கல்குவாரி குளங்களையும் இணைக்க நடவடிக்கை எடுத்து உள்ளார். காவிரி&கோதாவரி நதிகளை இணைக்க காலக்கெடுவையும் விதித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி கொண்டு வர மத்திய அரசிடம் அனுமதியும் பெற்றுவிட்டார்.
இது ஒருபுறம் இருக்க மக்களை கவரும் நடவடிக்கையிலும் இறங்கிவிட்டார். அவர்கள் வெளியூர் பயணத்தை காரிலேயே மேற்கொள்கிறார். வழியில் 10 பேர் கூடி நின்றால்கூட இறங்கி அவர்களிடம் பேசுகிறார். குறைகளை கேட்கிறார். மேலும் தீராத பிரச்சினை என்று கூறப்பட்ட ஹைரோகார்பன் திட்டத்திற்கு மூடுவிழா நடத்த வழி கண்டுவிட்டார். தந்தி டிவியில் அவர் தான் ஒரு விவசாயி மகன் என்பதை முன்னிலை படுத்தினார். அதற்கு மகத்தான வரவேற்பு கிடைத்ததை அடுத்து அவர் தான் ஒரு விவசாயி என்று அடிக்கடி கூறி, அவர்களுக்காக பாடுபடுவேன் என்று உறுதி அளித்துள்ளார். விவசாயிகள் பாராட்டு விழா நடத்தும் அளவுக்கு கொண்டு வந்துவிட்டார்.

நாற்று நட்டார்

நாகப்பட்டினத்தில் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டுவிழாவுக்கு செல்லும் வழியில் திருவாரூர் மாட்டம் சித்தமல்லியில் வயல்வெளியில் இறங்கி நாட்டு நட்டு போஸ் கொடுத்தார். வேட்டியை மடித்துக்கட்டி சேற்றில் இறங்கியதை பார்த்து பலர் வியந்தனர்.
இப்படி பல்வேறு அதிரடி நடவடிக்கையில் இறங்கி மக்கள் மனதில் இடம் பிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நிருபர்களை சந்திக்க தயாராகிறார். கருணாநிதிக்கு அடுத்து நிருபர்களை சந்திக்க துணியும் நபராக விளங்குகிறார்.

கை கொடுக்குமா?

இப்படி எல்லாம் அதிரடி நடவடிக்கையில் இறங்கினாலும் இதுவெல்லாம் தேர்தலில் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். காரணம் பொதுமக்களை பொறுத்தவரை இவர் புதுமுகம்தான். மேலும் கூட்டணி என்பது அவசியமாகி விட்டது. அ.தி.மு.க யார்&யாருடன் கூட்டணி வைக்கப்போகிறது என்பதை பொறுத்தும் வெற்றி&தோல்வி அமையும். தி.மு.க.வை பொறுத்தவரை தற்போதுள்ள கூட்டணி நீடிக்கும் என்பதை உறுதியாக சொல்லலாம். ஆனால் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் என்ன முடிவு எடுக்கும் என்று சொல்ல முடியாது.
அ.தி.மு.க.வை பாரதீய ஜனதா பின்னால் இருந்து இயக்குவதாக பலர் சொல்கிறார்கள். கூட்டணி விசயத்தில் அக்கட்சி ஏதேனும் சொல்லுமா என்பதும் தெரியவில்லை.
இன்னொன்று… வரும் தேர்தலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் களம் இறங்குகிறார்கள். அவர்கள் கூட்டணி எப்படி அமையும் என்பதும் இன்னும் தெரியவில்லை.
அதையெல்லாம் பார்த்துதான் அடுத்த தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்று சொல்லமுடியும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *