May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

மானசீக மகள் -9 (தொடர் கதை) எழுதியவர் கண்ணம்பி ஆ.ரத்தினம்

1 min read

Maanaseega Magal-9 (Story by Kanambi AA.Rathinam

முன்கதை- செல்வன்-ரோஸி காதல் முடிவுக்குவந்தபின், செல்வன் நித்யா திருமணம் செய்ய முடிவு செய்தான்).

மறு நாள் காலையில் முரளி படுக்கையிலிருந்து எழுந்தான். பல் விளக்கினான். குளித்துவிட்டு வீட்டை விட்டுக் கிளம்பினான்.
“என்ன சீக்கிரமாக கிளம்புறீங்க. டீ குடிக்கல்ல, டிபன் எதுவும் சாப்பிடல்ல” என்று கேட்டாள் சங்கீதா.
“கோயிலுக்குப் போய்ட்டு வர்றேன். நித்யா கல்யாணம் நல்லபடியாக நடக்கணும்னு வேண்டிக்க போறேன்.” என்றான் முரளி.
சொர்க்கலோகமே தரையில் இறங்கிவந்ததுபோல் இருந்தது சங்கீதாவுக்கு. கண்களிலிருந்து நீர் சொரிந்தது.
“என்ன… எப்படி மாறிட்டேன்னு பார்க்கிறியா? எல்லாம் ஒரு சொல்லிலேதான் இருக்கு. அது போன திசைக்குப் போகவிடாம இழுத்து வந்திடும். தங்கச்சியாக நினைச்சி அவ கல்யாணத்தை முடிச்சி வையுங்கன்னு சொன்னியே. . . அதுதான் அந்தக் கொக்கி. ராத்திரி முழுதும் நினைச்சேன். நித்யா கல்யாணத்த ஜாம்… ஜாம்னு நடத்திடலாங்குற முடிவுக்கு வந்திட்டேன்” சொல்லி முடித்தான்.
“அதைக் கேட்டுக்கொண்டே வந்த நித்யா முரளியின் கால்களில் விழுந்து வணங்கினாள்.
இரண்டு பிள்ளைகளும் “அப்பா நாங்களும் கோயிலுக்கு வர்றோம்” என்று கையைப் பிடித்தார்கள்.
“நீங்க குளிச்சிட்டு கிளம்புறதுக்கு நேரமாகிடுமே.” என்றான் முரளி.
“இதோ நீங்க சாக்சைப் போட்டு ஷூ மாட்டுறதுக்குள்ளே கிளம்பிடுறோம்பா” என்று விரைவு காட்டினார்கள். சங்கீதாவும், நித்தியாவும் உடன்போக வேகம் காட்டினார்கள்.
“சரி… சீக்கிரம் புறப்படுங்க” என்றான் முரளி.
முரளியின் மோட்டார் சைக்கிளில் சங்கீதாவும் அம்சவேணியும் ஏறிக்கொண்டார்கள். நித்யாவின் ஸ்கூட்டியில் சிரஞ்சீசி ஏறிக்கொண்டான்.
வண்டிகள் கிளம்பின. கோயில் வாசலில் வந்து நின்றன.
*
“வாங்க… வாங்க நல்ல சந்திப்பு. எதிர்பார்க்கவே இல்ல” என்று மூன்று வாய்கள் சேர்ந்து ஒலித்தன.
ஆம்… செல்வன், செல்வனின் அம்மா, அப்பா மூவரும் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியில் வந்தனர்.
“வாங்க… வாங்க…, இவங்கதான் என் வீட்டுக்காரர்” என்று செல்வனுக்கு அறிமுகம் செய்துவிட்டு, முரளியின் முகம் நோக்கினாள் சங்கீதா.
“யார்… இவங்க” என்று முரளி கேட்பதற்கு முன் சங்கீதா முந்திக்கொண்டாள். நித்யாவுக்குப் பார்த்திருக்கிற மாப்பிள்ளை இவர்தான் என்று அறிமுகம் செய்துவைத்தாள்.
முரளிக்கு ஆச்சரியமாகப்போய்விட்டது, “நான் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டுட்டு உங்களைப் பார்க்க வரலாம்னு நினைச்சேன்” என்று முரளி வாய்நிறைய சிரித்தபடியே வார்த்தைகளைக் கோர்த்தான்.
நித்யா மனதில் பூச்சொரிந்தது போல் இருந்தது.
முரளி செல்வனுக்கு கை நீட்டினான். இருவரும் கை குலுக்கிக்கொண்டார்கள்.
“நித்யா… நல்ல ஸெலக்ஸன்” என்று பாராட்டினான் முரளி.
“நம்ம ஸெலக்ஸன்ல என்ன இருக்கு, எல்லாம் கடவுளின் ஏற்பாட்டின்படிதான் நடக்கும்” என்றாள் சங்கீதா.
“அது உண்மைதான் சங்கீதா. நேற்றுவரை நான் எப்படியோ இருந்தேன். ராத்திரிக்குள்ளே என் மனச மாத்தினது யாருன்னு ஒரு கேள்வி வரத்தான் செய்யுது. அதுதான் காலம். காலம்தான் கடவுள்.” என்றான் முரளி.
உடனே வாண்டுகளில் ஒன்று குறுக்கிட்டது. “காலம்தான் கடவுள்னா ஒரு கடிகாரத்தை வாங்கிச் சுவர்ல மாட்டிக்கிட்டு அத கும்பிட்டா என்னப்பா” என்றது.
“பாரு. இந்த வயசுல, எப்படியெல்லாம் சிந்தனை ஓடுது பாரு” என்று சொல்லிவிட்டு அதற்குப் பதில் சொல்லும் விதத்தில் “கும்பிடலாம். அந்தக் கடிகாரம் மணி காட்டுது, காலண்டர் நாள் காட்டுது. அதன்படிதான் நாம் ஒவ்வொரு செயலைச் செய்கிறோம். அதனால் கடிகாரத்தைக் கடவுள்னு நினைக்கலாம். கையில் கட்டியிருக்கிற கடிகாரத்தைக்கூட கடவுள்னு நினைக்கலாம்.” என்றான் முரளி.
“நீங்க சொல்றது ரொம்ப சரியானது. நம்மகிட்டயிருந்து காலம் எதையோ எதிர்பார்க்குது. அந்தக் காலத்துக்கு மட்டும் நல்ல இரையாகப் போட்டுக்கிட்டிருந்தா அதுவே இறைவனுக்குச் செய்ற தொண்டாகிடும். காலத்துக்கு நல்லது செய்துகிட்டே யிருந்தா உலகத்துக்கு நல்லது செய்ததாகிடும். உலகத்தில நல்லதே நிறைஞ்சிருந்தா யாரும் கவலைப்படாம சந்தோசமா இருக்கலாம்” என்றான் செல்வன்.
“இப்போ நான் நிமிட முள் நீங்க வினாடிமுள் போல ஆயிட்டோம்” என்றான் முரளி.
“ஆமா… நம்ம ரெண்டு பேரும் ஒரே கருத்து உடையவர்களாக இருக்கிறோம். நான் கொஞ்சம் மெதுவா பேசுறேன்… நீங்க வேகமா பேசுறீங்க” என்று சொல்லி முடித்தான் முரளி.
சரிஅப்படின்னா… மணிமுள் யாரு என்று கேட்டது ஒரு வாண்டு. “மணிமுள்தான் நம்ம குடும்பம். அது சரியாக மணி காட்ட நம்ம எல்லாரும் நல்லதையே நினைக்கணும், நல்லதையே செய்யணும் என்ன” என்று சொல்லிவிட்டு, “நாங்க சாமி கும்பிட்டுக்கிட்டு வர்றோம்… மாலையில உங்க வீட்டுக்கு வர்றோம் அல்லது நீங்க எங்க வீட்டுக்கு வர்றீங்களா” என்று இனிமையாகக் கேட்டான் முரளி.
“நாங்க உங்க வீட்டுக்கு வந்திடுறோம். பெண் வீட்டுக்குப் போய் பெண் கேக்குறதுதான் மரியாதை என்று சொல்லி முடித்தார்கள் செல்வனின் தாய் தந்தையர்.
மறுநாள் மாலையில் செல்வன் குடும்பம் முரளி வீட்டுக்குச் சென்றது.
சம்பிரதாயமாகச் சில பொருட்களுடன் சென்றார்கள்.
பேச்சு வார்த்தையைத் தொடங்கினார்கள் செல்வனின் பெற்றோர்.
“நீங்க எதுவும் சொல்ல வேண்டியதில்ல. எல்லாம் எங்களுக்குத் தெரியும். செல்வனின் புரட்சிப் போக்குகளை வித்யாசமான அணுகுமுறை இருந்தாதான் ஏற்றுக்கொள்ள முடியும். எல்லாம் நல்லதா அமையும். வருகிற தைமாசம் கல்யாணத்த வச்சிக்கலாம். அதுக்குள்ளே ரெண்டு குடும்பமும் சேர்ந்து எல்லா ஏற்பாடுகளையும் செய்திடலாம் என்ன சரிதானே என்றான் முரளி.
“ரொம்ப சரி. கல்யாண மண்டபச் செலவு, சாப்பாட்டுச் செலவு எல்லாத்தையும் நாங்க கவனிச்சிக்கிறோம். நாங்க வேற எதையும் எதிர்பார்க்கல்ல. நித்யாகிட்ட உள்ள நல்ல குணத்தை எதிர்பார்க்கிறோம்” என்றார் செல்வனின் தந்தை. கல்யாணம் உறுதி செய்யப்பட்டதற்கு அடையாளமாக நாங்க நித்யா கைக்கு தங்க வளையல் கொண்டு வந்திருக்கிறோம் என்று சொல்லி முடித்தார் செல்வனின் தந்தை.
“அப்புறம், என்ன கையில் போட்டு விடுங்க. நித்யா, கழுத்தை நீட்டுறதுக்கு முன்னாடி ரெண்டு கைகளையும் நீட்டு” என்று வேடிக்கையாகப் பேசினான் முரளி.
நித்யாவின் கைகளில் செல்வன் வளையல்கள் அணிவித்தான்.
“சரி… மாப்பிள்ளைக்குப் போடுறதுக்கு நாங்க வளையல் செய்யல்ல. மோதிரம்தான் இருக்கு” என்று சொன்னான் முரளி. எல்லாரும் கலகலவென சிரித்துவிட்டார்கள்.
நித்யா செல்வனின் விரலில் மோதிரம் அணிவித்தாள். அவள் கண்களில் கண்ணீர் நிறைந்தது. அதைப் பார்த்து சங்கீதாவின் கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகியது.
இரண்டு வாண்டுகளும் ஸெல்போனில் நிகழ்வுகளைப் பதிவு செய்துகொண்டிருந்தார்கள். ஸெல்போன் இயக்குவதில் இப்போது சிறுவர்கள்தானே நிபுணர்கள்.
இனிப்பு, காரங்களுடன் டிபன் பரிமாறப்பட்டது. ஏதோ ஒரு புது உலகத்தில் இருப்பது போல சங்கீதா குதூகலமடைந்தாள்.
“சரி… நாங்க கிளம்புறோம்” விடைபெற்றார்கள் செல்வன் மற்றும் பெற்றோர்.”
“செல்வன் கல்யாணம் வரைக்கும் நித்யாவைப் பார்க்க முடியாதே என்று தவிக்காதுங்க. தினமும் பார்க் பீச் ஏதாவதொரு இடத்தில் சந்தியுங்க. அதுல தப்பே இல்ல. லாட்ஜலதான் ரூம் போடக் கூடாது என்று தமஷாகப் பேசினான் முரளி.
வாண்டுகளின் கையில் அன்பளிப்பு கொடுத்துவிட்டு விடைபெற்றார்கள். வெளியில் வந்து வழியனுப்பிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தது முரளியின் குடும்பம்.
“டேய்… பசங்களா சித்திக்கு ஜோடி எப்படிடா”, முரளி கேட்டான்.
“நல்ல சித்தப்பா… அப்பா” என்று முத்திரை குத்தினார்கள் வாண்டுகள். நித்யாவின் முகம் பூரித்துக் கனிந்தது.
இரவு தூங்கப் போகும்வரை கல்யாண ஏற்பாடுகள் விஷயமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள் முரளியும் சங்கீதாவும்.
நித்யா அவர்களின் பேச்சின் இடையே குறுக்கிட்டாள்.
“அக்கா… இவ்வளவு ஆடம்பரமான ஏற்பாடு தேவையா? ஏற்கெனவே நான் ஒரு மணமேடையில் உட்கார்ந்தவள். இவ்வளவு பெரிசா வேண்டாம் அத்தான். ஏதாவது ஒரு கோயில்லே போய் சிம்பிளா கல்யாணத்தை வச்சிக்கலாம். எவ்வளவுதான் சந்தோசமான விஷயமாக இருந்தாலும் இழப்புக்குக் கொடுக்கிற சந்தோசம்தானே தவிர, முழுமையான சந்தோசம் ஆகிடாது இல்லியா, என்னதான் இருந்தாலும் என்னால முதல் தாலியை மறக்க முடியல்ல” என்று சொல்லி முடிக்க முடியாமல் உதடுகள் துடித்தன. கண்ணீர் பெருகியது.
சங்கீதாவின் கண்கள் கொப்பளித்தன.
“நடந்ததை நினைச்சி வருத்தப்பட்டு பிரயோஜனமில்ல. நடக்கவேண்டியத நல்லதாக்கித்தான் பார்க்க நினைக்கணுமே தவிர பழையதை கிளறிக்கிட்டேயிருந்தா சரிவராது” என்று சொல்லி முடித்தான் முரளி.
“அத்தான்… நான் உண்மையைப் போட்டு உடைக்கட்டுமா? உங்க போக்கு முதலில் சரியில்லாம இருந்ததாலத்தான் நான் வேறு கல்யாணத்துக்கு யோசனை போட்டேனே தவிர… இல்லேன்னா இங்கேயே அக்காகூட தனியா இருந்திடுவேன்” என்று பட்டென்று சொல்லி முடித்தாள் நித்யா.
“அப்படின்னா… நீ பட்னி கிடக்கிற மாதிரியும், நாங்க விரதம் இருக்கிற மாதிரியும் ஆகிடும். உங்க அக்கா உன்னை இந்த நிலைமையில் வச்சிக்கிட்டு என்னைக் கவனிக்க மாட்டா. அப்புறம் ஆம்பிள ரூட் மாறிப் போயிடுவான். வேலை பாக்கிற இடத்துல ஆயிரம் பிரச்சினை ஏற்படும். அதையெல்லாம் மறந்து மனிசன் அப்பப்ப சந்தோசம் அடையுறது தாம்பத்ய உறவிலதான். அதுல பத்தியம் வந்தா பைத்தியம்தான் பிடிக்கும். உலகத்துலே முதன்மையான இடத்துல இருக்கிறது செக்ஸ். அதுலதான் மனிசன் பல பிரச்சினைகளை கொஞ்சமாவது மறக்கமுடியுது. உன்னால முதல் கல்யாணத்தை மறக்க முடியாதுதான். அந்த மாப்பிள்ளையையும் மறக்க முடியாதுதான். இருந்தாலும் அதையே நினைச்சிக்கிட்டிருந்து வாழ்விழந்து போகக்கூடாது.
பதினெட்டு வயசு மகன் இறந்த ரெண்டு வருசத்துல வேற பிள்ளை பெத்துக்கிட்ட அம்மா அப்பா இருக்கிறாங்க. அவங்களால அந்த மகனை மறந்து எப்படி சந்தோசமாக இருக்க முடிஞ்சுதோ அதைப் போலத்தான் நீயும் பழைய கணவனை மறந்து புது வாழ்க்கையை அமைச்சிக்கணும்” என்று சொல்லி முடித்தான் முரளி. தொடர்ந்து பேசினான்.
“முதல்ல கல்யாணப் பத்திரிகை அச்சடிக்கிறதப் பத்தி யோசிப்போம். அப்புறம் எல்லாம் ஒண்ணொண்ணா நல்லபடியா நடக்கும்” என்றான்.
“அதுதான் கோயில்லேயா கல்யாண மண்டபத்திலாங்குறது முதல்ல முடிவு செய்யணும்” என்றாள் நித்யா.
“சரி… அப்படின்னா அந்தப் பேச்சை நாளைக்கு வச்சிக்குவோம். ராத்திரி கனவில வந்து சாமி சொல்றாரா பார்ப்போம்” என்று கிண்டலாகப் பேசினான் முரளி.
நள்ளிரவு நேரம் இரண்டு குழந்தைகளும் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் படுத்துக்கொள்ள, நித்யா நடுவில் படுத்து வழக்கம்போல் தூங்கினாள். ஸீரோவால்ட் பல்ப் எரிந்து கொண்டிருந்தது.
முரளிக்கு அந்த அறைக்குள் போகவேண்டும்போல் ஒரு மன உந்துதல் ஏற்பட்டது.
கையில் ஒரு பூச்சரம் வைத்திருந்தான். பூனை பதுங்கிப் பதுங்கிப் போவதைப் போல் மெதுவாக அடியெடுத்து வைத்து கட்டிலருகில் போனான். இரண்டு நட்சத்திரங்களுடன் நிலவுதான் கட்டிலில் தூங்குகிறதோ என்று அவன் மனம் நினைத்தது. இந்த சரஸ்வதியின் வாழ்க்கையைக் கெடுக்க நினைத்தேனே… தாமரை போன்ற அவள் முகத்தில் திராவகம் வீசப் பார்த்தேனே… எனக்கு மன்னிப்பு கிடைக்குமா? பலவாறு அவன் சிந்தனை ஓடியது. கொண்டுவந்த பூச்சரத்தை அவள் காலடியில் வைத்து வணங்கினான். மனதுக்குள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். நித்யாவைத் தனது கண்ணைத் திறந்த கலைமகளாகக் கருதினான். “உன்னை நல்லவண்ணமாக வாழவைப்பதே என் கடமை.” என்று பலவாறு யோசித்தான். அமைதியாக அந்த அறையை விட்டு வெளியில் வந்தான்.
தனது படுக்கையறைக்குள் நுழைந்தான். சங்கீதா கண்ணயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். “இந்தப் பெண் தெய்வத்துக்குத் துரோகம் செய்ய நினைத்தோமே என்று வருந்தினான். மெதுவாக அவள் அருகில் படுத்துக்கொண்டான். நெடுநேரம் சென்ற பின்னும் தூக்கம் வரவில்லை. மகள் கல்யாணத்தை எப்படி நடத்துவது என்று கற்பனை செய்வதுபோல் நித்யாவின் கல்யாணம் பற்றிப் பலவாறு கற்பனை செய்தான். நித்யாவை மானசீக மகளாக ஏற்றுக்கொண்டான். இரவு இரண்டு மணிக்குமேல்தான் கண்ணயர்ந்து தூங்கினான்.
கல்யாணத்தை கோயில்ல வச்சிக்கலாமா, மண்டபத்தில் வச்சிக்கலாமான்னு பலவாறு யோசனை போட்டு, இரு வீட்டாரும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். கல்யாண மண்டபத்துக்கும், பகட்டான பத்திரிகை அச்சிடவும் செய்ற செலவை நம்ம கல்யாணம் நடக்கிற அதே நேரத்தில் ஒரு ஏழை ஜோடிக்கு கல்யாணம் செய்து வைத்தால் என்ன என்ற ஒரு சிந்தனை மேலோங்கியது. அதன் விளைவு செலவைக் குறைத்து பதிவுத் திருமணம் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தனர். அதன்படி செல்வன் – நித்யா திருமணம் எளிமையாக நடந்தது. அதே முகூர்த்தத்தில் பழைய பாட்டில் கடையில் பிராந்திப் பாட்டில்களைக் கழுவும் கடையில் வேலை பார்த்த ஏழைப்பெண் அன்னலட்சுமிக்கும் வீடுவீடாகப் பத்திரிகை போடும் குமார் என்ற வாலிபனுக்கும் திருமணம் நடத்தி வைத்தார்கள். திருமணம் முடிந்ததும் செல்வனும் நித்யாவும் செல்வனின் பெற்றோர் கால்களிலும் நித்யாவின் அக்கா, அக்கா கணவர் கால்களிலும் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்கள். குமாரும் அன்னலட்சுமியும் செல்வன் – நித்யா கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள்.
லட்சுமியின் பெயரில் ஐம்பதாயிரம் ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்து பாஸ்புக் அவளிடம் கொடுக்கப்பட்டது. அதைப் பெற்றுக்கொண்ட அன்னலட்சுமி ஆனந்தத்தின் எல்லைக்கே போய்விட்டாள்.
தினமும் ஐம்பது ரூபாய்க்குப் பாட்டில் கழுவும் வேலை செய்த அவளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பெருந்தொகையாகத் தெரிந்தது.
செல்வன் – நித்யா, குமார் – அன்னலட்சுமி முதல் இரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

(தொடரும்)


About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.