May 1, 2024

Seithi Saral

Tamil News Channel

மானசீக மகள்-8 (தொடர்கதை) எழுதியவர் கண்ணம்பி ஆ.ரத்தினம்)

1 min read

Maandseega Magal-8/ Novel by Kannambi AA.Rathinam

(முன்கதை- செல்வனினுக்கும் அவன் காதலி ரோஸிக்கும் இடையே பிரிவு ஏற்பட்டு விட்டது. ரோஸிக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயமானதால், செல்வனும் இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தான். பெண் பார்க்கும் படலமும் நிகழ்ந்தது.)

“ஊருல உலகத்துல புருசன் இறந்து போயிட்டா இப்படி வேகவேகமா போயி யாரும் மாப்பிள்ளை பாக்கிறதில்ல. உன் தங்கச்சிதான் கல்லறை காயுறதுக்கு முன்னே கல்யாணமுன்னு ஆசைப்படுறா. கேவலமான குடும்பம். நான் செத்தாலும் நீ இப்படித்தாண்டி செய்வே…” என்றான் நித்தியாவின் அக்கா கணவன்.
“அவளுக்குப் பாதுகாப்பான இடமில்ல, அதனாலத்தான் அவ இந்த முடிவுக்கு வந்திருக்கா. உங்க போக்கு அவளுக்குப் புடிக்கல்ல. அதுதான் அவ ஒரு பாதுகாப்பான இடத்தைப் பார்கிறாள்” என்று பதில் சொன்னாள் நித்யாவின் அக்காள் சங்கீதா.
“என்னடி… என் போக்கு புடிக்கல்ல. நீ அவளை விட அழகா இருந்தா நான் ஏண்டி அவளைச் சீண்டப்போறேன்”, என்று சொல்லிவிட்டு ஒரு நோக்கு நோக்கி நின்றான்.
“உங்க தம்பி உங்களை விட அழகா இருந்தா… நானும் அப்படி இப்படி இருக்கலாமா… ஆம்பிளைக்கு ஒரு நியாயம் பொம்பிளைக்கு ஒரு நியாயமுன்னு அந்தக் காலத்திலேயே கூர் தீட்டி வச்சிருக்கிறாங்க.”
“ஏய்… என்னடி வாய் ரொம்ப நீளுது. பேசாம அவளை எனக்குக் கட்டிவச்சி இந்த வீட்டோட இருக்கவிடு. வேற ஆள பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டா இந்த வீட்ல வேற ஒரு பொண்ணு வந்திடுவா.”
“ஓகோ… அப்படி ஒரு திட்டம் இருக்கா. ரெண்டு பிள்ளைகளுக்கு அப்பா ஆன பிறகு மாப்பிள்ளையாகலாம்னு திட்டமா? என் தங்கச்சிக்கு நானே முன்னின்று கல்யாணம் நடத்தப் போறேன். ஆகவேண்டியத பாருங்க” என்று சொல்லிவிட்டு சமயலறைக்குள் நுழைந்தாள்.
“பார்க்கிறேண்டி… பார்க்கிறேன்.”
சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
அலுவலகத்தில் அமர்ந்தான்.
அடிக்கடி புகை பிடிக்க மறைவிடம் தேடினான்.
அவன் பக்கம் நியாயம் இருப்பதுபோல் ஒரு தோற்றத்தை உருவாக்கிக்கொண்டான்.
மாலையில் வீடு திரும்பும்போது டாஸ்மாக் பாருக்குள் புகுந்துவிட்டான்.
மூக்குமுட்ட குடித்தான்.
போதையில் பைக் ஓட்டினான்.
இப்படி குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதால்தான் சாலை விபத்துக்கள் ஏராளம் நடக்கின்றன. வீட்டிலுள்ள பிரச்சினையை ரோட்டில் காட்டுகிறார்கள்.
வண்டி தடுமாறித் தடுமாறித்தான் வீடு வந்து சேர்ந்தது.
பிள்ளைகள் ஓடிப்போய் அப்பாவின் கையைப் பிடித்தார்கள்.
கையை உதறிவிட்டு உள்ளே போனான். பிள்ளைகள் அதிர்ச்சியடைந்தார்கள். மது வாடை சங்கீதாவின் மூக்கினுள் நுழைந்து நெடி தட்டியது.
மனதுக்குள் இடி முழங்கியது.
கையாலாகாத கோழைகள் காரியம் சாதிக்கலாம் என்று நினைத்து கையாள்வது இந்தப் போதைப் பழக்கம். என்ற நினைவு அவளுக்குள் ஓடியது.
கட்டிலில் போய்ப் படுத்தான்.
“இது என்ன புதுப்பழக்கம்…” என்று கேட்டாள்சங்கீதா.
“புதுப்பழக்கமில்லடி. . . மதுப் பழக்கம். உன் தங்கச்சிக்கு வேற கல்யாணம் பண்னா… இந்தப் பழக்கம் தொடரும்” என்று எச்சரித்தான்.
“உங்க மிரட்டலுக்காக என் தங்கச்சி வாழ்க்கையைப் பாழாக்க முடியாது…” என்றாள் சங்கீதா.
அதைக் கேட்டுக்கொண்டு நின்ற நித்யாவின் கண்கள் குளமாயின.
“அக்கா எனக்கு கல்யாணமே வேண்டாம். நான் இந்த வீட்லேயே இருந்திடுறேன்” என்றாள்.
“உன்னை… சும்மா இருக்க விட்டிடுவாரா… அவருக்கு ஆசைநாயகியாக இருக்கிறதுன்னாதான் இந்த வீட்ல இருக்க முடியும்” என்றாள் சங்கீதா.
“குடிக்கிறதுக்கு பாட்டில் தொட்டவன் அத விட்டதாக வரலாறு கிடையாது. அத்தான் குடிகாரரா மாறிடக் கூடாதுன்னு பயப்படுறேன். அவர் குடிகாரராகிட்டாருன்னா உன் வாழ்க்கை, பிள்ளைகள் வாழ்க்கையெல்லாம் நாசமாகிப் போகும்” என்று கலங்கினாள்.
“அதுக்காக உன் வாழ்க்கையை நாசமாக்கப் போறியா…” போடி… அறிவு கெட்டவளே. நடக்கிறது நடக்கட்டும். உன் வாழ்க்கை நாசமாக நான் ஆளாகமாட்டேன். நானே முன்னின்று உன் கல்யாணத்தை நடத்திவைக்கப்போறேன். நாளை அந்தப் பையனைச் சந்திச்சுப் பேசலான்னு இருக்கிறேன்.” என்று சொல்லி முடித்தாள்.
இரண்டு பிள்ளைகளும் சித்தியின் கையைப் பற்றினார்கள்.
“சித்தி… நீ கவலைப்படாதே சித்தி” என்றான் ஏழு வயது சிரஞ்சீவி…. “உன்னைக் கவலைப்பட விட மாட்டோம் சித்தி” என்றாள் ஐந்து வயது அம்சவேணி.
இரண்டு பிள்கைகளையும் நெஞ்சோடு அணைத்து அழுது தீர்த்தாள் நித்யா.
“வாங்க.. . வாங்க… உட்காருங்க. . இவங்கதான் என் அம்மா… அவர் எங்கப்பா”… அறிமுகம் செய்துவைத்தான் செல்வன்.
“இவங்கதான் நித்யாவின் அக்கா…, ஹஸ்பன்ட் ஈபியில ஜூனியர் என்ஜினியரா இருக்கிறார். ரெண்டு பிள்ளைகள் இருக்கிறாங்க” என்று அறிமுகம் செய்துவைத்தான் செல்வன்.
ஒருவருக்கொருவர் கைகூப்பி மரியாதை செய்து கொண்டார்கள். ‘உட்காருங்க…’ என்று சொல்லி அமரவைத்தார். செல்வனின் தந்தை.
அமர்ந்தார்கள்.
செல்வனின் தாயார் கூல்டிரிங்ஸ் கொண்டு கொடுத்தார்.
சங்கீதாவும், நித்யாவும் எடுத்துக்கொண்டார்கள்.
“நீங்க உட்காருங்கம்மா.” என்று கேட்டுக்கொண்டாள் சங்கீதா.
கூல்டிரிங்ஸ் குடித்துக்கொண்டே “உங்களைப் பத்தி நித்யா எல்லாம் சொன்னாள். உங்க மனநிலை ரொம்ப வித்யாசமான
துன்னும் சொன்னாள். நிச்சயமா உங்க மனநிலைக்கேற்றபடி நித்யா நடந்துக்குவா.
மாமியாருக்கு மருமகள் என்பதுபோல் இல்லாம அம்மாவுக்குப் புள்ளபோல் இருக்கிறதுதான் பெரிசு. அதை நித்யா நிச்சயமா செய்வா” என்றாள் சங்கீதா.
“இழந்த வாழ்க்கையை அப்படியே விட்டுடக் கூடாது. அத திரும்பவும் மீட்டு எடுக்கணும். அதுதான் என் பாலிசி. எங்க அம்மா அப்பா இழந்த வாழ்க்கையைத் திரும்பவும் அனுபவிக்கணுங்குறதுதான் என் எண்ணம். அதப்போல நித்யா இழந்த வாழ்க்கையை அப்படியே விட்டுடக் கூடாது. திரும்பவும் மீட்டெடுக்கணும். அதப்போல காதலிச்ச பொண்ணு கிடைக்ககல்லன்னா தனியாகவே இருந்து நொந்து போகக்கூடாது. அதுதான் நான் நித்யா துணையை எதிர் பார்க்கிறேன் என்ன சரிதானே. . .”
“ரொம்ப சரி… ஆனா நித்யா கல்யாணத்துக்கு எங்க வீட்லேயே ஒரு வில்லன் இருக்காரு. அதனால பெரிய அளவில நடத்தாம ரகசியமாகத்தான் நடத்த வேண்டியிருக்கு.”
“அப்படின்னா…?” செல்வனின் தந்தை குறுக்கிட்டார்.
“எதையும் மறைச்சி மறைச்சி பொத்திப்பொத்திப் பேசி ஒரு முடிவுக்கு வராம இருக்கிறத விட எல்லாம் போட்டு உடைச்சி
ஒரு நல்ல முடிவுக்கு வர்றது நல்லதில்லியா… அதுனாலத்தான் நான் வெளிப்படையா பேசுறேன். என் வீட்டுக்காரருக்கு நித்யா மேல ஒரு கண்ணு. அவருக்கு நித்யாவை மறுமணம் செய்து கொடுக்கிறதுல விருப்பமில்ல. வீட்டோடே இருக்கட்டும் என்கிறார். அதுக்கு இடம் குடுக்கக் கூடாதுன்னுதான் பதிவுத் திருமணம் பண்ணலாம்னு நினைக்கிறேன்.” என்று சொல்லி முடித்தாள் சங்கீதா.
“அதனாலென்ன… அதுதான் நல்லது. அப்புறம் எல்லாரையும் ஒரு ஹோட்டலுக்கு வரவழைச்சி ஒரு விருந்து கொடுத்தா போச்சு.” என்று ஒப்புதல் அளித்தார் செல்வனின் தந்தை.
“அத உங்க விருப்பத்துக்குச் செய்துக்குங்க. நான் அவளுக்குச் செய்யவேண்டிய சீர்சிறப்பெல்லாம் செய்திடுவேன்” என்றாள் சங்கீதா.
“சீர்சிறப்பை விட சீராகவும் சிறப்பாகவும் குடும்பம் நடத்துறதே பெரிசு” என்றார் செல்வனின் தாயார்.
“சரி… நாங்க போய்ட்டு வர்றோம்” விடை பெற்றார்கள்.
“கல்யாணத்தை எப்ப வச்சிக்கலாம்னு பேசி முடிவு சொல்லுங்க” என்று செல்வனின் தாயாரும் தந்தையும் சேர்ந்து ஒருமித்த குரலில் கேட்டார்கள்.
“நீங்களும் ஒரு நல்ல நாள் பாருங்க. நாங்களும் பார்த்துச் சொல்றோம்” என்று சொல்லிவிட்டு வீட்டைவிட்டு வெளியில் வந்தார்கள்.
*
“என்னடி… எனக்குத் தெரியாம அக்காளும் தங்கச்சியும் எங்க போயிட்டு வர்றீங்க” அதட்டல் தொனியில் கேட்டான் சங்கீதாவின் கணவன் முரளி.
“போகவேண்டிய இடத்துக்குத்தான் போய்ட்டு வர்றோம்.”
“அது என்னடி போகவேண்டிய இடம்?”
“நித்யா கல்யாண விஷயமாகத்தான் பேசிட்டு வர்றோம். அம்மா – அப்பா, அண்ணன் – தம்பி யாருமில்லாத அவளுக்கு எல்லாமாக இருந்து கல்யாணத்த நடத்திவைக்கிறது உங்க கடமை. அவ்வளவுதான் என்னால சொல்லமுடியும்.”
“நீ சொல்றத சொல்லிக்கிட்டே இரு. நான் செய்றத செய்துகிட்டே இருக்கிறேன்.”
“நிங்க சொல்றது புரியல்ல.”
“பின்ன என்னடி… நான் வெளிப்படையாகவே உன் தங்கச்சியை எனக்குக் கட்டிவச்சிடுன்னு கேக்கிறேன். நீ வேற திசையிலேயே போயிட்டு இருக்கிறே.”
“நீங்கதான் திசைமாறிப் போறீங்க. மனைவியின் தங்கச்சியை தன் தங்கச்சி போல நினைச்சி வாழவச்ச மச்சான்னு உங்களை மத்தவங்க சொல்ற மாதிரி நடத்துக்குங்க. அதுதான் நம் குடும்பத்துக்கு நல்லது.”
“கண்ணுக்குக் கண்ணான உன் தங்கச்சி கூடமாட உனக்கு ஒத்தாசையா இருக்கிறது. உனக்கு பிடிக்கல்ல அப்படித்தானே. உன்னைப் பெண் பார்க்க வரும்போதே அவள்மேல என் கண்ணு பதிஞ்சி போச்சு. ஆனாலும் உன்னைக் கட்டிக்கிட்டு அழுறேன். அவளையும் வேற ஒருத்தனுக்குக் கட்டிக்கொடுக்கிறதுக்கு சம்மதிச்சேன். இப்போ விதவையாகியிருக்கிறா. அதுக்குப் பிறகும் யாரோ ஒருத்தன் அனுபவிக்கிறத நான் அனுபவிச்சா என்ன குறைஞ்சிடப் போகுது”
“கட்டின பொண்டாட்டிக்கிட்ட இப்படி பேசுறதுக்கு உங்களுக்கு வெட்கமா இல்ல”
“என்னடி வெட்கம். உன் தங்கச்சி விதவையானதுலயிருந்து நீ என் ஆசைக்கு இணங்கிறியா. எப்பவும் தங்கச்சி கூடவே படுத்துக்கிறே. நான் தனியா படுக்கிறேன். அப்புறம் எப்படி ஒரு ஆம்பிள சந்தோசமா இருப்பான்.”
“சரி… சரி… நித்யாவும் கல்யாணம் முடிஞ்சி சந்தோசமாக இருக்கிறாங்குற சந்தோசத்துல நம்ம ரெண்டுபேரும் சந்தோசமாக இருக்கலாம். சின்னஞ்சிறுசுல அவ நிலைமை இப்படி ஆகிப்போச்சு. அவளை வீட்ல வச்சிக்கிட்டு நம்ம ஆசா பாசம் கொள்றது நாகரிகமில்ல. ஒரு மாசத்துக்குள்ள அவ கல்யாணத்தை முடிச்சிக்கிட்டு நம்ம ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் எல்லாம் போய் சந்தோசமாய் இருக்கலாம்.” என்று ஒரு பெரிய நிவர்த்திக் கொக்கியை இறக்கினாள் சங்கீதா.
முரளியின் பேச்சு நின்றுவிட்டது. தங்கை சந்தோசம் இழந்துபோனதால்தான் மனiவி தன்னைக் கவனிக்கவில்லை என்ற உண்மைநிலை அவன் உள்ளத்தில் ஊடுருவிக் கொண்டிருந்தது.

(தொடரும்)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.