June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

மதுவுக்காக போராடும் தமிழக அரசு

1 min read


Government of Tamil Nadu fighting for liquor

9-5-2020

வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் திறக்கப்பட்டிருந்த மதுக்கடைகளை மூடுவதற்கு தமிழகத்தில் உள்ள தலைவர்கள் என்ன பாடுபட்டார்கள் என்பதை அன்றயை வரலாற்றை புரட்டிப்பார்த்தால் தெரியும். அன்றைய காலக்கட்டத்தில் பாமர மக்களுக்கு கள்ளும் சாராயமும்தான் பிரதான மதுபானம். அதை எதிர்த்து நடந்த போராட்டம் மகத்தானது.

ஈ.வெ.ரா.பெரியார் மதுவுக்காக எத்தனையோ பனை, தென்னை மரங்களை வெட்டினார் என்பது வரலாறு. இது சரியோ தவறோ அந்த விவாதத்திற்கு வரவில்லை. மதுவுக்கு ஏதிரான போராட்டம் எப்படி உணர்ச்சி பூர்வமாக இருந்தது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

கஷ்டப்பட்டு மூடப்பட்ட மதுக்கடைகளை தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி முதல் அமைச்சராக இருந்தபோது திறந்தார். அதற்கு பொருளாதாரத்தை காரணம் காட்டினார். பின்னர் எம்.ஜி.ஆர். மதுக் கடைகளை மூடி மீண்டும் திறந்தார். இதற்கு ஆளும் கட்சியினர் கூறும் காரணங்கள் பல… பல…

ஆனால் மக்களை பற்றி யாரும் சிந்திக்கவில்லை என்றே தோன்றுகிறது. இந்த கொரோனா எத்தனையோ இழப்புகளை தந்து கொண்டிருந்தாலும் பல்வேறு படிப்பினையையும் உணர்த்தியுள்ளது. மதுக் குடிக்காமல் இருக்க முடியாது என்று  வாதம் செய்தவர்கள் 40 நாட்கள் தொடர்ந்து குடிக்காமல்தானே இருந்தார்கள்.

ஊரடங்கு முடிவதற்கு முன்பே மதுக்கடைகளை திறந்தாகிவிட்டது. இதனை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட்டு மது விற்பனையை குறைக்க… மக்களை பாதுகாக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால் அரசோ எப்படியும் வருமானம் தேவை என்ற குறிக்கோளில் நடந்து கொள்கிறது. மே 1-ந் தேதி உழைப்பாளர் தினம். மே 7-ந் தேதி மது தினம் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது. (கார்ட்டூன் வரைந்தவர் தன்னூத்து என்.பி.குமரன்) அதனால்தான் சென்னை ஐகோர்ட்டு மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்கிறது.

படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம் என்று சொன்னவர்கள் இந்த கொரோனாவை பயன்படுத்தி மூட வேண்டியதுதானே. அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பை மக்களிடம் வெளிப்படையாக சொல்ல வேண்டியதுதானே. இதனால் இன்னென்ன சிக்கன நடவடிக்கை எடுக்கப்போகிறோம் என்று மக்களிடம் சொல்ல வேண்டியதுதானே.

இப்போது மதுக்கடைகளை மூடினால் அடுத்து வரும் தேர்தலில் தங்களுக்கு சாதகமாக அமையும் என்பதை ஏன் ஆளும் கட்சி புரிந்துகொள்ளவில்லை? எதிர்க்கட்சிகளின்  போராட்டம் அரசியல் என்று பலர் விமர்சிக்கிறார்கள். மதுக்கடைகளை வைத்து எதிர்க்கட்சிகள் ஆதாயம் தேட முயலும்போது ஏன் ஆளும் கட்சி ஆதாயம் தேட முயலக்கூடாது.

தமிழகத்தில் மது பிரியர்கள் அதிகம் என்று சொல்கிறார்கள். அது தவறு. இருந்தால் குடிப்பார்கள். இல்லாவிட்டால் குடியை மறந்துவிடுவார்கள். இந்த தன்மையானவர்கள்தான் தமிழகத்தில் அதிகம் உள்ளனர்.

கடந்த 2 தினங்களாக மது வாங்க வரிசையில் நின்றவர்களை டெலிவிஷன் மீடியாக்கள் வீடியோ எடுத்தது. அப்போது வரிசையில் நின்ற 90 சதவிதம்பேர் தங்களை அடையாளம் காட்ட விரும்பவில்லை. முகத்தை மறைக்க முயன்றனர். அப்படி என்றால் அவர்கள் சமுதயாத்திற்கு பயந்தவர்கள். அவர்கள் குடிகாரர்கள் இல்லை. இருந்தால் குடிப்பார்கள் என்ற மனநிலையில் உள்ளவர்கள். அவர்களை குடிகாரர்கள் ஆக்காதீர்கள். அவர்களை நல்வழி படுத்துங்கள்.  

இந்த விசயத்தில் மத்திய அரசையும் நாம் குற்றம் சாட்ட வேண்டியது இருக்கிறது. மதுவை ஒழிக்க பொதுவான நில அறிவுரைகளை மத்திய அரசு வழங்கலாம். ஒரு மாநிலத்தில் மதுக்கடைகளை மூடினால் அண்டை மாநில எல்லைக் கிராமங்களில் மதுக்கடைகள் இருக்க கூடாது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். எல்லாம் சொல்லியாகிவிட்டது. ஆனால் நடக்கப்போவது எதுவும் இல்லை. நம் பிள்ளைகள் குடிகாரர்களாக ஆகி விட்டார்களே என்று அழும் தாய்மார்கள் இப்போது இருக்கிறார்கள். ஆனால் வரும் காலத்தில் அப்படி தாய்மார்களை பார்க்க முடியாது. அந்த தாய்மார்களும் குடிக்கு அடிமையாவார்கள். அல்லது குடிப்பது தவறு இல்லை என்ற மனப்பக்குவத்தை பெற்றுவிடுவார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *