விதியின் வல்லமையை விளக்கும் குட்டிக் கதைகள் -முத்துமணி
1 min readvithi – Short stories By Muthumani
விதியின் வல்லமையை விளக்கும் குட்டிக் கதைகள் – முத்துமணி
கவியரசு கண்ணதாசன் பேசும்போது விதியை வெல்ல முடியாது என்று ஆணித்தரமாக அடித்து பேசுவார். விதியை ஒருவன் மதியால் வென்றுவிட்டான் என்று கூறினால்… அவன் விதியை மதியால் வெல்ல வேண்டும் என்று விதி இருக்கிறது என்பார்.
விதியில் வல்லமையை விளக்கும் குட்டிக் கதைகள் சிலவற்றை இங்கே கூறுகிறேன்.
பாம்புக்கடி…
பாம்பு கடித்தால் (கடிவாய்)கடித்த இடத்திற்கு சற்று மேலாக இறுக்கமாக ஒரு கட்டுப் போட்டு விட்டால் விஷம் மேலே ஏறி ஆபத்தை உண்டாக்காமல் இருக்கும் என்பது முன்னோர்கள் சொன்னது உண்மையும் கூட.
ஒருவன் ஜாதகப்படி பாம்பு கடித்து தான் மரணம் என்று இருந்தது. அதனால் அவன் எப்போதும் தன்னை பாதுகாத்துக்கொள்ள கையில் ஒரு கயிறுடன் திரிந்தான். எப்போது எங்கு பாம்பு கடித்தாலும் உடனடியாக கட்டுப் போட்டு விட வேண்டியதுதான்.
சாலை வழியாக சென்று கொண்டிருந்தான். கழுகு ஒன்று விஷப்பாம்பு ஒன்றைக் காலில் பற்றிக்கொண்டு வானில் பறந்து செல்லும்போது கால் பிடி சற்றே தளர்ந்து விட மேலே இருந்து பாம்பு கீழே விழுந்தது. விழுந்தது நடந்து சென்ற இவன் தோள்மீது விழுந்தது. விழுந்தவுடன் கழுத்தில் கடித்து விட்டது.
இப்போது கட்டு போடுவது எந்த இடத்தில்? கழுத்தில் கயிற்றால் கட்டினாலும் கட்டா விட்டாலும் சாவுதான்.
வியாசரின் சீடர்
வியாசரின் தலைமை சீடன் தாசன் என்பவன். தனக்குப் பின்னர் வேதங்களை உலகிற்கு எடுத்துச் சொல்ல அவன் தான் இருக்கிறான் என்று நம்பிக்கை வைத்திருந்தார் வியாசர்.
ஒரு நாள் தற்செயலாக தாசனின் ஜாதகத்தை எடுத்துப் பார்த்தார். அதில் அவன் ஆயுள் கட்டி அல்ல. இளம் வயதில் மரணம் நேரிடும் அதுவும் விரைவில் நேரிடும் ,என்பதை அறிந்தார். இத்தனை பெரிய ஞானம் உள்ளவன் இறந்து விட்டால் உலகத்திற்கு மாபெரும் இழப்பு அல்லவா? என்று கருதி அவனது மரணத்தை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று கருதி அவனை அழைத்துக் கொண்டு எமனிடம் சென்றார்.
எமனிடம் அவனைப்பற்றி எடுத்துச் சொல்லி மரணத்தை நிறுத்தவேண்டும் என்று கோபத்தோடு சொன்னார்.
“சுவாமி எல்லாம் எழுதியபடி தான் நடக்கும் என் கையில் ஒன்றும் இல்லை. இறைவனால் விதிக்கப்பட்ட விதி எப்போது எப்படி எங்கு உயிர் எடுக்கப்படவேண்டும் என்று எழுதப்பட்டு இருக்கிறது. அந்த ஏட்டில் எழுதியுள்ளபடிதான் நடந்து கொள்ள வேண்டும் என்பது எனக்கு இட்ட பணி அதை என்னால் மீற முடியாது.
அதோ அந்த அறைக்குள்தான் எல்லாருடைய ஏடுகளும் இருக்கின்றன. இதோ சாவி நீங்கள் வேண்டுமானால் திறந்து உள்ளே சென்று இவனுடைய தலையெழுத்து அடங்கிய ஏட்டை எடுத்து திருத்தம் செய்து விடுங்கள்” என்று கொடுத்து விட்டான்.
ஆவலோடு சாவியை வாங்கிக்கொண்டு தாசனையும் உடன் அழைத்துக் கொண்டு அவசரமாக அந்த அறைக்குள் நுழைந்தார் வியாசர். பரபரப்போடு ஏடுகளைப் புரட்டினார். திடீரென்று தாசன் வேரற்ற மரம் சாய்வது போல தரையில் விழுந்து இறந்தான்.
பதறிப்போய் வியாசர் அவன் அவனைத் தொட்டு எழுப்ப முயன்று தோற்று அழுது புலம்பினர் அவனுடைய தலையெழுத்து ஓலையை வாசித்துப் பார்த்தார். அங்கே எழுதப்பட்டிருந்தது……
தாசன் என்ற இவன் எப்போது தன்னுடைய குருவாகிய வியாசரோடு இந்த அறைக்குள் நுழைகின்றானோ அந்தக் கணமே அவன் தலை வெடித்துச் சாவான் என்று எழுதப்பட்டிருந்தது.
மாடியில் இருந்து விழுந்தவன்
காற்று வாங்கிக் கொண்டு மொட்டை மாடியில் படுத்தால் நன்றாக தூக்கம் வரும் என்று நினைத்து மொட்டை மாடியில் இரவில் படுத்துத் தூங்கிவிட்டான் பழனிச்சாமி. பத்து வயது நிரம்பிய அவரது மகனும் அருகில் படுத்து இருந்தான்.
மாடியில் கைப்பிடிச் சுவர் இல்லை. நல்ல தூக்கத்தில் நள்ளிரவில் உருண்ட பையன் மேலிருந்து கீழே விழுந்து விட்டான். “ஐயோ” என்று அலறித் துடித்து “என் பையன் போய் விட்டானே” என்று மாடியில் இருந்து இறங்கி ஓடி வந்தார் பழனிச்சாமி.
வீட்டுக்குள் காற்று வரவில்லை என்று வீட்டிற்கு வெளியே வந்து வாசலில் படுத்திருந்த பழனிச்சாமியின் 80 வயது தாய். மேலிருந்து விழுந்த அவருடைய பெயரன் அவள் மீது விழ அடுத்த நொடியே அவள் இறந்தாள். பையனுக்கு ஏதும் ஆகவில்லை.
மாடியிலிருந்து பெயரன் இவள் மீது விழுந்து இவள் இறக்க வேண்டும் என்பதுதான் எழுதப்பட்ட விதி ஆக இருக்குமோ?
பிச்சைக்காரன்
பிச்சைக்காரன் ஒருவன் தெரு வழியே சென்று கொண்டிருந்தான். அன்று அவனுக்கு வழக்கமாக அளக்கும் படியை இறைவன் அளக்கவில்லை.
பசியால் மனதிற்குள் புலம்பிக் கொண்டே போனவன் கடவுளிடம், “எல்லோருக்கும் அள்ளி அள்ளிக் கொடுக்கிறாய். என்னை ஏன் இன்னும் வறுமையில் வைத்திருக்கிறாய்? எதையாவது எனக்கு கொடுத்து நல்ல வழி காட்டு” என்று வேண்டிக்கொண்டே போனான்.
இந்த வேண்டுகோள் இறைவனின் காதில் விழ இவனுக்கு எதையாவது செய்து இவன் நிலையை மாற்றி விடுவோம் என்றும் முடிவுக்கு வந்தார்.
அவன் சென்று கொண்டிருந்த பாதையில் சற்று தூரத்தில் மிகப்பெரிய தங்கக் கட்டி ஒன்றை போட்டு வைத்தார். எடுத்துக்கொண்டு அவன் செல்வனாக மாறட்டும் என்று.
பலவாறு சிந்தித்துக் கொண்டு வந்தவன் அங்கே ஒரு மரத்தடியில் கண்தெரியாத ஒரு பிச்சைக்காரனைப் பார்த்தான். அப்போது அவனுக்கு ஒரு புதிய சிந்தனை. இவனை விட நம் நிலைமை பரவாயில்லை. நமக்காவது கண் இருக்கிறது நான்கு இடங்களுக்கு அலைந்து திரிந்து பிச்சை எடுக்கலாம். இவன் என்ன செய்வான். கண் தெரியாமல் எப்படி சாலையில் நடப்பான் என்று நினைத்தவன் கண் தெரியாவிட்டால் எப்படி இருக்கும் என்று உணர்ந்து பார்ப்பதற்காக அங்கிருந்து தன் இரு கண்களையும் மூடிக் கொண்டே நடந்து பார்த்தான்
நடந்தான்… நடந்தான்… கண்களை மூடியபடியே… கடவுள் சாலையில் அவனுக்கென்று போட்டிருந்த தங்கக் கட்டியை தாண்டியும் நடந்தான் நடந்தே போய்விட்டான்.