நகைச்சுவை தோரணங்கள் – முத்துமணி
1 min readJokes By Muthumani
1-6-2020
மாணவர்கள் இருவர் பேசத் தொடங்கிவிட்டால் போட்டி போட்டுக்கொண்டு தங்களைப் பெரிதாக பேசுவார்கள். அப்போதுதான் நிறைய பொய்கள் பிறக்கும்.
“இந்த ஊரிலேயே பெரிய நீச்சல் எங்க தாத்தா தாண்டா. குளத்தில் இறங்கி தண்ணீருக்குள் முங்கினால் மூன்று நிமிடம் கழித்துதான் வெளியில் வருவார். அப்படி மூச்சை அடக்கும் சக்தி அவருக்கு உண்டு. “என்றான் ஒருவன்.
அதைக் கேட்டுக்கொண்டிருந்த மற்றொருவன் “போடா, எங்க தாத்தா தண்ணீரில் மூழ்கினால் முப்பது நிமிடம் கழித்து தான் வெளியில் வருவார் தெரியுமா?” என்றான்.
உடனே பக்கத்தில் இருந்தவன் “ரெண்டு பேரும் நிறுத்துங்கடா. எங்க தாத்தா குளத்துக்குள் மூழ்கி மூன்று நாட்கள் ஆகின்றன. இன்னும் வெளியில் வரவில்லை. இப்போ சொல்லுங்கடா யார் பெரிய நீச்சல் வீரர் என்று?” என்று சொன்னான்.
*******
“எங்க வீட்டில் ஒரு கார் இருக்குடா” என்று தொடங்கினான் ஒருவன்.
உடனே பக்கத்தில் இருப்பவன் “நிறுத்துடா எங்கள் வீட்டில் இரண்டு கார் இருக்கு” என்றான்.
“எங்க வீட்டில் ஏசி ரூம் ஒன்று இருக்கு” என்றான் முதலில் பேசியவன்.
உடனே அடுத்தவன், “போடா எங்க வீட்டில் இரண்டு ஏசி ரூம் இருக்கு” என்று கூறினான்.
உடனே அவன் “எங்க வீட்டில் ஒரு குட்டி தங்கச்சி இருக்கிறாளே!” என்றான். பதிலுக்கு அவனும், “எங்க வீட்டில் எனக்கு இரண்டு குட்டிப் பாப்பா இருக்காங்களே” என்று கூறினான்.
“எங்க வீட்டில் எனக்கு ஒரு அழகான அப்பா இருக்காங்களே ” என்றான். சற்றும் தாமதிக்காமல் அடுத்தவன் “எங்க வீட்டில் எனக்கு ரொம்ப அழகான ரெண்டு அப்பா இருக்காங்களே என்றான்.”
*****
” எங்க அப்பா பேங்கில் வேலை பார்க்கிறார் டா. மேனேஜர் வேலை. அவருக்கு கீழ 20 பேர் வேலை பார்க்கிறாங்க டா” என்று ஆரம்பித்தான் ஒருவன்.
“எங்கப்பா தாசில்தார் தெரியுமாடா? அந்த ஆபீஸில் நூறுபேர் அவருக்கு கீழே வேலை செய்யுறாங்க”என்றான் அடுத்தவன்.
“ரெண்டு பேரும் நிறுத்துங்கடா… எங்க அப்பாவுக்கு கீழ ஆயிரக்கணக்கான பேர் வேலை செய்றாங்க டா” என்றான் இன்னொருவன்.
“அப்படி உங்கப்பா எங்கடா வேலை செய்யறாங்க ?” என்று கேட்டாங்க.
அவன் சொன்னான், “எங்க அப்பா சென்னையில் எல்ஐசி பில்டிங் 14வது மாடியில் இப்போது பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு கீழே 14 மாடிகளிலும் உட்கார்ந்து எத்தனை பேர் வேலை செய்கிறார்கள்?” என்றான்.
******
இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ஒருவன்
“எல்லோரும் நிறுத்துங்கடா. எங்க அப்பா ரயில்வேயில் வேலை பார்க்கிறார் தெரியுமா?”
என்று கேட்டான்.
உடனே ஒருவன்” உங்க அப்பா ஸ்டேஷன் மாஸ்டரா?” என்று கேட்டான். இல்லடா எங்க அப்பா ஓடினால் ரயில் நிற்கும். அவர் நின்றால் ரயில் ஓடும் “என்றான்.
“என்ஜின் டிரைவரா? என்று கேட்க இல்லை” என்றான்.
“அப்படி என்ன டா வேலை?”
“எங்க அப்பா ரயில்வே ஸ்டேஷனில் சுண்டல் வியாபாரம் பண்ணுகிறார். வண்டி ஸ்டேஷனில் வந்து நின்றவுடன்” சுண்டல் சுண்டல் ” என்று கத்திக்கொண்டே அங்குமிங்கும் ஓடுவார். வண்டி ஓட தொடங்கியதும் சத்தம்போடாமல் ஓரிடத்தில் நின்று கொள்வார் என்று சொன்னான்.