May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

நெல்லை மாவட்ட வட்டார வழக்குச் சொற்கள்

1 min read

Nellai vernacular terms

8-5-2020
அண்ணாச்சி

நெல்லை மாவட்ட வட்டார வழக்குச் சொற்கள் மிகவும் பிரபலம். இரண்டு நிமிடம் பேசிக் கொண்டிருந்தாலே,” சார் உங்களுக்குத் திருநெல்வேலியா?” என்று மற்றவர்கள் சரியாகக் கணித்து விடுமளவிற்கு திருநெல்வேலி மக்களுக்கு என்று தனிப்பட்ட ஒரு வட்டார வழக்கு இருக்கிறது.

உடன் பிறந்த, மூத்தவனை அதாவது அண்ணனை அண்ணா என்று அழைக்கும் வழக்கம் அங்கு இல்லை. அண்ணே என்று தான் அழைப்பார்கள். நம்முடன் பிறக்கா விட்டாலும் வயதில் மூத்தவராக இருந்தால் அவரை அண்ணாச்சி என்று அழைக்கும் வழக்கம் இருக்கிறது.
இன்று வயதில் மட்டுமன்றி வசதியில், பதவியில், செல்வாக்கில் உயர்ந்தவர்கள் கூட அண்ணாச்சி என்று தான் அழைப்பார்கள். மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளியாக இருந்தால்கூட அவரிடம் வேலை பார்க்கும் ஊழியர்கள் உட்பட அவரை அண்ணாச்சி என்று அழைப்பது தான் வழக்கம் அதைத்தான் அவர்களும் விரும்புவார்கள். இன்றைக்குச் சென்னையில் பெயர் விளங்க நிற்கும் பல்வேறு நிறுவனங்களுக்கு, கடைகளுக்கு உரிமையாளர்களாக விளங்கும் நெல்லை மாவட்டத்துக்காரர் களை அனைவருமே அண்ணாச்சி என்றுதான் சொல்வார்கள். அண்ணாச்சிக்கடை என்றுகூட குறிப்பிடுவார்கள்.

பெரிய அண்ணாச்சி வர்ற நேரம் ஆச்சு பாத்தாருன்னா “வேலையைப் பாருல, என்ன பழக்கம் விட்டுக்கிட்டு இருக்கன்னு வைவாரு” வரட்டுமா.


கமுக்கம், அமுக்கன், பொதுக்கன்.

ரகசியம் என்னும் சொல் தமிழ் இல்லை. ரகசியம் என்பதைக் குறிப்பதற்கு எத்தனையோ சொற்கள் இருந்தாலும் , நெல்லை மாவட்டத்தில் வழங்கும் ‘கமுக்கம் ‘என்னும் சொல் மிகச் சரியான பொருளைத் தருகிறது. விசயம் நமக்குள் இருக்கட்டும் கமுக்கமாய் வைத்துக்கொள்.கேட்டாலும் மனதிற்குள் அடக்கிக்கொண்டு எதையும் வெளியில் சொல்லாமல் இருப்பவனை நோக்கி “என்ன கமுக்கமா இருக்க?” என்று கேட்பார்கள்.
என்ன நடந்தாலும் யார் வந்து கேட்டாலும் தன் மனதிற்குள் இருப்பதை வெளியில் சொல்லாத வனை, குடும்பக் கஷ்டங்களை கூட வெளியில் சொல்லாத ஒருவனை சரியான’அமுக்கன்’ என்று சொல்வார்கள்.

உடல் கொஞ்சம் பூசினாற் போல் இருக்கும் ஒருவனைக் குறிக்க குண்டன் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைவிட நெல்லை மாவட்டத்தில் கிராமங்களில் ‘பொதுக்கன்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவார்.


.ஓட்டலாட்டு, கொடக்கி

நன்றாக ஓடும் நிலையில் இல்லாத சைக்கிளுக்குத் திருநெல்வேலியில் வைத்த பெயர் ஓட்டலாட்டு சைக்கிள்.
நன்றாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு பொருளையோ வண்டியையும் சிறுவர்கள் நோண்டி இயக்கத்தை நிறுத்தி விட்டால் அம்மா கேட்பாள் கொடக்கிட்டயா?

வண்டியில் ஏதாவது பழுது ஏற்பட்டால் அதைக் கோளாறு எனும் வார்த்தை குறிப்பிடும். வயிற்று நோயை வயிற்றுக் கோளாறு என்றும் , ஒருவேளை பேய் பிடித்தது என்று முடிவுக்கு வந்தா அதையும் பேய் கோளாறு என்று கூறுவார்கள்


கோட்டி

நாய்க்கு வெறி பிடித்தால் பிற மாவட்டங்களில் வெறிநாய் என்று குறிப்பிடுவர். நெல்லை மாவட்டத்தில் கோ ட்டி நாய் என்று சொல்வார்கள்.
மனநிலை பாதிக்கப்பட்ட மனிதனை க்கிறுக்கன் என்று சொல்வதை விட கோட்டிக்காரன் என்று சொல்வதுதான் வழக்கம்.


சிலுப்பட்டை, சேக்காளி

ஏதோ ஒன்றில், தான் பெரியவனாக இருந்து அதை வார்த்தைகளில் அல்லது செயல்பாடுகளில் வெளிப்படுத்திக் கொண்டே இருப்பவனை, சிலுப்பட்ட்டை என்று சொல்வார்கள். பனைமரத்தில் உச்சியில் இருக்கும் குச்சிகளால் ஆன ஒரு பொருள் தான் சிலப்பட்டை. அது காற்றில் ஆடும்போது சத்தம் போட்டுக்கொண்டே இருக்கும்.

நண்பனைக் குறிக்க எத்தனைச் சொற்கள் இருக்கின்றன. ஆனால் நெல்லை மாவட்டத்தில் ஒரு அருமையான சொல் அதுதான் சேக்காளி . சேர்க்கை+ஆளி. சேர்க்கை என்றால் நட்பு. சேர்க்கையை ஆள்பவன் சேக்காளி.

கட்டட வேலையில் கொத்தனாருக்கு உதவியாக இருப்பவனை பல்வேறு பகுதிகளில் சித்தாளு, நிமிர்ந்தாள் என்று அழைப்பார்கள். நெல்லை மாவட்டத்தில் மட்டும் கையாளு என்பார்கள்.


வௌக்குமாறு

வீட்டைச் சுத்தம் செய்ய பெண்கள் பயன்படுத்தும் கருவிக்கு என்ன பெயர்?.
கோவை மாவட்டத்தில் சீவக்கட்டை. சில இடங்களில் வௌக்குமாறு.. இன்னும் சில இடங்களில் பெருக்குமாறு. ஆனால் நெல்லை மாவட்ட கிராமங்களில் அதன் பெயர் ,வாரியல், யாரையாவது திட்ட வேண்டுமானால் வாரியக் கொண்டை.

தொடக்கப்பள்ளியில் ஓணான் . பல பகுதிகளில் அது ஓந்தி, கரட்டாண்டி , கரட்டோந்தி என்று அழைக்கப்படும். நெல்லை மாவட்டத்தில் மட்டும் தெண்டில் என்பது அதன் பெயர்.

மேலும் சில உயிரினங்களின் பெயர்கள் கூட நெல்லை மாவட்டத்தில் வேறுபடும். ஏற்கனவே சொன்னது போல் , ஓணான்
….

தென்டில்.
பூரான் என்று மற்ற இடங்களில் அழைக்கப்படும். ஊர்ந்து செல்லும் பூச்சி சாடா எனப்படும். தேசிய விலங்கான புலி, கடுவாய் என் பெயரில் அழைக்கப்படும். பிற இடங்களில் அரணை என்று அழைக்கப்படும் ஊர்ந்து செல்லும் உயிரினம் செல்லை பகுதியில் பாம்புராணி எனப்படுகிறது ஒருவேளை பாம்பரணை என்பது மருவி இருக்கலாம்.
தவளை முட்டையிலிருந்து பிறந்து வளரும்போது பல்வேறு நிலை அடையும். குறிப்பிட்ட பருவத்தில் அதன் பெயர் தலைப்பிரட்டை என்று படித்திருப்போம் நெல்லை மாவட்டத்தில் அதற்குப் பெயர் அரட்டளை . இதுவும் அரைத் தவளை என்பது மருவிய தாலோ.

ஆள் நல்ல உயரம் நல்ல கட்டுக்கோப்பான உடம்பு. ஆனால் எந்த வேலையும் செய்வதற்கு பலம் இல்லாதவன். அவனை மாக்காளை என்பார்கள். நல்ல உடல் வளர்ச்சி உடலில் பலமும் கொண்டிருக்கிறான். ஆனால் புத்திசாலித்தனமாக எதையும் செய்ய மாட்டான் அவனுக்குப் பெயர் மங்காடி. மண்ணால் ஆன காவடியை எடுத்துக்கொண்டு ஆட முடியுமா.


முடுக்கு ,வளவு ,பத்து

நெருக்கமாக இரண்டு சுவர்களுக்கு இடைப்பட்ட குறுகிய இடத்தை சந்து என்று கூறுவார்கள் பொதுவாக. சில ஊர்களில் இடுக்கு என்று கூறுவதும் உண்டு. ஆனால் நெல்லை மாவட்டத்தில் அது முடுக்கு.

வீட்டின் பின்பக்கம் தண்ணீர் பயன்பாட்டுக்கு என்று ஒரு சிறிய இடம் இருக்கும். கை கால் கழுவ அந்த இடத்தை வளவு எனும் சொல் குறிக்கும்.

நன்செய் நிலத்தை நெல்லை மாவட்டத்தில் பத்து என்னும் சொல்லால் குறிப்பிடுவர்.
மேற்குத் திசையில் உள்ளது மேலப்பத்து. தென்திசையில் உள்ளது தென்பத்து.


கொல்லைக்கு

வீட்டிற்குப் பின்புறம் கொஞ்சம் இடத்தை விட்டு வைத்திருப்பார்கள். அதில் வாதமடக்கி போன்ற மரங்களை வைத்து இருப்பார்கள். அல்லது ஏதாவது இரண்டு செடிகள் இருக்கும். அதன் பெயர் கொல்லை. ஒரு காலத்தில் அங்கேயே தானியங்கள் விளைந்து இருக்கலாம். வீட்டுக்கு வீடு கொல்லை இருக்கும்.
அந்தக் காலத்தில் காலைக்கடன் கழிப்பதற்கு வீட்டில் இன்று இருப்பது போல் கழிப்பறைகள் கிடையாது. எனவே கொல்லை எனப்படும் இடத்தில் காலைக்கடன் கழிப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. அதனால் இப்போது காட்டுப் பகுதிகளில் சென்று காலைக்கடன் கழித்தால் சரி அல்லது கழிப்பறைகளில் கழித்தாலும் சரி கொல்லைக்குப் போறேன் என்று தான் சொல்வார்கள். பிள்ளை கொல்லைக்கு போயிருக்கிறது. மூணு நாளா கொல்லைக்கு போகல .என்று வருத்தப்படுவதுண்டு.
கொல்லையை விட்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக வெளியே சென்று வரும் பழக்கத்தை பின்பற்றிய பிறகுதான் வெளிக்கு போய் வந்தேன். குழந்தை வெளிக்குப் போய்விட்டான் என்று சொல்லும் பழக்கம் ஏற்பட்டு இருக்கும்.


படுக்காளி.

வேலை வெட்டிக்கும் செல்லாமல் ஊரைச் சுற்றிக்கொண்டு ஊர் வம்பை விலைக்கு வாங்கிக்கொண்டு சண்டை போட்டுக் கொண்டு சிறுசிறு குற்றங்களிலும் ஈடுபட்டு கொண்டு இருப்பவனை நெல்லை மாவட்டத்தில் படுக்காளி பயல் என்ற சொல்லால் அழைப்பார்கள்.
இச்சொல் காலி … அதாவது ஒன்றும் இல்லாதவன் என்னும் சொல்லில் இருந்து வந்தது. ஒரு பொருள் தீர்ந்து போனால் காலியாகிவிட்டது என்று சொல்வது வழக்கம் அதேபோல ஒன்றும் இல்லாதவன் காலிப் பயல். அதிலும் மிக மிக காலியாக விளங்குபவனே படுகாலி. படு என்பது உரிச் சொல்லாக வருகிறது.

நெல்லை மாவட்ட கோவில்களில் பெரும்பாலும் தை மாதம் தான் திருவிழா நடைபெறும். மற்ற மாவட்டங்களில் திருவிழாக்கள் என்றும் பொங்கல் என்றும் சொல்வார்கள். பங்குனி பொங்கல் புரட்டாசி பொங்கல் என்பதுபோல. ஆனால் நெல்லை மாவட்டத்தில் மட்டும் கோவில் திருவிழாவை கொடை என்ற சொல்லால் குறிப்பிடுவார்கள். பத்ரகாளியம்மன் கோவில் கொடைக்கு நீ போகவில்லையா?

சிறுவர்களை அழைக்கும்போது வேறு மாவட்டங்களில் டேய் என்றும் சில இடங்களில் அடேய் என்றும் கோவை போன்ற பகுதிகளில் கண்ணு என்றும் அழைப்பார்கள். நெல்லை மாவட்டத்தில் ஏலே என்று கூப்பிடுவார்கள். இது சிறுவர்களுக்கு மட்டும் பொருந்தும் பெண்குழந்தைகளை செல்லமாக அழைக்கும் போது இதே வார்த்தையை பயன்படுத்துவது உண்டு. நண்பர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் என்ன டே நேத்து எங்க டே போன என்று கேட்பார்கள்.


தாய்மாட்டம்

தாமதிக்காமல் கொஞ்சம் உடனடியாக இதைச் செய்து விடு என்று சொல்லும்போது, தாய்மாடாம வந்து சேரு. பதில் போட தாய் மாட்டம் வேண்டாம். இந்தச் சொல் எப்படி வந்திருக்கும். தாயம் ஆடாமல் செய்துவிடு. தாயம் என்ற விளையாட்டை விளையாடும் போது மெதுவாக நிதானமாக நன்றாக யோசித்து காய்களை நகர்த்த வேண்டும். எனவே தாமதம் ஆகிவிடும். அதைப்போல தாமதம் செய்யாமல் விரைந்துசெய்துவிடு .என்னும் பொருளில் இச்சொல் பயன்படுகிறது.

    ஒருவர் வீட்டிற்குச் சென்று நின்று கொண்டே பேசினாள் ஏன்  நட்டமா நிக்கிறீங்க ?என்று கேட்பார்கள். அப்புறம் லாபமா நிற்பது எப்படி? என்று யோசிக்க கூடாது. நட்ட மரமாக என்பது திரிந்திருக்கலாம்.

திட்டுதல் ,ஏசுதல் இவற்றைக் குறிக்கும் சொல் திருநெல்வேலியில் வசவு. சீக்கிரம் போகலைன்னா எங்க அம்மா வைவா என்று சொல்வார்கள்.


இரப்பாளி

கோபத்தில் ஒருவனை இந்த வார்த்தை சொல்லித் திட்டுவார்கள். ரொம்ப நாளாக எனக்கு அர்த்தம் தெரியவில்லை. இப்போது புரிகிறது .இரவு என்றால் பிச்சை எடுத்தல். பிச்சை எடுத்துப் பிழைக்கும் தொழிலை செய்கிறாயா?. அதாவது பிச்சைக்காரப்பயலே என்று திட்டுவதற்காக ,இரப்பாளி எனும் சொல் பயன்படுகிறது.

ஏராளமான கூட்டம் இது ஒரு மாவட்டத்தின் பழக்கம். நிறைய கூட்டம் இது சில இடங்களில். கூட்டம் அதிகமாக இருந்தால் அதைப்பார்த்து கொஞ்சம் கூட்டமா கொள்ளக் கூட்டம் என்பார்கள் மதுரையில். நெல்லை மாவட்டத்தில் எக்கச்சக்கமான கூட்டம். ஏக்கம் என்பதும் சக்கம் என்பதும் மிகப் பெரிய எண்களை குறிப்பிடுகிறது.

பாக்கி, மீதி, மீதி சில்லறை, சொச்சம் என்பதையெல்லாம் விட்டுவிட்டு நெல்லை மாவட்டத்தில் மிச்சம் என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்துவார்கள்.
நண்பர்கள் இருவர் சேர்ந்து பேசினாலும், தோழிகள் சேர்ந்து பேசினாலோ பக்கத்து வீட்டுப் பெண்கள் ஒன்றாக அமர்ந்து பேசினா அதன் பெயர் நெல்லை மாவட்டத்தில் பழக்கம் விடுதல்.

உழைக்காமல் சும்மா இருந்து தின்பவனை மாப்பிள்ளை சோறு தின்பவன், வகுப்பறையில் கடைசி இருக்கை பெயர் மாப்பிள்ளை பெஞ்ச். தகப்பனுக்கு நெருங்கிய உறவினர்களை சொக்காரன் என்று சொல்வார்கள். விருந்தினரை விருந்தாடி என்று சொல்வதுண்டு.
சிறிய டீக்கடைகளில் கை கழுவும் இடம் எங்கே இருக்கிறது? என்று கேட்டா பிறத்தால போங்க என்று சொல்வார்கள். இச்சொல் பின்பக்கம் என்பது குறிக்கிறது.


அலத்து

‘பேசுதல் ‘எனும் பொருள்பட தமிழில் ஏராளமான சொற்கள் உண்டு. சொல்லுதல் ,சாற்றுதல், விளம்புதல் ,கூறுதல் ,விளம்புதல் ,மொழிதல்.. இந்தச் சொற்களுக்கு இடையே சிறிய சிறிய பொருள் வேறுபாடு இருக்கலாம்.
நெல்லை மாவட்டத்தில் ஒரு சொல் உண்டு. அலத்துதல். இச்சொல் ‘அலற்றுதல் ‘என்னும் சொல்லில் இருந்து வந்தது. அலற்றுதல் என்பது உறவினர்கள் ஒருவரோடு ஒருவர் பேசி மகிழ்வது. “நீ இப்போது உன் தம்பியோடு அலத்துவது இல்லையோ?”என்று கேட்பார்கள்.
-முத்துமணி

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.