July 31, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லை மாவட்ட வழக்குச் சொற்கள்

1 min read
Nellai District Special Terms

24-7-2020

நெல்லை மாவட்ட வழக்குச் சொற்கள் பலவற்றை இதற்கு முன்பு கண்டோம். அதன் தொடர்ச்சி இதோ வழங்குகிறார் முத்துமணி.

சிறுபயறு

சிறுபயறு பச்சை வண்ணத்தில் இருக்கும் பயறு. கேரளாவில் இதை உண்பவர்கள் அதிகம். ஏராளமான சத்துக்கள் நிறைந்த இது பச்சை வண்ணத்தில் இருப்பதால்,பச்சைப் பயறு என்று பல இடங்களில் அழைக்கப்படுகிறது.
அதன் வடிவம் வண்ணம் கருத்தில் கொள்ளப்பட்டு பல்வேறு இடங்களில் பாசிப்பயறு என்று வழங்கப்படுகிறது.
ஆனால் நெல்லை மாவட்டத்தில் மட்டும் இதனைச் சிறுபயறு என்னும் பெயரால் அழைக்கின்றனர். சிறு பயறு சுண்டல், சிறுபருப்புச் சாம்பார். சிறுபயற்றில் இருந்து கிடைப்பதால் சிறுபருப்பு என்றே அழைக்கப் படும்.மற்ற இடங்களில்இதைப் பாசிப்பருப்பு என்று சொல்வது வழக்கம்.

அண்டிமாம்பழம்

மாம்பழம் தெரியும் அண்டி மாம்பழம் தெரியுமா?
முந்திரிப்பருப்பு முந்திரிக் கொட்டையில் இருந்து கிடைக்கிறது. எல்லாப் பழங்களிலும் அவற்றின் விதை உள்ளே இருக்கும். ஆனால் முந்திரிப் பழத்தில் மட்டும் அதன் விதை பாலத்தின் வெளிப்புறம் இருக்கும். இதை வைத்து முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக்கொண்டு என்று சொல்வார்கள். இது வேறு விஷயம். ஆனால் முந்திரிப் பழத்தைத் தான் நெல்லை மாவட்டத்தில் அண்டி மாம்பழம் என்னும் பெயரால் குறிப்பிடுகின்றனர், என்பது தெரியுமா?

இதில் வேடிக்கை என்னவென்றால் நெல்லைப் பகுதியில் திராட்சைப் பழத்தை முந்திரிப் பழம் என்று அழைப்பார்கள்.

அன்னப்பால்

ஆட்டுப்பால், பசும்பால் எல்லாம் தெரியும் அன்னப்பால்?
அன்னப் பால் என்றால் என்ன? சோறு வெந்த பின் அதில் இருக்கும் நீரை வடிப்பார்கள் அல்லவா? அப்படி வடித்த நீரை வடி நீர் என்றோ, கழுநீர் என்றோ சொல்வார்கள். சில இடங்களில் அதையே கஞ்சி என்று சொல்வதும் உண்டு.
ஆனால் நெல்லை மாவட்டத்தில் மிக அழகான பெயர் அதற்கு அன்னப்பால் என்று. சோற்றில் இருந்து வந்த பால் சோற்றுப் பால் அதாவது அன்னப்பால். சரிதானே.

கம்புக்கூடு

கம்புக்கூடு… அது என்ன கூடு?
குருவிக்கூடு, காக்கைக் கூடு போல, கம்புக்கூடு என்பது மரங்களின் மீது இருக்குமோ? இல்லை. அக்காலத்தில் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு போவோர் கையில் ஒரு நீளமான கம்பை வைத்திருப்பார்கள். தேவைப்பட்டால் அதைப் பயன்படுத்திவிட்டு. நடந்து செல்லும்போது அதை எங்கே வைப்பது?. இடது கையைத் தூக்கி அந்தக் குச்சியை அக்குளுக்குள் வைத்துக்கொள்வார்கள். எனவே அக்குள் தான் கம்புக்கூடு என்று அழைக்கப்படுகிறது. இன்று வேறு ஒரு சில இடங்களில் கம்பு என்னும் என்பதை விட்டுவிட்டு வெறுமனே கூடு என்று சொல்வதும் உண்டு. ஆனால் கம்பு க்கூடு என்று நெல்லை மாவட்டத்தில் மட்டுமே சொல்வார்கள்.

கோலிக்காய்

கோலிக்காய் எந்த மரத்தில் கிடைக்கும்?
கிராமத்து விளையாட்டுகள் எல்லாம் அழிந்து ஒழிந்து விட்டன. பப்ஜி போன்ற விளையாட்டுகள் தான் ஓடாமல் உட்கார்ந்து விளையாட முடியும். ஓடாமல் விளையாடு பாப்பா. நீ உட்கார்ந்து விளையாடு பாப்பா. கூடாமல் விளையாடு பாப்பா ஒரு குழந்தையைச் சேர்க்காதே பாப்பா. என்று ஆகிவிட்ட நிலையில், கோலிக் குண்டு விளையாடுவது சாத்தியமில்லை.
ஆனால் கோலிக் குண்டு என்ற விளையாட் டாவது குறைந்தபட்சம் நமக்கு தெரியும். கண்ணாடியாலான ஒரு குண்டு கோலிக் குண்டு. அதஅக் கையில் வைத்து, தெரித்து விளையாடுவர். இது தமிழரின் பாரம்பரிய விளையாட்டு. காளமேகப்புலவர் கூட தன்னுடைய ஒரு பாடலில் இந்த விளையாட்டைப் பற்றி எழுதியிருக்கிறார்.
அவர் காலத்தில் கோலி விளையாட பாக்குக் காய் பயன்பட்டிருக்கிறது. இதை அவரது பாடலில் வரும்’ பாக்குத் தெறித்து விளையாடும் பாலகர்க்கு’ என்னும் வரி தெரிவிக்கிறது.
அதன்பிறகு புன்னை மரத்தின் காயை கோழி விளையாட ப் பயன்படுத்தினர். இன்று வரை நெல்லை மாவட்டத்தில் கோலிகுண்டு என்று சொல்வதில்லை அது கண்ணாடிக்கு மாறிய பிறகும் கோலிக்காய் என்றே அழைக்கப்படுகிறது. கோலிக்காய் விளையாட வருகிறாயா? என்று தான் அழைப்பார்கள். அந்தக் காலத்தில் இயற்கையாக கிடைத்த காய்களை வைத்து விளையாடியதால் அப்பெயர் நிலைத்துவிட்டது.

கொடுக்காப்புளி

கொடுக்காப்புளி- இது என்ன புளி?
குழம்புக்குப் பயன்படுத்தும் புளி தெரியும். புளிய மரத்தில் இருந்து கிடைக்கும் கனி. அதனுடைய காயைப் புளியங்காய் என்பர். யாருக்காவது கொடுக்காப்புளி தெரியுமா? பிற இடங்களில் இன்று கிலோ நூறு ரூபாய்க்கு மேல் விற்கப்படும் கொடிக்காய் … அதன் பெயர் நெல்லை மாவட்டத்தில் கொடுக்காப்புளி… நல்ல பெயர் காரணம் .தோற்றத்தில் காயாக இருக்கும்போது புளியங்காய் போலவே இருக்கும். அதைவிட மேலும் அதிகமாகச் சுருண்டு இருப்பதால் இப்பெயர் ஏற்பட்டிருக்குமா?

வெண்டங்காய்

வெண்டைக்காய் என்று இலக்கணச் சுத்தமாக அழைக்கப்படும் காயைச் சில இடங்களில் வெண்டிக்காய் என்கிறார்கள். ஆனால் நெல்லை மாவட்டத்தில் அதை, வெண்டங்காய் என்று சற்று மென்மையாக அழைப்பர். மெலித்தல் விகாரமோ?

சீனி அவரை

அது என்ன சீனி அவரைக்காய்?
கொத்தாகக் காய்ப்பதால் பிற இடங்களில் கொத்தவரைக்காய் என்றோ, சென்னை போன்ற இடங்களில் கொத்தவரங்கா என்று அழைக்கப்படும் காயை நெல்லை மாவட்டத்தில் சீனி அவரைக்காய் என்று அன்போடு அழைக்கிறார்கள்

குரங்கு

குரங்கு கூட்டமாக அலையும் போது அதில் மிகப் பெரிதாக உருவம் கொண்ட குரங்குக்கு பெயர் நெல்லை மாவட்டத்தில் தாட்டான் குரங்கு.. ஒருவேளை உறவுப் பெயராக இருக்குமோ? தாத்தன் என்பது தாட்டன் என்று மாறி இருக்கும்.

பிள்ளையை அமத்து..

பச்சைக் குழந்தை அழுது கொண்டிருக்கிறது. குழந்தைக்குப் பசி எடுக்கிறது. அதன் தாய் வேறு வேலையாக இருக்கிறாள். குழந்தை அழுவதைக் கவனிக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்போது அங்கிருக்கும் பெரியவர்கள் புள்ளை அழுகிறது பிள்ளையை அமைத்து. என்று கூறுவார்கள். பிள்ளையை எடுத்துப் பாலூட்டு அல்லது பால் கொடு என்பது பொருள். இடக்கரடக்கல் ஆக இருக்குமோ?

-முத்துமணி, எம்.ஏ, எம்.பில்.,

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *