நெத்தியடி, பிரவாகம் – முத்துமணி கதைகள்
1 min read
Nethiyadi and Piravagam- Short stories By Muthumani
நெத்தியடி
அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாட்டு டிவியில் ஓடிக்கிட்டு இருக்கு. பண்டரிபாயைத் தூக்கிச் சுமக்குறார் சூப்பர் ஸ்டார். தாய்ப்பாசம் சொட்டும் அந்தக் காட்சியைக் கண் கொட்டாம, கால் நீட்டிகிட்டுப் பார்த்தகிட்டுருக்கா எங்கம்மா.
கல்யாணமாகி ரெண்டு நாள்தான் ஆகுது எனக்கும் ஜானகிக்கும். விருந்துக்கு வந்த சொந்தபந்தம் எல்லாம் ஊருக்குப் போயாச்சு. அவங்க அப்பா அம்மா கூட ஊருக்கு போயாச்சு. நாங்க மூணு பேரு தான். இன்னும் அவ உள்ள ஏதோ வேலையா இருக்கா. பொதுவா ஆம்பளைக நிம்மதி இல்லாம அலைவதுக்குக் காரணம், மாமியார் மருமகள் சண்டை தானே. புதுசா பொண்டாட்டி வந்ததும், பெத்தத் தாய மறந்துட்டு பொண்டாட்டிப் பேச்சை மட்டும் கேட்டு நடந்தாலே பிரச்சனை தானே. நிறைய முட்டாப் பயலுக இந்த விவரம் தெரியாம சந்தோஷத்தைத் தொலச்சிட்டு அலையுறானுக. எங்க அப்பா இருக்கும் போது அடிக்கடி சொல்லுவாரு, “எந்த காலத்துலயும் அம்மா பேச்சைக் கேட்டு நடடா”.
அதனால அவகிட்ட, நீ எங்க அம்மையக் கலக்காம எதுவும் நீயாவே செய்யப்படாது. எனக்கு, நீ ஒரு கண்ணு எங்க அம்மா ஒரு கண்ணுன்னு முத ராத்திரிலேயே சொல்லிபுட்டேன்.
“நீ எதையாவது சொல்லி எங்க அம்மா கண்ணு கலங்கினா எனக்குப் பிடிக்காது. அப்புறம் என் மேல வருத்தப்படக்கூடாது”
அவ ஒரு பதிலும் பேசல. ஒரு மாதிரியா பார்த்தா அம்புட்டுத்தான்.
குளிச்சிட்டு ,தலையில ஈரத் துண்டைக் கட்டிக்கிட்டு, கமகமன்னு மணக்க மணக்க வந்தா.
” ஏங்க காலையில டிபனுக்கு என்ன வேணும்? இட்லி அவிக்கவா? தோசை ஊத்தவா?” கேட்டா.
தோசை சுடுன்னு வாய் வரைக்கும் வந்தது. மூளைக்குள்ள ஒரு மின்னல். உடனே , “எங்க அம்மையக் கேளு. அவ சொல்றத செய்” ன்னு சொல்லிட்டேன்”.
“தோசை ” என்றாள் எங்க அம்மா.
ஜானகி என்ன ஒரு மாதிரி பார்த்துட்டு உள்ளே போனா.
“வெளியே கிளம்பினேன்.
“இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டனோ சிக்கனோ மதியத்துக்கு வைக்கலாமா?”.
“எங்க அம்மையக் கேளு.”
“மட்டன் வாங்கிட்டு வாடா” சொன்னது அம்மா.
பதினோரு மணிக்கு அரை கிலோ மட்டன் வாங்கிட்டு வந்தேன்.
“அத்தான் மட்டன் வாங்கிட்டு வந்திருக்கியளே குழம்பு வைக்கவா? பிரியாணி செய்யவா? உங்களுக்கு எது பிடிக்கும்?”
என் ரெடிமேடு ஆன்சர் “எங்க அம்மையக் கேளு.”
சாயங்காலம் நாலு மணி இருக்கும் தெருவில் பூக்காரி சத்தம்.
“என்னங்க மல்லிகைப்பூ கொஞ்சம் வாங்கட்டுமா”.
“எங்க அம்மையக் கேளு.”
ஆறு மணி ஆச்சு
“என்னங்க பக்கத்துலதானே மாரியம்மன் கோயில் போயிட்டு வருவோமா ?” என்றாள்.
“எங்க அம்மைய கேளு “என்றேன்
ராத்திரி ஏழு மணி
“என்னங்க வயிறு பசிக்குது சாப்பிடலாமா?” என்று கேட்டா.
நான் உடனே, “எங்க அம்மையக் கேளு” ன்னு சொன்னேன்.
” அடுத்த வாரம் ஒரு எட்டு போய் எங்க அம்மா அப்பாவை பார்த்துட்டு வரலாமா?”
உடனே, “எங்க அம்மையக் கேளு”
ஒன்பது மணியாச்சி. டிவி பார்த்துக்கிட்டு இருந்தா.
“ஜானகி, ஜானுக்குட்டி, டைமாச்சு டிவியை ஆப் பண்ணிட்டு சீக்கிரமா வாரியா?” பெட்ரூமில் இருந்துகிட்டு கூப்பிட்டேன்.
“இப்போ அவள் வாயிலிருந்து துப்பாக்கி குண்டு போல பாய்ந்து வந்தன அதே சொற்கள்.
” உங்க அம்மையக் கேளுங்க” யாரோ ஓங்கி மண்டையில் நச்சுன்னு சம்மட்டியால் அடித்தது போல இருந்தது எனக்கு….
***************
பிரவாகம்
வண்டியை எடுத்து ஸ்டார்ட் பண்ணி விட்டுட்டு வீட்டுக்குள்ள வந்தேன். அவ இன்னும் பாத்ரூமுக்குள்ளதான் இருக்கா. தண்ணி விழுற சத்தம் கேட்குது. “பத்மா” டைம் ஆகுது. ஆபீஸ்க்குப் போனும் இல்ல. சீக்கிரமா வா.”
“இதோ வந்துட்டேன். நீங்க முதல்ல போட்டு சாப்பிடுங்க. டிபன் ரெடியா இருக்கு. நான் கூட கையில எடுத்துட்டுப் போய்டுவேன். தலைக்கு என்னைத் தேச்சிக் குளிச்சேன். லேட்டாயிடுச்சு.”
நம்ம ஊர்ல பிறந்தவதானே, ஊர்ப் பழக்கம் இல்லாமலா இருக்கும்?. வெள்ளிக்கிழமை ஆச்சே. என்ன ஊருல நமக்கு வடக்குத்தெரு. அவளுக்குத் தெற்குதெரு. நான் மதுரைக்கு வேலைக்கு வந்து ரெண்டு வருஷம் கழிச்சு அவளுக்கும் வேலை கிடச்சுது. அதுவும் அதே ஆஃபீஸ்ல. ஆனாலும் கல்யாணத்துக்கு முன்னாடி ரெண்டு பேரும் பேசினது கூட இல்லை. ஒன்னு ரெண்டு பிரெண்ட்ஸ் கூட சொன்னாங்க. “உங்களுக்கு நல்ல பொருத்தம். ஒரே ஊரு தானே ஏற்பாடு பண்ணுங்க. கல்யாண சாப்பாடு போடுங்க சார்”
எல்லாம் கடவுள் கைங்கரியம். வீட்ல பெரியவங்க பார்த்து இரண்டு பேருக்கும் கல்யாணத்தை முடிச்சிட்டாங்க. சந்தோசம்தான். எந்த கஷ்டமும் இல்ல. வாழ்க்கை பிரச்சினை இல்லாமல் ஓடிக்கிட்டு இருக்கு. இரண்டு பிள்ளைகளும் நல்ல படிக்கிறாங்க. ரெண்டு பேரும் சம்பாதிக்கிறோம். பொருளாதாரப் பிரச்சனை இல்லை. மதுரையில் ஒரு இடம் கூட வாங்கிப் போட்டுருக்கேன். ஆபீஸ்ல லோன் போட்டு வீடு கட்டலாம்.
பாக்கெட்டுக்குள் இருந்த செல்போன் கூப்பிட்டு, என் மலரும் நினைவுகளைத் தடுத்தது. ஃப்ளாஷ் பேக்கில் இருந்து மீண்டேன்.
போனை எடுத்தேன். ஊரிலிருந்து போன். “ஹலோ” என்றேன்.
“என்னது? அப்பாவா? எப்போ? ஐயோ! ” அழுகை முட்டிக்கொண்டு வந்தது. கை கால் நடுக்கம் பதட்டம் எல்லாம் வந்து விட்டது. தலை சுற்றியது.
“பத்மா பத்மா கொஞ்சம் சீக்கிரம் வா” என்று பதற்றமான குரலில் சொல்லியபடி பாத்ரூம் கதவைத் தட்டினேன்.
வெளியே வந்தாள்.
“என்னாச்சுங்க? கண்ணு கலங்கி இருக்கு, மூஞ்சி ஒரு மாதிரியா இருக்கு, என்ன ஆச்சு? சொல்லுங்க. மெதுவா அவள் தோழில் சாய்ந்தேன். அப்படியே அணைச்சிகிட்டா.
“ஊர்ல இருந்து இப்பதான் போன் வந்துச்சி. அப்பா….. “.
“என்ன உங்க அப்பாவுக்கு என்ன?”.
“திடீர்னு ஹார்ட் அட்டாக்.இறந்து போய்ட்டாரண்டி”.
அடக்க முடியாமல் அழுதேன்.
“அய்யய்யோ! என்ன ஆச்சு? நல்லாதானே இருந்தாங்க மாமா? மாமா மாமா” என்று கத்தினாள்.
“போன மாசம் தானே வந்துட்டுப் போனாங்க?. அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சே . கடவுளே” ஒரு நிமிடம் ஆடித்தான் போனாள்.
முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். பிறகு தன்னைத்தானே தேற்றிக் கொண்டு என்னைத் தேற்ற ஆரம்பித்தாள்.
“சரி சரி, பச்ச புள்ள மாதிரி அழுதுகிட்டு?, உடனே கிளம்புற வழிய பாருங்க. ஆபீசுக்கு போன் போடுங்க விவரத்தைச் சொல்லி எனக்கும் சேத்து லீவு சொல்லிருங்க. என்னோட மொபைல் போனை நேத்து மறந்துபோய் ஆபீஸ் டேபிளுக்கு அடியில் வச்சுட்டு வந்துட்டேன்.”
“என்ன… ஒன்னும் பேசாம இருக்கீங்க? மனசத் திடப்படுத்துங்க. நீங்க போய் த்தான் எல்லாம் பார்க்கணும்”.
“புள்ளைங்க ஸ்கூலுக்கு போயிட்டாங்களே ” கம்மிய குரலில் நான் கேட்டேன். “ஆமா அவங்க வழக்கம்போல போயிட்டாங்க. இனிமே ஸ்கூலுக்குப் போய் விவரம் சொல்லி லீவு கேட்டு அவங்களையும் கூட்டிட்டு போறது ரொம்ப கஷ்டம். அவங்க ஸ்கூல்ல ஈஸியா லீவு கொடுக்க மாட்டாங்க. டைம் தான் வேஸ்ட். எக்ஸாம் வேற இருக்கு அடுத்த வாரம். ஸ்கூல் முடிஞ்சு திரும்பி வந்தவுடனே அவங்கள பாத்துக்கோங்கன்னு பக்கத்து வீட்ல சொல்லிட்டு வரேன். அந்த அக்கா நல்லா பாத்துக்கு வாங்க மூணு நாளைக்கு. நாம கிளம்பலாம் வாங்க”.
படபடவென்று ஒரு பை நிறைய துணிமணி என்று எல்லாம் எடுத்து வைத்தாள். எனக்கு பேச்சே வரவில்லை.
ஆறுதலாக என் கைகளைப் பற்றிக் கொண்டாள்.
“டாக்ஸி” என்றேன்.
“டாக்ஸி எல்லாம் ஏற்பாடு செய்ய நேரம் ஆகிவிடும். இருபது நிமிஷத்துக்கு ஒரு பஸ் இருக்கு நம்ம ஊருக்கு. வழக்கமா வருகிற ஆட்டோக்காரருக்கு போன் பண்ணுங்க. அடுத்த வீட்டு அக்கா கிட்ட பேசிட்டு வந்துடறேன்.”
பஸ் ஸ்டாண்ட் வரும்வரை நான் ஒன்றும் பேசவில்லை. அவதான் எனக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டே வந்தாள். உடனே பஸ் கிடைத்துவிட்டது. பஸ்ஸில் ஏறியதும் என்னைத் தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டு “எதையும் நினைக்காமல் அழாம வாங்க. உங்க அப்பாவுக்கு 75 வயசு ஆயிருச்சு இல்ல. கொஞ்ச நாளைக்குக் கஷ்டமா இருக்கும். உங்க அம்மா தான் பாவம். ஒரு ஆம்பளை இப்படி அழலாமா?. என்ன அழுதாலும் போன உயிர் வரவா போகுது?”
“சொல்லப்போனால் மாமாவுக்கு நல்ல சாவுதான் வந்திருக்கின்னு தான் சொல்லுவேன். ஏதாவது நோய் வந்து படுக்கையில் கிடந்து கஷ்டப்படாம யாரையும் கஸ்டப்படுத்தாம ஹார்ட் அட்டாக்கில் போறதுக்கு ஒருவகையில் கொடுத்து வச்சிருக்கணும்”.
என்னால் பதில் பேச முடியலை.
“என்ன நீங்க இப்படி தைரியமில்லாமல் இருக்கீங்க? வாழ்க்கையில இதெல்லாம் வரத்தான் செய்யும். மாமா எல்லாத்தையும் அனுபவிசாச்சி. இரண்டு பேரப் பிள்ளைகளையும் பாத்துட்டாங்க. இதுக்கு மேல அவங்களுக்கு என்ன வேணும்?.”
நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தேன்.என் கண்ணில் பொங்கிக் கொண்டிருந்த கண்ணீரைத் தன் கைகளால் துடைத்தாள்.
“சின்ன வயசுல இருந்து உங்களை எனக்குத் தெரியும். உங்ககிட்ட பிடிச்சது அந்த மன தைரியம் தான். அது இப்ப எங்க போச்சு,? இப்படி பச்ச புள்ள மாதிரி. ஏடிஎம் கார்டை எடுத்து வச்சிருக்கேன். உங்க தம்பி ஊரிலிருந்து வந்துருவாரு இல்ல. அவர் வந்த பிறகு தானே எல்லாம் செய்ய முடியும். சென்னையில் இருந்து வரணும் இல்ல”.
போன் சினு சினுத்தது.
” முதல்ல போன ஆப் பன்னி வைங்க யாராவது போன் பண்ணிக்கிட்டே இருப்பாங்க. ஏற்கனவே உங்களுக்கு தைரியம் பத்தாது.”
அவளே ஆப் பண்ணி பாக்கெட்டுக்குள் போட்டாள்.
“பஸ் 10 நிமிஷம் நிக்கும் டீ டிபன் சாப்பிடுறவங்க சாப்பிடுங்க கண்டக்டர் சொன்னார்”. மோட்டலில் வண்டி நின்றது.
என் முகத்தைத் தொட்டபடி காலையில் சாப்பிடவில்லை இப்ப மணி 11. ஊருக்குப் போனா சூழ்நிலை எப்படி இருக்குமோ?. பசி தாங்க மாட்டீங்க. மெதுவா இறங்கி வாங்க லைட்டா சாப்பிடுங்க.”
மறுக்கமுடியாமல் இறங்கிப் போனேன் அவள் சாப்பிட்டாள் எனக்கு ஏனோ இறங்கவில்லை. கட்டாயப் படுத்தியும் மறுத்துவிட்டு பஸ்ஸில் ஏறி அமர்ந்து விட்டேன்.
“தண்ணியாவது குடிங்க. நீங்க இப்படி இருப்பீங்கன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல்ல. உங்க அப்பா என்ன ஆறு வயதிலேயே போனாரு ? ஊர் உலகத்தில் யாருமே சாக மாட்டாங்களா? வயசாயிருச்சு. விதிவசம் .நாம என்ன செய்ய முடியும் கொஞ்சம் தைரியமா வாங்க.”
எங்க ஊர் பஸ் ஸ்டாண்டில் வந்து பஸ் நின்றது. எனக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. இப்போது ஆறுதல் சொல்லிக்கொண்டே , “எல்லாரும் ஒரு நாள் போகத்தான் வேணும். இறங்குங்க அதோ ஆட்டோ. கண்ண தொடைங்க”
ஆட்டோவில் ஏறியாச்சு. ஆட்டோக்காரன் தெரிந்தவன்தான். அந்த சின்ன ஊரில் எல்லோருக்கும் தெரியுமே.
“சார் வாங்க இப்பதான் வரீங்களா? இப்படி ஆயிருச்சே ? உங்களுக்குத்தகவல் எப்போ வந்தது?” என்று கேட்டான்.
எனக்குப் பேச முடியவில்லை.
“சரிப்பா பேசாம போ” என்றாள்.
” புள்ளைகளைக் கூட்டிட்டு வரலையாம்மா? தாத்தா முகத்த பாக்க வேண்டாமா?” என்று அக்கறையோடு கேட்டான்.
அவள் பதில் ஒன்றும் சொல்லவில்லை. பஸ்ஸ்டாண்டிலிருந்து கிளம்பிய ஆட்டோ மெயின் ரோட்டுக்கு வந்து வடக்குத்தெரு செல்லாமல் தெற்கு த்தெருவை நோக்கிச் சென்றது.
ஆச்சரியத்தோடு, “எதுக்கு இங்க போறீங்க? வடக்கலா போனும்?” கேட்டாள் பத்மா.
இப்போ நான் வாய் திறந்து “இறந்தது எங்கப்பா இல்லம்மா. உங்க அப்பா” என்று சொல்லி முடித்ததும், கூப்பாடு போட்டு ஐயோ! அம்மா! என்று கதறி, புலம்பி சத்தம் போட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு தலையை ஆட்டோவில் மாத்தி மாத்தி முட்டி, எனக்கு ரெண்டு அடி கொடுத்து. “போயிட்டீங்களே அப்பா நான் என்ன செய்யப் போறேன்”. விழுந்தா புரண்டு ஆர்ப்பாட்டம் செய்தா. ஆட்டோ கீழே உருண்டு விட்டது. மூணு பேருக்கும் வசமான அடி.
இத்தனைக்கும் அவங்க அப்பா அதாவது, எங்க மாமனார் எங்க அப்பாவை விட எட்டு வயது மூத்தவர். தெருவுக்குள் ஓடுறா. நான் பின்னாலே போய் அவளைப் பிடித்தேன்
“பிள்ளைகளவேற விட்டுட்டு வந்துட்டேன் தாத்தான்னா அவங்களுக்கு உயிர் ஆச்சே, இதை ஏன் முதலிலேயே சொல்லல?” என்று என் முகத்திலேயே மாறி மாறிஅடிச்சா. என் சட்டைய கிழிச்சிட்டா.
“சாரிமா, இங்க வந்து சொன்னதுக்கே ஆட்டோவை உருட்டிட்ட. பஸ்ல சொல்லியிருந்தா, பஸ்சை அல்லவா உருட்டிருப்ப? அநியாயமா 60 பேர் செத்துருப்பான் “…