May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

பணக்கார சாமியின் பாகுபாடு- ஆன்மிக கதை – கடையம் பாலன்

1 min read


Discrimination of the Tirupathi Balaji – Story By Kadayam Balan

என் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது. திருப்பதி கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தால் உடனே போய்விட முடியாதாம். அந்த பெருமாள் நினைத்தால்தான் நம்மை அங்கு வரவழைப்பாராம். அது உண்மை என்பதை நான் இப்போது கண்கூட கண்டு கொண்டேன்.
நான் ஓரளவு நல்லா வசதியா இருக்கும்போது போதுமான பணமும் கையில் இருக்க பலமுறை திட்டமிட்டும் ஏழுமலையானை தரிசிக்க முடியவில்லை. இன்று வந்ததுதான் ஆச்சரியம். பக்கத்துஊரு தம்பி திடீரென்று அழைத்தான். ஆனால் பணம் ஏதும் இல்லை. அடுத்த வீட்டில் கடன் வாங்கி வந்திருக்கிறேன்.
பாதுகாப்புகாக நான் வாங்கிய பணத்தை அந்த தம்பியிடம் அப்படியே கொடுத்துவிட்டேன்.
“தம்பி நீயே செலவு செய்… கூடக் குறய இருந்தா திருப்பி வந்தபிறகு கணக்கு பார்த்துக்கலாம்.” என்றேன்.
திருப்பதி பஸ்நிலையத்தில் இறங்கியதும் எங்களுக்காக ஒரு பஸ் காத்திருந்தது. அதில் ஏறச் சொன்னான். மலை பாதையில் வளைந்தும் நெளிந்தும் சென்றபோது நான் ஜன்னல் வழியாக இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தேன்.
திருமலை சென்றதும்,.. இருவரும் தங்க ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றான். சிறிதுநேரம் படுத்து தூங்கிவிட்டு உடமைகளை அங்கேயே ஒரு பாதுகாப்பான இடத்தில் பூட்டி வைத்தோம். பின்னர் முடி காணிக்கை செலுத்த இருவரும் சென்றோம். முடியை இறக்கிவிட்டு குளிக்க வேண்டும்.. ஆனால் கடும் குளிர்… என்ன செய்ய என்று நினைத்துக்கொண்டிருந்தபோது…
“அண்ணே அந்த அறையில் குழாய திறங்க வென்னி வரும்” என்றான். ஆனந்தமாக குளித்தேன்…
அதன்பின் தரிசனத்திற்காக வரிசையில் நின்றோம். நின்றோம்.. நின்று கொண்டே இருந்தோம். சுமார் ஒரு மணி நேரமாவது… அந்த் காத்திருப்புக்குப் பிறகுதான் உள்ளே அனுமதித்தார்கள். ஆகா இன்னும் சில நிமிடங்களில் சாமி கும்பிட்டுவிடலாம். ஒரேயரு லட்டு வாங்கிக்கிட்டு உடனே ஊரப்பாத்து கிளம்பணும் என்று மனதுக்குள் மகிழ்ச்சி பொங்கியது.
ஆனால் எங்களை பெரிய ஹாலில் அடைத்து வைத்துவிட்டார்கள். சன்னிதானத்துக்கு இன்னும் போகலையா?
“அண்ணே… இப்போதான் நாம லைன்ல உட்கார்ந்திருக்கோம்.. நாளைக்கு மதியத்துக்குப் பிறகுதான் நமக்கு தரிசனம்ன்னு எழுதிப்போட்டிருக்கு”—
“அடேயப்பா இன்னிக்கு ஊருக்கு போக முடியாதா”- மனதுக்குள் ஒருவித சலிப்பு முளைக்க தோன்றியது.
அங்க இருந்த டிவியில.. ஒரே தெலுங்கு பாட்டு.. ஒண்ணுமே புரியலை. எவ்வளவு நேரம்தான் அந்த தம்பியோட பேசுவது. கடந்த வாரம் கையில இருந்த பணத்தை போட்டு வாங்கின ஃபோனக் கூட புடுங்கி வைச்சிட்டாங்க.. யாருட்டேயும் பேசக்கூட முடியல்ல..
வேளாவேளைக்கு சாப்பாடு& தம்பி வாங்கி கொடுத்தான். காலையிலயும் சாயங்காலமும் பாலு.. வயிறு நிறைஞ்சா போதுமா… நாளைக்கே வேலைக்குப் போனாத்தான இங்க வர்றதுக்காக வாங்கிய கடனை அடைக்க முடியும்.
மறுநாள் காலையிலும் வென்னியில குளிக்க தம்பி ஏற்பாடு செஞ்சி தந்தான்.
ஒருவழியா எங்களை கூண்டில இருந்து திறந்து விட்டாங்க…. அதுக்குப்பிறகும் நீண்ட தூர வரிசைப் பயணம்.
ஏழு மலைய கடக்கிறது கூட ஈசி. இங்கேதான்.. இன்னும் எவ்வளவு தூரம் போகணுமோ குழப்பமான மனநிலை…
சன்னதிக்கிட்ட நெருங்கியாச்சி… அப்போது இடையில் இன்னொரு லைன் வந்தது எங்களோடு இணைந்துவிட்டது.
அவங்க பணம் கொடுத்து நேரடி தரிசனத்திற்கு வந்தவர்கள். அவர்களும் இன்று அதிகாலையில் வந்தவர்கள்தானாம்.
கிட்ட போகும்போது வரிசையின் வேகம் தடைபட்டது. என்னவென்று விசாரித்தபோது..
ஏதோ சிறப்பு பூஜையாம்… ஆயிரக்கணக்கில் பணம் கொடுப்பவர்கள் மட்டும்தான் அதற்கு அனுமதியாம்.. மேலும் அரை மணி நேரம்…
“பெருமாளே என்ன… உன் சன்னதியிலுமா பணக்காரன்& ஏழை என்ற பாடுபாடு. இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் இருக்கும் கோவிலில் எல்லோருக்கும் சம தரிசனம்தானே வேண்டும்.. அந்த காலத்தில் நந்தனாருக்கு அனுமதி மறுத்ததற்கும், இப்போது பணக்காரர்களுக்கு சிறப்பு அனுமதிக்கும் அப்படி ஒண்ணும் வித்தியாசம் இல்லையே…
பணம் இருந்தால் போதும் கொஞ்ச நேரம்கூட காத்திருக்க வேண்டாம், பூரண கும்ப மரியாதை, கணக்கில் அடங்கா லட்டு.. என்னப்பா இது… அதுக்குத்தான் இந்த சாமிய பணக்கார சாமின்னு சொன்னாங்களோ…”
&இப்போது அரசாங்கம் மேல் இருந்த கோபம் சாமி மீதும் வந்தது.
ஒருவழியாக சாமி தரிசனம் கிடைத்தது. ஏகப்பட்ட நகைகளுடன் ராஜ அலங்காரத்தில் காட்சி தந்தார். தரிசித்தேன். பணக்காரர், எழை என பாகுபாடு காட்டும் சாமி என்ற நினைவும் அப்போது வராமல் இல்லை.
கையில் ஒரு பெரிய லட்டு மற்றும் தயிர்சாதம் என பிரசாதங்கள் தந்தார்கள்.வெளியே உண்டியலை பார்த்தேன். ஒரு ரூபாய் நாணயத்தை காணிக்கையாக போட்டேன். வெளியே வந்தபிறகும் சாப்பாடு..
உடமைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு கீழ் திருப்பதிக்குச் செல்ல பஸ் ஏறினோம். கூட்டம் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை..
திருமலையில் சாப்பிட்டது.. இனிமே ராத்திரிக்கூட சாப்பிட முடியுமோ என்னவோ…
“தம்பி எவ்வளவுப்பா செலவாகி இருக்கும். கூட ஆகியிருந்தாலும் நீ போட்டுக்க. ஊர்ல போய் தந்துடறேன்” என்றேன்.
“என்ன அண்ணே.. உங்க பணம் ஊருல இருந்து கீழ திருப்பதிக்கு வந்தது மட்டும்தான். இங்கே எல்லாமே இலவசம்தான். நாம மேல திருப்பதிக்கு போயிட்டு வர்ற பஸ், தங்கின இடம், முடி காணிக்கை, குளிக்க, நேரத்திற்கு நேரம் சாப்பாடு என எதுக்குமே பணம் கிடையாது.”
“அப்படியா…”
கோயிலுக்கு வர்றதுக்காக வாங்கின கடனையும் போனவுடனேயே கொடுத்துடலாம்..
சிறிது நேரம் சிந்தித்தேன்… நாம போட்ட ஒரு ரூபாய் காணிக்கையில… இவ்வளவு வசதியை செய்ய முடியுமா? அரை மணிநேரத்தை ஆக்கிரமித்தாலும் ஆயிரக்கணக்கானோர் இத்தனை வசதிகளை பெற பணக்காரர்கள் தங்களை அறியாமல் உதவி செய்கிறார்களே…
வரும்வழியில் தேவஸ்தானம் சார்பாக கல்வி சாலைகள், அற சேவைகள் செய்வதை கண்டேன்.
நீ பணக்காரர்களிடம் இருந்து பணத்தை பறித்து ஏழைகளுக்கு ஏதோ ஒரு வழியில் கொடுக்கிறாயே… என்னையும் அறியாமல் இரு கைகளையும் குவித்து பெருமாளே என்றேன்.
நான் இப்படி சிந்தித்துக்கொண்டிருக்கும்போதே..
“திருப்பதி வெங்கடாசலபதி கோயில்ல ஊழல் நிறைய நடக்குப்பா..” என்று பக்கத்தில் ஒருவர் பேசிக்கொண்டு வந்தார்.
ஊழல்… எந்த துறையில்தான் நடக்கவில்லை. கோயிலில் ஊழல் செய்தால் அதற்கு வேறு வழியில் தண்டனை கொடுக்க பெருமாள் தயாராகத்தான் இருப்பார் என்று நினைத்துக்கொண்டே மீண்டும் பெருமாளை மனதுக்குள் தரிசித்தேன்.
-கடையம் பாலன்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.