June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

கொரோனா தடுப்பூசி பரிசோதனைகள் நடைபெறுவது எப்படி? எவ்வளவு காலம் பிடிக்கும்?

1 min read
How is coronavirus vaccine testing done? How long will it take?

77-7-2020
கோவிட்-19 எனப்படும் கொரோனா தடுப்பூசி பரிசோதனைகளை இந்தியாவின் பாரத் பயோடெக், ஸைடஸ் கடிலா ஆகிய நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. இதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட 12 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மனிதர்களுக்கு தடுப்பூசி செலுத்திப் பரிசோதிக்கப்பட உள்ளது. இது எவ்வளவு காலத்தில் நிறைவடையும் என்பது தெரியவில்லை
இதுபற்றி மருத்துவ நிபுணர்கள் வெளியிடும் கருத்துக்கள் பின்வருமாறு:-
“தடுப்பூசியின் முதல் கிளினிக்கல் டிரையல் நிறைவடைவதற்கே ஆறு மாதங்களுக்கு மேலாகும். முதல் டிரையல் 100-க்கும் குறைவானவர்களுக்கு செய்யப்படும். ஆரோக்கியமானவர்களுக்கு இந்தத் தடுப்பூசி கொடுத்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான ஆன்டிபாடி உடலில் உருவாகிறதா என்றும், அந்த ஆன்டிபாடியை செல்களின் நினைவில் நிறுத்தப்படுகிறதா என்றும் கண்காணிக்க வேண்டும்.
இது தவிர, தடுப்பூசி செலுத்தியதால் வேறு பிரச்சினை உடலில் ஏற்படுகிறதா என்றும் கண்காணிக்க வேண்டும். அதனால் தடுப்பூசி வழங்கிய பிறகு 14, 28, 104, 194 நாள்களில் அவர்களைக் கண்காணிப்பார்கள். முதல் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தால்தான் இரண்டாம் நிலை கிளினிக்கல் டிரையல் நடத்த முடியும். அதில் சுமார் 1,000 பேரை ஈடுபடுத்துவார்கள். அவர்களில் 500 பேருக்குத் தடுப்பூசி கொடுப்பார்கள், 500 பேருக்கு கொடுக்க மாட்டார்கள். அவர்களில் எத்தனை பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்படுகிறது என்று பார்ப்பார்கள்.
ஆய்வுக்கு உட்படுத்தப்படும் 1,000 பேரும் பொதுமுடக்கம் காரணமாக வீட்டிலேயே இருந்து வைரஸ் வெளிப்பாட்டுக்கு ஆளாகவில்லை என்று வைத்துக்கொள்வோம். அவர்களில் யாருக்குமே நோய்த்தொற்று ஏற்படவில்லை என்றால் ஆய்வை நடத்த முடியாது. அதனால் இரண்டாம்நிலை ஆய்வைப் பொறுத்தவரை எப்போது முடியும் என்று வரையறுக்க முடியாது என்பதால் தோராயமாக ஒன்பது மாதங்கள் ஆய்வு செய்வார்கள். அப்படியென்றால் இரண்டு நிலை ஆய்வுகள் முடிய சுமார் 15 மாதங்கள் ஆகும். கிளினிக்கல் டிரையலின் இரண்டு நிலைகளையும் ஒரே நேரத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தடுப்பூசி கண்டறிவதன் முதல் கொள்கை என்பது மக்களுக்குத் தடுப்பூசி உதவி செய்யாவிட்டாலும், தடுப்பூசி கண்டுபிடிப்பு என்ற பெயரில் உபத்திரவம் செய்யக் கூடாதுஎன்பது தான். குறைந்த எண்ணிக்கையிலுள்ளவர்கள் மத்தியில் நடத்தப்படும் முதல் நிலை ஆய்வே நிறைவடையாமல், அதிக எண்ணிக்கை கொண்டவர்களின் மத்தியில் ஆய்வு நடத்துவது மிகவும் ஆபத்தானது. இது மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிரானது.”
உண்மை நிலை என்ன?
தடுப்பூசி ஆய்வுகள் குறித்த உண்மை நிலை பற்றி மத்திய அரசின் விக்யான் பிரசார் நிறுவனத்தில் பணியாற்றும் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் சொன்ன தகவல்கள் வருமாறு:-
ஐதரபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக், ஆமதாபாத்தைச் சேர்ந்த ஸைடஸ் கடிலா ஆகிய இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளும் மனித சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.
இரண்டு வகையாக தடுப்பூசி ஆய்வு நடைபெறும். கொரோனா வைரசை ஆய்வகத்தில் வளர்த்து, உயிரிழக்க (inactivate) வைப்பார்கள். பார்மல்டிஹைடு (Formaldehyde) என்ற ரசாயனத்தைப் பயன்படுத்தி வைரஸைச் செயலிழக்க வைப்பார்கள். அந்த ரசாயனம் உயிரினத்தை அழித்துவிடும். ஆனால் வைரஸின் பாகங்களை அப்படியே வைத்திருக்கும். செயலிழந்த அந்த வைரஸை உடலுக்குள் செலுத்தும்போது அதற்கு எதிரான ஆன்டிபாடி உருவாகும்.
கொரோனா வைரஸின் மரபணுவில் முட்கள் போன்ற புரதம் ஓர் அங்கமாக இருக்கும். அதை மட்டும் வெட்டி எடுத்து, வேறு மரபணுவுடன் சேர்த்து வட்டவடிவமாக மாற்றிவிடுவார்கள். அந்த மரபணுவை உடலுக்குள் அனுப்பும்போது மனித செல்களுக்குள் முட்கள் போன்ற புரதம் உருவாகும். உடல் அதற்கு எதிரான ஆன்டிபாடியை உருவாக்கும்.
ஒருமுறை ஆன்டிபாடி உடலில் உருவாகிவிட்டால், அது உடலின் செல்களில் குறிப்பிட்ட காலத்துக்கு நினைவாகப் பதிவாகிவிடும். கொரோனா வைரஸ் தாக்கும்போது உடல் ஆன்டிபாடியை உருவாக்கி நோய்த் தொற்றாமல் பாதுகாக்கும்.
இந்த இரண்டு வகையான தடுப்பூசிகள் ஆய்வுகள்தான் நடைபெற்று வருகின்றன. இரண்டுமே கிளினிக்கல் டிரையலுக்குச் செல்கின்றன. இரண்டு ஆய்வுகளின் பரிசோதனைகளும் நிறைவடைந்து ஒப்புதல் கிடைக்க 15 முதல் 18 மாதங்கள் எடுக்கும். அதற்குப் பிறகு தயாரிப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதால் உடனடியாக கொரோனா தடுப்பூசி கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.
இந்திய மக்கள்தொகையில் 10 சதவிகிதத்துக்குத் தயாரிக்க வேண்டும் என்றாலும் குறைந்தது 12 கோடி தடுப்பூசி மருந்துகள் தேவைப்படும். இரண்டு வகையான ஆய்வுகளுமே சிறந்தவைதான். சாதகமான முடிவுகளை எட்டும்பட்சத்தில் நோயின் பிடியிலிருந்து பாதுகாக்க முடியும்.

அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஆய்வு நடத்த வற்புறுத்தல்

இதற்கிடையே, தடுப்பூசி ஆய்வுகளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நடத்த வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வற்புறுத்தியுள்ளார். அவர் கூறியதாவது:-
“கொரோனா வைரசைப் பொறுத்தவரையில் நோய் அரும்பும் காலம் இரண்டு முதல் 14 நாட்கள். சிலருக்கு 28 நாட்கள் வரை கூட ஆகலாம். தடுப்பூசியை கிளினிக்கல் டிரையலுக்காக ஒருவருக்குச் செலுத்தி 28 நாட்களுக்குப் பிறகு அவரை வைரஸ் தொற்றுக்கு உட்படுத்தி, தொற்று உருவாகிறதா என்று கண்டறிய வேண்டும். அதன் பிறகு மீண்டும் 28 நாட்கள் காத்திருக்க வேண்டும்.
அவசர அவசரமாகத் தடுப்பூசியைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நினைப்பது அறிவியலுக்குப் புறம்பானது, மனித குலத்துக்கு எதிரானது. இந்த விஷயத்தில் ஐ.சி.எம்.ஆர் அறிவியல்பூர்வமாகச் செயல்பட வேண்டும். கோவாக்சின் தடுப்பூசி கிளினிக்கல் டிரையலுக்குத் தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
எனவே, தடுப்பூசி ஆய்வுக்கு தனியார் மருத்துவமனைகளைப் பயன்படுத்தாமல், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை போன்ற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *